23 November 2006

ஒடுக்கப்படுகிற மக்களே ஒன்றுபடுங்கள்!

நேற்று இரவு 8 மணிக்கு இந்தியாவின் தலித் மக்களது நிலை பற்றிய ஒரு கலந்துரையாடல் நடந்தது. இந்தியாவிலிருந்து மூன்று தலித் பெண்கள் ஹாலந்து நாட்டின் ஹேக் மாநகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இந்த கலந்துரையாடலில் வந்திருந்தனர். அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது கூட்டத்தில் அனைவரது முகமும் அதிர்ச்சியில் உறைந்திருந்தது.

உலகை அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குள் ஆதிக்கம் செலுத்த துடித்து, "நான் வளர்கிறேனே மம்மி" விளம்பரத்தில் திளைக்கிற இந்தியாவை பற்றி இந்த "தேசவிரோதிகள்" வெளிநாட்டினர் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்க பேசியது என்ன?

"உங்களுக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற இந்தியா 20 சதவிகித மக்களை பற்றியது. அவர்களுடைய வளர்ச்சி, கனவு, திட்டம், மதம், கொள்கை, வாழ்க்கை பற்றியது. இந்த திரைக்கு பின்னால் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை போராட்டம் மறைக்கப்படுகிறது."

"பெண்களுக்கான திட்டங்களும் ஒதுக்கீடுகளும் ஆதிக்க வகுப்பை சார்ந்த பெண்களுக்கே சேர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், மேல்சாதியினரின் கல்வி வளர்ச்சிக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. இது எங்கள் மக்கள் வேலை மற்றும் தலைமை பொறுப்புகளில் வருவதற்கு எதிரான தடை. கிடைக்கிற சில திட்டங்களில் கூட ஆண்களுக்கே கிடைத்து விடுவதால் ஒடுக்கப்பட்ட பெண்கள் இரண்டு விதமான ஒடுக்குமுறையை சந்திக்கிறார்கள். ஒன்று சாதி சார்ந்தது இன்னொன்று ஆணாதிக்கம் சார்ந்தது."

"எங்கள் உடம்பில் பட்ட காற்று கூட மேல்சாதி வீடுகளில் வீசினால் தீட்டாம். இதனாலே ஆண்டாண்டு காலமாக எங்கள் குடிசைப் பகுதிகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்திலேயே தள்ளி இருக்குது..."
- ஜான்சி, ஆந்திரா மாநிலம்.

காற்று பட்டால் கூட தீட்டாக ஒதுக்கி வைக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட பெண்களை வன்புணர்ச்சி செய்கிற வேளைகளில் மேல்சாதி ஆணாதிக்க வர்க்கத்திற்கு "தீட்டு" பற்றிய கவலையில்லை. அவர்களது மதமே அதை தான் அவர்களுக்கு கற்றுத் தருகிறது.

"பெண்களையும், நாயையும் தினமும் அடித்து வளர்க்க வேண்டும்"
- மனு தர்மம்.
சாதியாதிக்கமும், ஆணாதிக்கமும் கலந்த இந்த கொடுமையான மத கோட்பாடுகளை தலையில் தூக்கி வைத்து ஆடும் வரை சாதீய விடுதலை எளிதான செயலல்ல.

"என்னோட பாட்டி பீ அள்ளி அகற்றும் வேலை பாத்தாங்க, என் அம்மாவும் அதை தான் செய்தாங்க, நானும் அதையே செய்திருக்கேன்....இந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு கண்பார்வை, இதயம், ஈரல், தோல் சார்ந்த நோய்கள் அதிகமா வந்து ஆரோக்கியமற்று வாழுறாங்க" - தனது பரம்பரை அடிமையாக்கப்பட்டது பற்றி, உத்தரபிரதேசத்திலிருந்து, மஞ்சு வால்மீகி

நம்மிடையே "இன்னும்" 7 தலைமுறைகளின் பெயர், வரலாறு, பரம்பரை குலப்பெருமை என பெருமிதம் கொள்பவர்களுக்கும் ஒடுக்கபடுகிற மக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி என்பது ஒரு அடக்குமுறையின் வரலாற்றுப் பதிவு.

