Showing posts with label திராவிடம். Show all posts
Showing posts with label திராவிடம். Show all posts

18 February 2008

கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே பெரியார் உரையாடல்

சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்?
பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :

1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது
2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது
3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது
4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது 5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது
6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது
7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது
8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது
9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.

‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?

எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.

நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தால், வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?

ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. 10 வருட காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய வைக்க முடியும்.

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

நல்ல கேள்வி. முதலாவது அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன. அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி, அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.

இரண்டாவது, இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசியல் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சிலர் சொல்லுவார்கள், ‘ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம்' என்று. அதற்கு அங்கு போக வேண்டும் என்பது அவசியமில்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்கிறது!

நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே! கைப்பற்ற முடியாதா?

அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.

எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆக வேண்டும்?

அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம்: ‘சாதியை ஒழிக்க விரும்பாத சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்கவில்லை; தனியே பிரிந்து செல்கிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால், நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம்' என்று. அதற்காகத்தான், ‘சுதந்திரத் தமிழ் நாடு' கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினையல்ல; நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும், உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! நீங்களும் இந்தக் கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்து விடலாம். அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம்.

நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.

(கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே பெரியார் 9.2.1959 அன்று நிகழ்த்திய உரையாடல். )

13 February 2008

ஜாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளுக்கு-பெரியார்

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்' என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி' என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்' என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர்.

அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் "பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்' என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

அந்தப்படிக் கூறப்படும் "பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்' என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டõன், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.

ஆனால், இதே பதினெண் மக்களை "அபிதானகாசம்' என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றது என்னவெனில் ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றபடி, இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர, சாதிக்கும் சாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும் எவ்வித தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டியதாகும்.

இவை ஒருபுறமிருக்க, இந்தச் சாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும் உரிமைகளையும் பார்ப்போமானால், கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒரு காலமும் தங்கள் சாதிப்பேரைச் சொல்லிக் கொள்ள முடியாதபடியும், அதைக் கனவிலும் நினைக்கமுடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.

எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை கடைப்பிடித்துத் தீர வேண்டியதல்லாத ஓர் ஆட்சி, இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால், இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது சாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும் சாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால், பின்னால் நமது நிலை என்னாகும் என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்துக்கள் என்பவர்களுக்குள் சாதிப் பிரிவு இருக்கும்வரை உயர்வு தாழ்வு போகாது என்பது கண்டிப்பாகும்.

இந்தியாவில் இந்துக்களில் 1000க்கு 999 பேருக்குக் குறையாமல் சாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு, ஒவ்வொருவரும் மேல்சாதி ஆகவேண்டுமென்று ஆசைப்படுபவராகவும் தனக்குக் கீழ் பல சாதிகள் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சி உள்ளவர்களாகவுமே இருக்கின்றார்கள். இன்றைய தினம் இந்த நிலையில் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு, வருணாசிரமக் கொள்கையும், சாதி ஆதிக்கமும் உடையவர்களான மக்களிடம் ஆட்சி வந்துவிட்டால், பிறகு எவ்விதத்திலும் சாதிக் கொடுமைகள் ஒழியாது.

(30.11.1930 அன்று பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய‘குடி அரசு' தலையங்கம்)

07 February 2008

சூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா?-பெரியார்

நாங்கள் இவ்விதக் காரியத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் எல்லாம் முதலாவதாக, எங்களுக்குள்ள இழிநிலையும் சூத்திர, பஞ்சமன் என்ற இழிவுப் பட்டம் நீங்க வேண்டும் என்பதற்கேயாகும். ஆனால், இவ்வித இழிவையும் கீழ்சாதிப் பட்டத்தையும் எண்ணி இதை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் நாங்கள்தான். வேறு யாரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், இவ்வித இழி நிலைமை நீங்க வேண்டுமென்பது, தனிப்பட்ட என்னுடைய சுயநலத்திற்கு மட்டுமல்ல; இதனால் எனக்கு மட்டும் இழிவு கிடையாது. சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக்கப்படுகிற திராவிட மக்கள் அத்தனை பேருக்கும் உள்ள இழிவைப் போக்கவேயாகும்.

