17 September 2006

யார் இவர்?

சிவந்தமேனி, தடித்த உடல், பெருத்த தொந்திம் நல்ல உயரம், வெளுத்த தலை மயிர், நரைத்த மீசை, நடுத்தரமான தாடி, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்து மயிரடர்ந்த புருவங்கள், ஆழமான கண்கள், மெதுவான உதடுகள், செயற்கைப் பற்கள், ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி.

பெசண்ட் அம்மையாரின் தலைமயிர், பர்னாட்ஷாவின் தாடி, தாகூரை விட அழகான மூக்கும், இவர்கள் இருவரையும் விட அழகான உருண்டை முகம், ஒரு தனியான முக வெட்டு, என்னமோ ஒரு விதமான கவர்ச்சி.

இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத் துணி, காலில் செருப்பு. முக்கால் கையுடன் ஒரு மாதிரியான வெள்ளைச் சட்டை. அதில் வரிசையான நூல் பொத்தான்கள். பழங்காலத்து முழுக் "கோட்டு"க்கும் இக்காலத்து சட்டைக்கும் நடுவில் ஒரு நூதனமான உடுப்பு, வெளிப் புறத்தில் மூன்று பாக்கட்டுகள். உட்புறத்தில் (பணப்பை வைத்துக் கொள்வதற்காக) கட்டாயம் ஒரு பாக்கட். வெளிப்பைகளில் செய்தித்தாள்கள், சில கடிதங்கள், பொதுக்கூட்டங்களில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள், இரண்டொரு சிறு புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், நாட்குறிப்பு, ஒரு சிறு கத்தி-ஆகிய சகல சாமான்களும் நிறைந்து எப்போதும் உப்பிக்கொண்டே இருக்கும். வெளிப்புறத்துக்கு மேல் ஒரு பவுண்டன் பேனா சொருகப்பட்டிருக்கும். உட்புறப் பையில் ஒரு மணிப்பர்ஸ். அதன் அறையொன்றில் ஒரு கடிகாரம்.

இவ்விதமான சட்டைக்கு மேல் போர்த்தியிருப்பது ஒரு ஐந்து முழப் போர்வை. அநேகமாக ஆரஞ்சு அல்லது காப்பி நிறத்தில். இந்த உடைகள் பெரும்பாலும் அழுக்காகவே இருக்கும். சட்டைப்பைகளின் ஓரங்கள் அடிக்கடி கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும். கையில் எப்போதும் ஒரு மொத்தமான தடி. பிடிக்கும் பக்கம் வளைந்திருக்கும்.

கையில் ஒரு தோற்பெட்டி. அதற்கு பூட்டுமில்லை; சாவியுமில்லை. மிக அந்தரங்கமான சொந்த கடிதங்கள் முதல், பழைய செய்தித்தாள்கள், பட்டையாக நசுக்கப்பட்ட பற்பசை, மிக பழைய பல் ப்ரஷ், மைப்பெட்டி, சோப், கடிதத்தாள், உறைகள் வரையில் எல்லாம் இப்பெட்டிக்குள் தான். சட்டைப் பைகளில் உள்ள குப்பைகள், ஏதாவது ரிக்கார்டுகள் மிகுந்துவிட்டால், அவைகளில் சில இப்பெட்டிக்குள் வந்துவிடும். இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஒரு முறை பெட்டி மூட முடியாமலே மாட்டிக் கொண்டால், இப்பெட்டி காலி செய்யப்படுவதுண்டு.

இம்மாதிரி உருவத்தோடும், உடையோடும், வாலிப நடையோடும் கையிற் பிடித்த தடியுடன் இதோ தெரிகிறாரே, இவர் தான் பெரியார். தமிழரின் தலைவர். ஈரோட்டு இராமசாமியார்.
*****
பெரிய்ஃஃரின் பொறுமை யாவராலும் போற்றக்கூடியது. எவ்வளவு கிளர்ச்சியான நிகழ்ச்சிகளிலும் சரி, எதிர்பாராத சம்பவங்களிலும் சரி பொறுமையை மட்டும் இழக்கமாட்டார். கடுங்சொற்களை பயன்படுத்தமாட்டார்.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு (1929) ஒரு சமயம் மன்னார்குடியில் மிகப்பெரிய ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். பார்ப்பனீயத்தால் மக்களுக்கு நேர்ந்துள்ள கெடுகளைப்பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் Pஏசும் மேடைக்கு கீழே ஒரு 'பிராமணர்' உட்கார்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை எழுதி அவரிடம் கொடுத்துக்கொண்டே இருந்தார். கூட்டத்தில் உள்ள பொதுமக்கள் கடுங்கோபம் கொண்டு அப்பிராமணரைச் சீறிக்கொண்டே இருந்தனர். பெரியார் அவர்களை அடக்கிக்கொண்டே ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறி வந்தார். பல கேள்விகள் ஆகி விட்டன. எழுதிக் கொண்டே இருக்கும் போது பென்சில் முனை ஒடிந்து விட்டது. பேசிக் கொண்டிருந்த பெரியார் அதனைக் கவனித்து விட்டார். தம் பேனாவை எடுத்து, உறையை அதன் பின் புறம் போட்டார். "அய்யா! இதனால் எழுதுங்கள்" என்று கொடுத்து விட்டு பேச்சைத் தொடர்ந்தார். 'பிராமாணர்' வெட்கிப் போய் விட்டார். மேலே எழுத முடியவில்லை.

கூட்டம் முடிந்தது. மோட்டாரில் ஏறி இருந்த பெரியாரிடம் கூட்டத்தை நெருக்கித் தள்ளிக் கொண்டு அப்பிராமணர் வந்தார். "நாயக்கர்வாள்! என்னை மன்னிக்க வேண்டும். எதிரிகள் தங்களைப் பற்றி கூறுவது முற்றும் தவறு. நீங்கள் மகாப்பெரியவர். நமஸ்காரம்" என்று கூறி விட்டுப் போனார்.

மற்றொரு சமயம் பெரியாரும் தோழர் கண்ணப்பரும் மதுரைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். மூன்றாம் வகுப்பு வண்டியில் இவர்களோடு பிரயாணம் செய்த ஒரு பிராமணர் கண்ணப்பரோடு வாதம் புரிந்து கொண்டிருந்தார். கண்ணப்பர் சில கடுமையான சொற்களைச் சொல்லி விட்டார். உடனே, பெரியார் இடைமறித்து, அவரை நோக்கி "ஏன் இவ்வாரு பேசுகிறீர்கள்? பொறுமையாய் பதில் கூறினால் தானே அவருடைய தப்பெண்ணங்களை மாற்றி, நம் பக்கம் அவரை திருப்பலாம்? சந்தேகங்களை விளக்கி, உண்மையை உணர்த்த வேண்டிய இம்மாதிரியான நல்ல சந்தர்ப்பங்களை வீணாக்கலாமா?" என்றார். அதற்கு அப்பிராமணர் பெரியாரைப் பார்த்து, "பெரியவரே, நீங்கள் சொல்வதை இவர் கேட்கமாட்டார். இவர்களெல்லாம் அந்த இராமசாமி நாயக்கன் கூட்டத்தை சேர்ந்தவர்கள்; இப்படித் தான் பேசுவார்கள்" என்றார். இருவருக்கும் உண்டான சிரிப்பை மறைத்துக் கொண்டார்கள். பிறகு கண்ணப்பர் அடுத்த வாண்டியில் ஏறிவிட்டார். பெரியார், வண்டியிலுள்ள கக்கூசுக்குள் சென்றிருந்தார். இந்நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் அந்த அய்யரை நோக்கி, "இவர் யார் தெரியுமா? இவர் தான் இராமசாமி நாயக்கர்; நீங்கள் என்ன அப்படிப் பேசி விட்டீர்களே" என்று சொல்லிவிட்டார். பெரியார் வெளியில் வந்தார். அய்யர் எழுந்து நின்று வணங்கியபடியே, "அய்யா! தங்களை யாரென்று தெரியாமல் பேசிவிட்டேன்; மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களைப் பற்றி அவதூறாக பேசுபவர்கள் அனைவரும் பொய்யர்கள். தங்களுடைய நற்குணமும், பொறுமையும் எவருக்கும் வராது. தாங்கள் அவசியம் ஒரு தடவை என் வீட்டிற்கு வர வேண்டும். நான் காரைக்குடியில் 'இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்'டாக இருக்கிறேன்" என்று கேட்டுக்கொண்டார்.

(சாமி சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் என்ற புத்தகத்திலிருந்து. முதற் பதிப்பு 1939.)

03 September 2006

பெரியாரின் பேச்சு (ஒலி ஒளி வடிவில்)

தந்தை பெரியாரின் பேச்சு! அவரது குரலை கேட்க ஆவலுடையவர்களுக்காக...கூகிளில் பார்க்க http://video.google.com/videoplay?docid=6249903370246926377