தகுதியும் திறமையும் பற்றிய வாதங்களால் அடக்குமுறையை ஆதரிப்பது என்பது இன்று அறிவுசீவித்தனமாக வளர்கிறது. பரம்பரை பரம்பரையாக "இழிபிறவிகளாக" நடத்தப்பட்டு வந்தவர்கள் ஒரு தலைமுறை அலல்து இரு தலைமுறை கல்வி, வேலைவாய்ப்பில் குலப்பெருமை பேசும் ஆதிக்கசாதியினருடன் தகுதி, திறமை என்ற அளவுகோலில் போட்டியிட சொல்வது மோசடியான ஆதிக்கமனப்பான்மை. இடஒதுக்கீடு அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்தும் ஒடுக்கப்பட்ட மக்களில் நிலை நம்பிக்கையற்ற, அடையாளம் இல்லாது கல்வி, வேலைவாய்ப்பற்ற நிலையில் இருக்கிறது.

அவர்களின் அடையாளம் ஒடுக்கப்படுகிற சாதியினர் என்பதே! இந்த அடையாளம் ஒரு போராட்ட கருவியாக அமைதல் அவசியம். ஆதிக்கசாதியினரின் சாதித் திமிர் பிடித்த சங்கங்களுக்கும், அடக்கப்படுபவனின் ஒன்று கூடல் அடையாளத்திற்கும் வேறுபாடு அதிகம். வெள்ளையினத்தவரின் அடக்குமுறைக்கு எதிராக கறுப்பின மக்களின் அமைப்புகள் எழுந்ததை யாரும் வரலாற்றில் குறை சொல்லவில்லை. கறுப்பு என்ற இழிவாக நடத்தப்பட்ட ஆயுதம் மறுப்பக்கத்தில் விடுதலைக்கான கூரான சிந்தனையியலை உருவாக்கியது. இப்படியான் அடையாளத்திலிருந்து பிறந்த விடுதலை வேட்கையினால் தான் தென்னாப்பிரிக்காவில் வாழுகிற இந்தியர்கள் கறுப்பின மக்களுடன் ஒரே களத்தில் நிறவெறியை எதிர்த்து நின்றார்கள். ஒடுக்கப்படுகிற மக்கள் ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கிற பங்காளி வேற்றுமைகளை கழைந்து ஆதரவு சக்திகளுடன் இந்தியாவின் சாதீய விடுதலைப் போராட்டத்தில் ஒன்று சேர்வது இன்றைய காலத்தின் அவசியம். இந்த ஆயுதத்தை பறித்து ஆதிக்கத்தை நிலை நாட்டவே பார்ப்பனீய சக்திகள் "நாம் அனைவரும் இந்து" என கூவியழைக்கிறது. ஒடுக்கப்படுகிற மக்களே ஒன்றுபடுங்கள்!

"நமது யுத்தம் செல்வம் சேர்ப்பதற்கானதோ, அதிகாரத்திற்கானதோ அல்ல, இது விடுதலைக்கான யுத்தம், நமது ஆளுமையை மீட்டெடுப்பதற்கான யுத்தமிது." -டாக்டர்.பாபாசாகேப். அம்பேத்கார்.

17 November 2006

பெரியார் எந்த கடவுளை எதிர்த்தார்?

நண்பர்களே!

பெரியார் பற்றி தெரியாமலும், பெரியார் ஆற்றிய சுயமரியாதை பணியின் மீதுள்ள வெறுப்பிலும் பார்ப்பனீயவாதிகள் பெரியார் மீது சேறு வீசுவது வழக்கமானதே. பெரியார் உயிருடன் இருக்கையில், வேத சாஸ்திரங்கள் சொல்லி இருப்பதன் படி மேடைகளில் செருப்பு, கற்கள், மலம் என வீசி குழப்பங்களை உருவாக்கி அவரை பேச விடாது தடுக்கும் முயற்சியை மேற்கொண்டவர்கள் இந்த பார்ப்பனவாதிகள். இவர்களது மூதாதையர் செய்த இந்த வேதக்கொடுமைகளை கண்டு கலங்காது சுயமரியாதையில் நிமிர்ந்து நின்று மனிதனை மனிதனாக நேசிக்க கற்றுத்தந்தவர் தந்தை பெரியார். இன்று இணையத்தளங்களில் பெரியாரை பற்றி தவறான தகவல்களை பரப்ப ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பார்ப்பனீயம் தனது வழக்கமான நடைமுறைகளை கையாழுகிறது. இதுவும் அவர்கள் பெரியாருக்கு செய்யும் பெருந்தொண்டாக கருதலாம். இவர்கள் தவறான தகவல்கள் பரப்புகிற வேளை தானே, நம்மால் உண்மையை அறியவும், பரப்பவும் முடிகிறாது.