இன்று மந்திரியாக இருக்கும் சூத்திரன், மந்திரி என்பதால் சூத்திரன் என்ற இழிநிலை போகாது. இன்று மந்திரியாக இருக்கிற பறையர், மந்திரியாக இருப்பதால் அவருடைய பறையர் என்ற பட்டம் போகாது. வேலை முடிந்ததும் ஊருக்குப் போகிற அவர்கள், தங்கள் தங்கள் பறைச்சேரிக்குத்தான் போவார்கள். இன்று சூத்திரர்களும், பஞ்சமர்களும், மந்திரியாகவும், சட்டசபை மெம்பராகவும் (உறுப்பினராகவும்) வந்தார்கள் என்றால், நாங்கள் கூப்பாடு போட்டதால்தான் முடிந்தது. இன்றைக்குப் பறையரும், பள்ளரும் ஓரளவு கல்வி கற்க போதிய வசதியும் சலுகையும் அளிக்கப்பட்டு, அதனால் படிக்கவும் முடிந்தது என்றால், அதுவும் எங்களது முயற்சியினால்தான். எனவே, இவர்கள் யாரைக் கொண்டு முன்னுக்கு வர முடிந்ததோ, அவர்களையே எதிரிகளாக நினைக்கின்றனர். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினால், எங்களை வகுப்புவாதி என்கின்றனர்.

"உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே “நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

நானும் "மகாத்மா' ஆக முடியும். இன்றைக்கே “பார்ப்பனர் எல்லாரும் சாட்ஷாத் பூதேவர்கள்; மதம் அவசியம் வேண்டும், கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அவசியம் பார்ப்பனர்கள் எல்லாக் கோயிலுக்கும் மணியாட்டத்தான் வேண்டும். இல்லையேல் உலகமே நாசமாய்ப் போய்விடும்'' என்று, இன்றைக்கு இக்கூட்டத்திலேயே பேசினால் போதுமே! உடனே தந்திமேல் தந்தி பறக்கும்; இங்குள்ள பார்ப்பனர் எல்லாரும் உடனே திரு. காமராசருக்குத் தந்தி கொடுப்பார்கள்; உடனே அவர் மத்திய அரசாங்கத்துக்கு "இங்கு இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ. ராமசாமி பக்தராகிவிட்டார். அதுவும் என்னுடைய ஆட்சியில் அவர் கொள்கைகள் மாற்றப்பட்டன'' என்று ஒரு வரி அதிகம் கொடுத்தால், உடனே எனக்கு மறுகணமே "மகாத்மா ராமசாமி' என்று கூப்பிட உத்தரவிடுவார்கள்! அங்கிருந்து “ராமசாமிக்கு ஒரு மந்திரி வேலை வேண்டுமா? இரண்டு மந்திரி வேலை வேண்டுமா? என்று கேள்!'' என்று பதில் வரும்.

ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.

ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்'' என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை. தனக்குத் தெரியுமானாலும், அக்கட்சியின் தலைவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், அதுபற்றிக் கூறுவதே கிடையாது. ஏதாவது உதாரணம் சொல்ல லெனின் சொல்லவில்லையே, மார்க்ஸ் சொல்லவில்லையே? என்றால், லெனின் இருந்த நாட்டில் பார்ப்பான் பறையன் இருந்தானா? இவர்கள் இருக்கவுமில்லை; அதைப்பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், இங்கு நேரிலேயே பார்க்கிறோமே பார்ப்பானையும் பறையனையும்! அதுமட்டுமா? சாஸ்திரத்தில் பார்க்கிறோம், சட்டத்தில் பார்க்கிறோம். ஆகவேதான் இங்கு இவைகளை ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எனவேதான், நாங்கள் கோருவது எல்லாம் மக்களுக்குச் சோற்றுக்கும், உத்தியோகத்திற்கும் மாத்திரமின்றி, பரம்பரை இழிவு நீங்க வேண்டும் என்பதேதான். அந்நியன் இந்நாட்டைச் சுரண்டாது, வேறு இங்குள்ள எவராவது ஆட்சி செய்தாலும் போதும். பார்ப்பனர்களின் அட்டூழியம், ஜாதி முறையும் ஒழிந்து, ராமாயணத்தில் ஒரு ஜதை செருப்பு ஆண்டதாகக் கூறப்படுகிறதைப் போல் எங்களை ஒரு ஜதை செருப்பு ஆட்சிபுரிந்தாலும் சரியே. மக்கள் சுயமரியாதை கொண்டவர்களாக, மனிதத் தன்மையுடன் வாழ வேண்டும். மனித ஜாதி என்ற ஒரு ஜாதிதான் இருக்க வேண்டும்.

