05 March 2007

கற்பக்கிரகத்தில் தலித் - (குறுங்கதை)

"பெருமாளே..." வலியில் கதறுகிறார் அர்ச்சகர் நாராயணன்.

"செத்த நாழி பொறுத்துக்கோங்கோ. புரோக்கரையும், வக்கீலையும், கிட்னி தாறவாளையும் கூட்டிண்டு கையெழுத்து வாங்க டாக்டர் ரூமுக்கு ரகு போயிட்டான். செத்த நாழியில ஆப்பரேசன் பண்ணிடுறதா சொல்லிட்டா. எல்லாம் செரியாகிடும் பெருமாள் காப்பாத்துவார்" ஆறுதல் சொல்லுகிறார் அர்ச்சகரின் ஆத்துக்காரி சுஜாதா.

அர்ச்சகருக்கு ஆறுதல் சொன்னாலும் மனசு முழுசும் 'ஸ்ரீராம ஜெயம்' சொல்லிக்கொண்டே ஓரக்கண்ணில் வழியும் கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைக்கிறாள் சுஜாதா அம்மாள்.

கண்ணை மூடி தன் புருசன் பூஜை செய்யும் பெருமாள் சந்நிதியை மனதில் நினைத்து மாங்கல்யத்தை கெட்டியாக பிடித்தபடி, "பகவானே ஆத்துக்காரரை காப்பாத்து! பகவான் புண்ணியத்துல எல்லாம் நல்லா முடிஞ்சா பெருமாள் சந்நிதிக்கு அழைச்சிண்டு வறேன்" திருப்பதி வெங்கடாசலபதியை நினைத்து உருக்கமாக வேண்டுகிறாள்.

காஞ்சிபுரம் கோயில்ல பெருமாளுக்கு பூஜை செய்ற அர்ச்சகரை முதலில் சந்தித்த கணங்களை சுஜாதா நினைத்தபடியே பெருமாளை வேண்டிக்கொள்கின்றார்.
-000-
"நான் படுற வேதனை எம் புள்ளைக்கு வரக்கூடாது. வீசுற நாத்தத்தையும் பொறுத்து சாக்கடையில் மூழ்கி அடைப்பெடுக்கும் இந்த முனிசிபாலிட்டி வேலைய பாக்குறதே எம்புள்ள படிச்சு முன்னேறணும்னு தான். அவளுக்கு படிக்க பீஸ் கட்ட கந்து வட்டி கடன் வாங்கினதுல குவிஞ்சு கிடக்கிற கடனை அடைக்க இத விட்டா வேற என்ன வழி? கிட்னிய வித்தாவது மானத்தை காப்பத்தணுமே!" நீட்டிய பத்திரங்களில் கையெழுத்து போடும் முனியன் மனதிற்குள் வேதனையை கொட்டுகிறான்.

தடபுடலாக ஆப்பரேசன் நடக்கிறது. இரண்டு தினங்கள் கழித்து முனியனின் கையில் மாத்திரைகளும், 40,000 ரூபாயும் திணிக்கப்படுகிறது. பேசியபடி 5 லட்சம் ரூபாயும், மாதம் தோறும் 2000 ரூபாயும் வருமென நினைத்த முனியனுக்கு முதல் அதிர்ச்சி!
-0000-
முனியனின் கிட்னியால் குணமடைந்த அர்ச்சகர் கோயிலில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். பழையபடி வேலைக்கு போகமுடியாத முனியன் பேசிய தொகையை வசூலிக்க அர்ச்சகரை தேடி கோயிலில் காத்திருக்கிறான்.

'போ வெளியே! இங்கேயெல்லாம் வரப்படாது. சாமிக்கு தீட்டு! அபச்சாரம்' என்கிறார் அர்ச்சகர்.

'என்ன சாமி எங்கிட்ட வாங்கின கிட்னிக்கு காசு கேக்க தானே வந்தேன். இதில எங்கே தீட்டு? நான் வந்தா அபச்சாரம் ஆனா, என் கிட்னிய ஒங்க ஒடம்புல பொருத்துனா மட்டும் அபச்சாரமில்லையா?' என்றான் முனியன்.

அர்ச்சகரின் முகத்தில் ஆயிரம் கைகள் ஓங்கி அறைவது போல உணர்கிறார். தாழ்த்தப்பட்டவன் நுழைய அனுமதிக்காத வர்ணாஸ்ரம கற்பக்கிரகத்தில் தாழ்த்தப்பட்டவனது கிட்னி நுழைவதை அர்ச்சகராலும் தடுக்க முடியவில்லை.
உயிர்பயத்தின் முன்னர் பெருமாளாவது, தீட்டாவது! வர்ணாஸ்ரமம் தலைகுனியத்தான் வேண்டும்!