பெரியார் கடவுள் எதிர்ப்பாளர் என்ற ஒரு வளையத்தில் அடங்குபவரல்ல. பெரியாரைப் பற்றிய பெரும்பாலான பரப்புரைகள் கடவுளுக்கு எதிரி என்ற ரீதியில் தான் அமைகிறது. இது பெரியாரை முழுமையாக புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடு அல்லது அவரது சுயமரியாதை போராட்டத்தை வளரவிடாது பார்ப்பனீய அடக்குமுறையை வளர்க்கும் முயற்சியாக தான் இருக்க இயலும். பெரியார் எந்த கடவுளுக்கு எதிரி? அவரே பேசுகிறார் கேளுங்கள்...இனி பெரியாரின் குரல்

°°°°°°°°°°°
சில தொழிலாளர் தலைவர்கள் என்பவர்கள் என்மீது குரோதம் கொண்டிருக்கிறார்கள். என்னைப்பற்றி விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். ‘ராமசாமி நாயக்கர் மதத்தில், கடவுளில் பிரவேசிக்காவிட்டால் நான் அவருடன் நேசமாக இருப்பேன். ஆனால், அவர் நாத்திகம் மதத்துவேஷம் பேசுகிறார். ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று உங்கள் தலைவர்களில் சிலர் சொல்லி, உங்களை என்னிடம் அணுகவிடாமல் செய்கிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

எது மதம், எது கடவுள் என்பது இந்த அன்னக் காவடிகளுக்குத் தெரியுமா? நான் எந்த மதத்தை, எந்தக் கடவுளை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகிறேன் என்பது, இந்தத் தற்குறிகளுக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். எந்த ஒரு மதம் ஒரு மனிதனை, ‘பிராமணனாக'வும் ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும் பாட்டாளியாகவும், பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ, அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். ஒழிய வேண்டுமா வேண்டாமா? (ஆம், ஒழிய வேண்டும் என்னும் பேரொலி).

எந்தக் கடவுள் ஒருவனுக்கு நிறையப் பொருள் கொடுத்தும், ஒருவனுக்குப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ உரிமை கொடுத்தும் மற்றொருவனை உழைத்து உழைத்து ஊரானுக்குப் போட்டுவிட்டுச் சோற்றுக்குத் திண்டாடும்படியும், ரத்தத்தை வேர்வையாய்ச் சிந்தி உடலால் உழைத்தவண்ணம் இருந்து கீழ் மகனாய் வாழும்படியும் செய்கிறதோ, அந்தக் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். அந்தக் கடவுள் ஒழிய வேண்டுமா, வேண்டாமா? ஆகவே தோழர்களே! இது சொன்னால் நான் நாத்திகனும், மதத் துவேஷியுமா? ‘ஆம் ஒழிய வேண்டும்' என்று சொன்ன நீங்கள் மதத்துவேஷியா, நாத்திகர்களா?

°°°°°°°°°°°

(சென்னை ‘பி அண்ட் சி மில்' தொழிலாளர்கள் கூட்டத்தில் 30.6.1946 அன்று ஆற்றிய உரை)

நன்றி: கீற்று.காம்

09 November 2006

வர்ணாஸ்ரமமும் சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலும்

முந்தைய காஞ்சி சங்கராச்சாரியார் அருளிய வார்த்தைகளிலிருந்து சில பகுதிகள் இங்கே.

சிவப்பு வண்ண எழுத்துகள் எனது கேள்விகள்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்), வைதிக மதம்

வர்ண தர்மம்
.............................நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ணம் தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள். (அவர்களுக்கு வேற வேலையில்ல இராமசாமியார் வந்து சீர்திருத்தம், சுயமரியாதை அது இதுன்னு சொல்லி இதுவரை கேள்வி கேட்காம இருந்தவாளை எல்லாம் கிளப்பி விட்டுட்டார். இத தானே சொல்லுறேள் சாமி?)