பெரியார் ஈ.வெ.ரா 13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. "விடுதலை' 20.4.1955

06 February 2008

தமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும் - பெரியார்

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கு எவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி ‘தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, ‘தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?

தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் - மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் எ‎ன்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள் கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடையே புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல.

நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.

இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.
தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. ‏இந்நிலைக்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழ், சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாக தமிழ் நாட்டில் புகத் தொடங்கின.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று, ஒரு நியூட்டன் தோன்றமுடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க, சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடியதுமான எம்மொழியிலிருந்தும் நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது. வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுனர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

'மொழி - எழுத்து' நூலிலிருந்து

05 February 2008

கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக? - பெரியார்

சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்து கொண்டு, "சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்' என்று பழி சுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு "அவைகள் அவசியம் இருக்க வேண்டும்' என்றும் "அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்' என்றும், "சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை' என்றும் "ஓவியக் கலை அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் சொல்லுகின்றார்கள்.

நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் இருப்பதையும் காணலாம்.

எப்படியெனில், இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவைகளில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்றும் சொல்ல வேண்டும்.

சாதாரணமாக மனிதனும் மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும்; 4 கைகளும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு முகங்களும்; சிறிய உருவத்தின் மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் பூவின் மீது ஒரு பெண் நிற்பதும், இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.

சாதாரணமாக, மேல் நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா, உண்மைத் தோற்றமா என்று மருளும்படியாகவும், அவைகளுடைய சாயல் முதலியவைகளிலிருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படியாகவும், அவைகள் பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச் சாதாரண தன்மையில் அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் கொள்ளும்படியாகவும் இருப்பதைக் காணலாம்.

ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங்களையும், புதுமைகளையும் விட்டு விட்டு அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமுமான, மிருகப் பிராயமும் கொண்டதான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து, கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக் கொண்டு, "ஓவியக் கலைக்காக அக்கலையைக் காப்பாற்றுவதற்காக அவைகளிடம் இப்படிச் செய்கின்றோம்' என்றால், இது பகுத்தறிவும் யோக்கியக் குணமும் அடைந்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.

இந்த இடத்தில் நாம் முக்கியமாய்க் குறிப்பிடுவது என்னவென்றால், நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், புத்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான காவியங்களும் ஓவியங்களுமல்லாமல் வேறுவகை ஒன்றில்லாமல் போனதால், அவர்கள் இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும் வஞ்சகத்தையும் சொல்லிக் கொண்டு, இவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆகவே, இம்மாதிரி பாசமும் அநாகரிகமுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்பட வேண்டுமானால், முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை நலத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டியது, பகுத்தறிவையும் நாகரிகத்தையும் விரும்பும் பொதுமக்கள் கடமையேயாகும்.

'குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா 26.4.1931ல் எழுதிய கட்டுரை

04 February 2008

பஜனைப் பாட்டுப் பாடவா தமிழ் இசையை வலியுறுத்தினோம்? - பெரியார்

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டுமென்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை ‘கந்த புராணம்' என்றும், கிருஷ்ணனை ‘கிருட்டிணன்' என்றும், ‘ஹோம் நமஹா என்பதை ‘ஓம் நமோ' என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை ‘சிங்கமுகக் கடவுள்' என்றும், தசகண்ட ராவணன் என்பதை ‘பத்துத்தலை இருட்டுத் தன்மையன்' என்றும் மொழி பெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்று கேட்கிறேன்.

தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை, இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும். இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனதில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனதிற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன.

இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும் நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்; அடுத்ததாகவே சுவை பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலையில்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதைச் சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும், வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய்விடுகிறது.

சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட, நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது, அறிவுடைய மக்களின் தலையாயப் பண்பாகும். அவற்றில் நமக்குப் போதிய கவலை இல்லாததாலேயே நம் நலத்துக்கு மாறான சேதிகளும், உணர்ச்சிகளும் கொண்ட காரியங்கள் வளர்ந்துவர ஏற்பட்டு விட்டதுடன், அவைகளையே பொருள் கொடுத்தும், காலத்தையும் ஊக்கத்தையும் செலவழித்தும் நுகர்ந்து, அறிவும் மானமும் கெட்டு, முற்போக்கும் தடையுற்றுக் கீழ் நிலைக்கு வர வேண்டியவர்களானோம்.

சென்ற மாதம் சென்னையில் நடந்த தமிழ் இசை மாநாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 10 நாட்கள் ஒரு பெரிய திருநாள்போல் நடந்தது; பல பதினாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுப் பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் 4, 5 மணி நேரம் செலவழித்து வந்து அமர்ந்து இருந்துவிட்டுப் போனார்கள். வள்ளல் அண்ணாமலையார் உணர்ச்சியும் ஊக்கமும் ஆழ்ந்த சிந்தனையும், அவர்களது பந்துமித்திரக் குழாங்களும், அறிஞர் சண்முகம் அவர்களது அறிவுரைகளும் ஆற்றல்களும் எல்லையின்றிப் பயன்படுத்தப்பட்டன. எதிரிகளுக்கு ஆணித்தரமான விடை அளித்து அவர்களது வாய்க்கு ஆவிகூட வெளிப்படமுடியாதவாறு ஆப்புகள் சம்மட்டியால் அறையப்பட்டன. வெற்றிக் கொடி ஆகாயத்தை அளாவிப் பறந்தது.

ஆனால், விளைந்த பயன் என்ன? ஏற்பட்ட படிப்பினை என்ன? இம்மாநாடு, பண்டிதர்களைத் தமிழில் பஜனைப் பாட்டுகளைத் தொடுக்க வைத்தது; இசைவாணர்களை (பாட்டுத் தொழில்காரர்களை) வீட்டில் தனிமையில் உட்கார்ந்து பாட்டுகளைப் பாடிப்பாடிப் பழக்கம் செய்து கொள்ளச் செய்தது; இந்தப்படியான தமிழ் பஜனைப் பாட்டுப் பாடத் தெரிந்தவனையே இசை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சியை நமது செல்வவான்கள் பலருக்கு ஊட்டியது; இசை நுகரச் செல்லும் மக்கள் பலருக்கும் (இந்த இசைவாணர்) தமிழில் இசை இசைக்கிறாரா அல்லது வேறு மொழியில் இசைக்கிறாரா - வேறு மொழியில் இசைத்தால் கலவரம் செய்யலாமா என்கின்ற சிந்தனையைச் சிலருக்கு ஊட்டிற்று என்பனவாகிய இவை ஏற்பட்டன என்றே வைத்துக் கொள்ளலாம்.

இவற்றால் சகல உயர்வும், தகுதியும் இருந்து ஒரு சிறு கீழ் மக்கள் குழுவால் இழி மக்களாய்க் கருதப்பட்டு, சுரண்டப்பட்டு, மானமற்று நடைப்பிணங்களாய்க் கிடக்கும் தமிழ் மக்களுக்கு, இந்த நிலை மாற, ஏதாவது ஒரு ஊசி முனை அளவு பயன் ஏற்பட்டதா என்று வணக்கத்தோடு கேட்கிறேன். நலம் பெறுவதற்கு வழி சிறிதும் இல்லாவிட்டாலும், கேட்டிற்காவது சரிவு வழி ஏற்படாமல் போயிற்றா என்று கேட்கிறேன்.