.................மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே ஸாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் வித்தித்திருக்கிறது. அஹிம்ஸை, சத்தியம், தூய்மை, புலனடக்கம் தேவைக்கு அதிகமாக ஒரு துரும்பைக்கூடத் தனக்கென வைத்துக் கொள்ளாமலிருப்பது, தெய்வ பக்தி, மாதா பிதா விடம் விசுவாஸம், சகல ஜீவராசிகளிடத்துலும் சமமான அன்பு, இவை எல்லாம் எல்லாருக்கும் நம் மதத்தில் விதிக்கப்பட்ட ஸாமான்ய தர்மங்கள். (இந்த ஸாமான்ய தர்மத்தை கோட்சே, நரேந்திர மோடி, மத தீவிரவாத இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ் போன்றவை கடைப்பிடிக்க வேண்டாமுங்களா சாமி?) அது தவிர வர்ணம் என்ற பெயரில் சமூகத்தைப் பரம்பரை ரீதியில் வெவ்வேறு தொழில்களாகப் பல பிரிவாகப் பிரித்து சில விசேஷ தர்மங்கள் அவரவருக்கும் விதிக்கப்படிருக்கின்றன.

...............................

யோசித்துப் பார்த்தால், நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்தபிற்பாடுதான், மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது (மக்கள் விழிப்புணர்வு அடைந்து சூட்சுமத்தை புரிந்து கொண்டதன் விளைவு இதுன்னு சொல்ல வறேளா சாமி?).

.................பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் என்னை யார் என்ன செய்துவிடமுடியும் என்று மூச்சைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு உயிர்வாழ்கிறது. இதன் சூக்ஷ்மத்தை நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைத் தெளிவாக வைத்துக் கொண்டு ஆலோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆயிரம் பதினாராயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன. அப்படியாவது, நம் சாஸ்திரங்களை ரக்ஷித்துக் கொண்ப்பதே ஸ்வதர்மம் என்று கொண்டிருந்த பிராம்மணர்கள் பெருமாபான்மையினராக (மெஜாரிட்டியாக) இருந்தார்களா இல்லை. அவர்கள் ஆயுத பலத்தையாவது வைத்துக் கொண்டிருந்தாரா. அதுவும் இல்லை. பிராமணன் பணம் சேர்த்து வைப்பது ரொம்பப் பிற்காலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட விபரீதம்தான். சாஸ்திரப்படி பிராமணன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். இப்படிப் பணம் இல்லாமல், பலமும் இல்லாமல், எண்ணிக்கையிலும் பெரும்பான்மையாக இல்லாமல் இருக்கிறவர்கள் விதித்த சாஸ்திரப் பிரிவினைகளை மற்றவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும். (பிராமணர்கள் தான் வர்ணசாஸ்திரத்தை விதித்தார்கள்னு சொல்லுறேள்) மற்ற அத்தனைப் பேரும் அத்தனை காலமும் ஏமாந்தவர்களாகவா இருந்தார்கள். அப்படி இவர்கள் ஏமாந்து போயிருந்தால்கூட, அவ்வப்போது ஒரு புத்தர், ஒரு ஜீனர் மாதிரி ரொம்பப் பெரியவராக ரொம்பச் செல்வாக்கோடு ஒருத்தர் வந்து இந்த வேதம், யாகம் இதெல்லாம் வேண்டாம். எல்லா ஜனங்களுக்கும் பொதுவான சாமான்ய தர்மங்களை மட்டும் வைத்துக் கொள்வோம். ஸமஸ்கிருதம் வேண்டாம். பொது ஜனங்களின் பிராகிருத பாஷைகளான பாலி முதலியவைகளிலேயே நம்முடையது புது சாஸ்திரங்களை வைத்துக் கொள்வோம் என்று புதிய வழியைக் காட்டினால்கூட ஜனங்கள் அப்போதைக்கு ஏதோ ஒரு வசீகரத்தால் அந்தப் புது மதங்களில் சேர்ந்து இருக்கிறார்களேயழிய, அப்புறம் அவற்றின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடைசியில் அவை ரொம்பவும் தேய்ந்து போயே போய் விடுகின்றன. பார்த்தால், பழைய வைதிக மதமே செத்தேனாபார் என்று தலையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறது. (கடைசியா சுற்றி சுற்றி வந்து வர்ணாஸ்ரம சாதிமுறையை மாற்றக்கூடாதுன்னு சொல்ல வறேளா சாமி?)

நிஷ்பக்ஷபாதமாக இதை ஆராய்து பார்த்தால் என்ன தெரிகிறது. மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி. மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாராயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத ஒன்று இவற்றில் இருக்கிறது என்று தானே அர்த்தம். அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியோகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரீகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது. நவீன யுகத்தில் சமத்துவம் என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்திற்கு ரொம்பவும் க்ஷிக்ஷமம் விளைவிப்பதாகப் பழைய தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது. (அந்த எதுவோ என்பது என்ன சாமி உறுதியாக சொல்லுங்களேன், யூகமாக சொல்லுறேளே) அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது.

வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையில் மனிதனை பிரித்து வைத்து சாதிகளாக கூறு போட்டு, ஒரு சாதி இன்னொரு சாதியை அடிமைப்படுத்தி, கொலை, பாலியல் பலாத்காரம் என அட்டூழியங்கள் நடத்தி சக மனிதனை கேவலமாக நடத்துவதை சங்கராச்சாரியார் எப்படியெல்லாம் ஆதரிக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

08 November 2006

பூணூலும் காந்தியாரும்...

பூணூல் பற்றி அடிக்கடி பல கேள்விகள் எழுகிறது. பூணூல் உயர்சாதி தன்மையை அடியாளாமாக்குகிறது என பகுத்தறிவுவாதிகள் கருத்து கொண்டுள்ளமை நாம் அறிந்ததே. பூணூலில் என்ன இருக்கிறது இப்படி பெரிதாக பேச என்ன இருக்கிறது?

பூணூல் என்பது என்ன?
யஜ்னோபவிதா, என்றழைக்கப்படுகிற கையால் பின்னப்பட்ட நூல் பெரும்பாலும் பிராமணர்களால் அணியப்படுகிறது. இடது தோளிலிருந்து தொங்கியவாறு மார்பு வழியாக புரண்டு வலது பக்கம் இடை வரை உருள்கிறது. இதை பூணூல் என்றும் அழைக்கப்படுகிறது. பூணூல் அணுயும் பழக்கம் வேதகாலத்தில் சடங்குகள் செய்யும் போது அணிய துவங்கியதாக கருதப்படுகிறது.

8 வயதானதும் பிராமண சிறுவனுக்கு (வது) முதலில் உபன்னயானா சடங்கு நடத்தி 3 நூல்களடங்கிய யஜ்னோபவிதா, (பூணூல்) அணிவிக்கப்படுகிறது. அத்துடன் புனிதமாக கருதப்படுகிற காயத்ரி மந்திரத்தையும் பயிற்றுவிக்கிறார்கள். திருமணமானதும் பொறுப்பை உணர்த்தும் அடையாளமாக 6 நூல்களாக அவை அதிகரிக்கிறது.
இன்றைய இந்து சமுதாயத்தில் பூணூல் பண்டைய கால மரபையும் சாதி அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு யஜ்னோபவிதா அணிவிப்பதில்லை.

பூணூல் பற்றி காந்தியார் சொன்ன கருத்துக்கள்...
"நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு, இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும், பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே நான் பூணூல் போட்டுக் கொள்ளும்படி செய்ய முயன்றார்கள். ஆனால் அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுகொள்ளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் கொள்ளுவது அனாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிஅய் வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. பூணூலைப் பொறுத்தவரையில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால் அதை அணியவேண்டும் என்பதற்குரிய நியாயம் தான் எனக்குத் தென்படவில்லை."

காந்தியாரை மட்டுமல்ல திருவள்ளுவர் பட சர்ச்சையில் பூணூல் வரைந்து திருவள்ளுவர் பிராமணர் என சாதி அடையாளத்தை புகுத்த நடந்த வித்தையும் ஒரு வரலாறு.

பூணூலை கழற்றி எறிகிற சிலர் கூட தங்கள் மனதிற்குள் இருக்கிற பூணூலை அணிந்து கொண்டு தான் காரியங்களில் ஈடுபடுகின்றனர். எப்படியிருப்பினும் பூணூல் இன்றைய காலத்தில் சாதியின் அடையாளமாக வர்ணாஸ்ரமத்தின் சின்னமாக விளங்குகிறது என்பதை மறுக்க இயலுமா?