இவ்வளவு பொருளும், ஆற்றலும், மதியும், மற்றதும் செலவழித்ததற்கு நாம் கண்ட பயன் என்ன? நாட்டில் உள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப் பொருள் தந்து வரவழைத்து ஒரு காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் நடராஜ உருவத்தின் முன் தீப தூப நைவேத்தியத்துடன் உட்கார வைத்து, பல ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்துப் பஜனைப் பாட்டுகள் பாடச் செய்வதும், அதன் மூலம் மக்களுக்குப் பக்தி புகட்டுவதுந்தானா? இது யார் செய்யவேண்டிய காரியம்? எதற்கு ஆகச் செய்ய வேண்டிய காரியம்? இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத் தரும்?

(பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7.2.1944 அன்று ஆற்றிய சொற்பொழிவு.)

03 February 2008

சமஸ்கிருதம் தேவையா? - பெரியார்

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் - நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன ‘மேலோர்’ மொழியாக - சமஸ்கிருதத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரோஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு (புரோஃபசருக்கு) 75 ரூபாய்தான் சம்பளம். சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர் ‘புரோஃபசர்’; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்ஸி காலேஜில் புரோஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு.குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கின சம்பளம் சுமார் ரூ. 300க்கு மேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு.பனகல் இராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, ‘நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்’ என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமை வாய்ந்தவர் என்றபோதிலும் கூட அந்தமாதிரி அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலைமையில்தான் இருக்கக் கூடும்.

பிறகு, திரு. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1937-ல் இந்தியைக் கொண்டு வந்ததன் உள்நோக்கமே சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து வருவதைத் தடுத்து அதை உயர்த்தவும், அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்கவுமேயாகும். இதை அவர் வெளிப்படையாகவே பல கூட்டங்களில் பல சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை நாம் இப்பொழுது விட்டால் நமது இனத்திற்கும், தன்மானத்திற்கும், உரிமைக்கும் பேராபத்து என்று கருதித்தான், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திணிப்பைப் பலமாக எதிர்த்துப் போராட்டம் துவக்கி சுமார் 2000 பேர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, நானும் மூன்று ஆண்டு கடின காவல் தண்டனை பெற்றேன்.

இன்று தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, ஒற்றுமை - பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் - தமிழர்கள் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கும் இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா? மற்றும், தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவிகளாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா? தமிழர் யாராய் இருந்தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும் சரிவர உச்சரிக்க முடியாததுமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது உச்சரிப்பதனால் சரியானபடி உச்சரிக்க முடிவதில்லை; மனிதனின் சக்தியை அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர்நாட்டு மொழி, சமஸ்கிருதம்; ஆகவே, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும்.

ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய ‘இலக்கிய காவியங்களையும்’, ‘தெய்வீகத் தன்மையும்’ தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக் கொள்ளப்படுவதனாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும்.

உதாரணமாக, இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதென்றால், அது ‘புராதன மொழி’ என்பதோ அல்லது ‘தெய்வாம்சம் உள்ள மொழி’ என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும்.

1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பி வர இயலும்.
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.

இம்மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

இதற்குரிய யோக்கியதாம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக - ‘தேவ பாஷை’யான சமஸ்கிருதத்துக்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல - பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘இல்லை’ என்ற பதில் கிடைத்துவிட்டது. அது, ‘பேச்சு வழக்கு இல்லாத’ ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனை பேர்களுக்கு சமஸ்கிருதம், ‘தாய்பாஷை’? எத்தனை பேர்கள் பேசுகிறார்கள்?

02 February 2008

இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா? - பெரியார்

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில் தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவது தான் இந்தியின் தத்துவம். எனவே தான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு பேர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.

இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. ‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?

சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு ‘திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?

தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.

(பெரியார் ஈ.வே.ரா அவர்கள் சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு)