17 September 2007

வைக்கம் வீரரா பெரியார்?

தந்தை பெரியாரின் நீண்ட நெடிய சமூகநீதி போராட்ட வாழ்க்கையில் வைக்கம் போராட்டம் (அ) வைக்கம் சத்யாகிரகம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியமைக்காக வைக்கம் வீரர் என்று குறிப்பிடப்பட்டவர் பெரியார். ''வைக்கம் வீரராக'' பெரியாரை ஏற்க ஒருசிலருக்கு மட்டும் முடியாது இருக்கிறது. அவர்கள் யாரென்பதும் அவர்களின் பின்புலம் என்னவென்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வைக்கம் போராட்டத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இந்த போரில் பங்காற்றியவர்கள் மிக அதிகமானோர். அவர்களில் முக்கியமானவர்கள் டி.கே.மாதவன். கே.பி.கேசவ மேனன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், தந்தை பெரியார், ஸ்ரீ நாரயண குரு, குரூர் நீலகண்டன் நம்பூதரி, மகாத்மா காந்தி. வைக்கம் போராட்டம் பலர் பங்கேற்று ஓராண்டுக்கு மேல் நீடித்து, பலநிலைகளை கடந்தே அதன் வெற்றியை அடைந்திருக்கிறது. இப்போராட்டத்தின் வெற்றி எந்த ஒரு தனிமனிதனுக்காக கிடைத்த வெற்றி இல்லை. பலருக்கும் பங்கிருக்கிறது. இந்த வெற்றி பெரியார் ஒருவரது தனிப்பட்ட வெற்றி என்று பெரியாரைப் பின்பற்றும் எவரும் சொல்லமாட்டார்கள். அதே சமயம் பெரியாரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதையும், அவரின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதையும் அனுமதிக்கவும் மாட்டான்.

1924ஆம் ஆண்டு மார்ச் 30 தேதி துவங்கிய இந்த போராட்டம் 1925நவம்பரில் முடிவு பெற்றது. எதற்காக இந்த போராட்டம். கோவில் நுழைவு போராட்டமா? இல்லை. கோவிலைச் சுற்றி இருந்த தெருக்களிலே நுழைய உரிமை மறுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களெனவும், நெருங்கக்கூடாதவர்களென்று சமூதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த ஈழவர், புலையர் மக்களுக்காக சாலைகளை பயன்படுத்த உரிமை வேண்டும் என்று நடத்தப்பட்ட மாபெரும் போராட்டம். இந்த புரிதல் மிக அவசியமானது. ஏனென்றால் கோவில் நுழைவிற்கும், சாலை நுழைவிற்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. கோவில் நுழைவு என்பதில் மதம் சம்பந்தப்பட்டிருக்கிறது. சாலை நுழைவில் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டையும் ஒன்றோடொன்று குழப்பிக்கொள்வது போராட்டத்தின் நியாயங்களை புரிந்து கொள்ள மறுப்பதாகும். இந்த இடத்தில் ஒரு சிறு தகவல்: தமிழகத்தின் முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவரும் தந்தை பெரியாரே.

வைக்கம் சத்யாகிரகம் 30.3.1924 ஆம் அன்று தொடங்கியது. போரட்டத்தின் பகுதியாக கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப் என ஒவ்வொரு முக்கிய பிரமுகர்களும் தொடர்ச்சியாக கைதாக பெரியார் வைக்கம் போராட்டத்தில் இணைந்து கொள்கிறார். சிறையிலிருந்த ஜார்ஜ் ஜோசப் அவர்களின் வேண்டுகோளை அடுத்து பண்ணைபுரத்திலிருந்த பெரியார் உடனடியாக தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தான் திரும்பி வரும் வரை காங்கிரசு தலைவர் பொறுப்பை ராஜாஜி அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கடிதம் எழுதிவிட்டு ஈரோடு திரும்பி, நாகம்மை அம்மையாரிடம் சென்னை செல்வதாக கூறிவிட்டு வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். வைக்கம் சென்ற அவரை திருவிதாங்கூர் அரசாங்கத்தின் சார்பாக தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்கிறார்கள். வேண்டிய சவுகர்யங்களை செய்து தரும்படி அரசர் பணித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.( திருவிதாங்கூர் அரசர் டில்லி செல்லும் பொழுது ஈரோட்டிலுள்ள பெரியாருக்கு சொந்தமான சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து செல்வது வழக்கம்).

பெரியார் வந்து சேர்ந்தவுடன் தொய்வு நிலையிலிருந்த போராட்டத்திற்கு புத்துயிர் கிடைக்கிறது. பல்வேறு இடங்களுக்கு சென்று தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொள்கிறார் பெரியார். பெரியாரின் பேச்சிற்கு பெரும் வரவேற்பும் சத்யாகிரக போராட்டத்திற்கு ஆதரவும் கிடைத்தது. பெரியாரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்டு அருவிக்குத்தி என்னும் இடத்தில் ஒரு மாதம் சிறை வைக்கப்பட்டார். இந்த சமயத்தில் நாகம்மையாரும், இன்னும் சில தோழர்களும் வைக்கம் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள். நாகம்மை அவர்கள் பல இடங்களில் பிரச்சாரம் செய்து போராட்டத்திற்கு ஆதரவும் நிதியும் திரட்டினர். போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் மனைவியர்களுடன் இணைந்து சத்யாகிரகத்தை தொடர்ந்தனர்.19.5.1924 ஆண்டு அவர்கள் பங்கு பெற்ற போராட்டம் நடைபெற்றது. அப்போதிருந்த இந்திய சமூக மனோபாவத்தை கருத்தில் கொள்ளும் போது இவர்களின் போராட்டத்தின் முக்கியதுவம் விளங்கும்.

சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின் பெரியார் மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிராமம் கிராமாக சென்று போராட்டத்திற்கு ஆதரவும் நிதியையும் திரட்டினார். இடையே ராஜாஜி மற்றும் சீனிவாச அய்யாங்கார் சென்னை திரும்ப அழைத்த போதும் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சமயத்தில் திடீரென்று திருவிதாங்கூர் மகாராஜா மரணம் அடைந்து விட மகாராணியார் அரசு பொறுப்பை ஏற்கிறார். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் விடுவிக்கப்படுகிறார்கள். கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தீண்டத்தகாத மக்களை அனுமதிக்கும் மனநிலைக்கு ராணியார் வந்துவிடுகிறார். ஆனால் சனாதானிகள் அதை கடுமையாக எதிர்க்கின்றனர். அதன் பிறகு பல்வேறு தடைகளை கடந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் மக்கள் நுழையும் உரிமை பெற்றனர். அதிலும் ஒரு தெருவில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

* * *

பெரியாரின் வைக்கம் போராட்டமும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஒரு வரலாறு. வைக்கம் வீரர் என்று அவரது சீடர்களால் உயர்த்தி சொல்லப்பட்டார் என்பது அதில் முக்கியமான குற்றச்சாட்டு. சோ.ராமசாமியின் துக்ளக் தொடங்கி ம.வெங்கடேசனின் ''ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'' வரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவை உண்மையான விமர்சனமாக இருந்தால் வரவேற்கலாம். அவை வெறும் காழ்ப்புணர்வு பிரச்சாரங்களாகவே இருப்பதினால் அவை எதிர்க்கப்படுகின்றது, நிராகரிக்கப்படுகின்றது. பெரியாரின் பேச்சினை அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைத்து மேற்கோள் காட்டி, இதுதான் உங்கள் பெரியாரின் யோக்கியதை என்று காட்ட முற்படும் அவரது அறியாமையை எண்ணி வருத்தப்படவே வேண்டி இருக்கிறது. தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறும் அவரின் இந்த விமர்சன புத்தகம் பாரதிய பார்வர்ட் பிளாக் (முருகன் ஜி :-)) சார்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் பின்னணி என்னவென்பதும், எதற்காக ம.வெங்கடேசன் இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இது குறித்து விவாதிக்கும் முன் பல முக்கியமான செய்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வைக்கம் போராட்டத்தின் தொடக்கம், அதில் பங்கு பெற்றவர்களின் பங்கு குறிப்பாக அவர்கள் போராட்டத்தின் எந்த காலப்பகுதியில் பங்கேற்கிறார்கள் என்பதும், அவர்களின் சிந்தனை போக்கு என்னவென்பதையும் தீவிரமான வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உட்படுத்துதல் மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் காந்தியடிகளை மையமாக வைத்து ஏராளமான சர்ச்சைகள் இந்த போரட்டத்தை தொடர்புபடுத்தி இருக்கிறது. சிலரால் மகாத்மாவின் நிலைப்பாடு மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்டிருக்கிறது. சிலரால் பாராட்டவும் பட்டிருக்கிறது. ம.வெங்கடேசன் அவர்களின் விமர்சனமும் மகாத்மாவின் பங்கையும், காங்கிரசின் பங்கையும் மையமாக வைத்து எழுப்பப் பட்டிருக்கிறது. அவரைப் பொறுத்த வரையில் வைக்கம் போராட்டம் என்பது காங்கசின் போராட்டம், போராட்டத்தின் வெற்றி மகாத்மாவினுடையது, பெரியார் அப்போராட்டத்தில் பங்கு பெற்றவரில் ஒருவர் என்ற அளவுதான். இதே விமர்சனத்தைதான் இலக்கியவாதி ஜெயமோகனும் ''நாராயணகுரு'' என்னும் புத்தகத்தில் நாரயணகுருவை பற்றி அறிமுகம் செய்யும் பகுதியிலும் சொல்லியிருக்கிறார்.

வைக்கம் போராட்டத்தில் மிகத் தீவிரமாக செயலாற்றியவர்களுள் முக்கியமானவர் திரு.டி.கே.மாதவன் அவர்கள். இவர் ஸ்ரீ நாரயணகுருவின் மிக நெருக்கமான சீடராவார். எஸ்.என்.டி.பி. யோகம் என்னும் மையத்தின் செயலாளராக பணியாற்றியவர். ஈழவ மக்களின் ஆன்மீகத்தலைவராக விளங்கியவர் திரு.நாரயணகுரு. அவர் வெறும் ஆன்மீகத்தலைவர் மட்டும் அல்ல. சமுதாயத் தலைவரும் ஆவார். ஈழவ மக்கள் சமூக அளவில் வளர்ச்சி பெற கல்வியும், பொருளாதார வளர்ச்சியும் மிக முக்கியமான தேவைகள் என்று வலியுறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் அதை செயலிலும் காட்டிய முக்கியமான ஒரு தலைவர். இன்றைய கேரளாவில் ஈழவ மக்களை தவிர்க்க முடியாத, சமூக அரசியல், பொருளாதார சக்தியாக உருமாற அடித்தளமிட்டவர் ஆவார். வைக்கம் போராட்டத்திற்கான இவரது ஆதரவு அப்போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது உண்மை.

சுதந்திர போராட்ட காலத்தில் மக்களின் நலன்களுக்காக போராடுபவர்கள் ஏதாவது ஒருவகையில் காங்கிரசோடு தொடர்பு கொள்ளும் ஒரு சூழல் நிலவி வந்தது என்பது வரலாறு. காந்தியின் வருகைக்கு பிறகு இது தவிர்க்க முடியாது என்கிற அளவில் இருந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய செய்தியாகும்.

ம.வெங்கடேசன் போன்றோர் முன்வைக்கும் வாதங்களான காந்திக்கும், காங்கிரசிற்கும் வைக்கம் போராட்டத்தில் பங்கு உண்டு என்பதை முற்றிலும் நிராகரிக்க முடியாது. நிராகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. காங்கிரசுக்கும் வைக்கம் போராட்டத்தில் பங்கு உண்டு.

1921ல் திருநெல்வேலியில் காந்தியடிகளை சந்தித்த டி.கே.மாதவன் வைக்கம் போராட்டத்தின் அவசியம் குறித்தும், தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பேசினார். காந்தியடிகளும் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்தார். 1923ல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள பிரதேச காங்கிரஸ் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. கேரள பிரதேச காங்கிரஸின் தலைவராக இருந்த திரு.கே.பி. கேசவமேனன் தலைமையில் இதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இதற்காக வைக்கத்தில் சத்யாகிரக ஆசிரமும் ஏற்படுத்தப்பட்டது.

காந்தி இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தந்தார் என்பது ம.வெங்கடேசனின் வாதம். இதற்கு ஆதரமாக 19.3.1924 காந்தி அவர்கள் கேசவ மேனனுக்கு எழுதிய கடிதத்தை ஆதராமாக காட்டுகிறார்.(ம.வெங்கடேசனின் புத்தகம் பக்கம்162-163). ஆனால் 6.4.1924 ஆண்டு காந்திக்கு கேசவமேனன் ஒரு தந்தி ஒன்றை அனுப்புகிறார். அதன் காரணம் முக்கியமானது. காந்தியடிகள் சத்யாகிரகத்தை நிறுத்த முயற்சி மேற்கொள்கிறார் என்பதை அறிந்து அதை விளக்குவதற்காக அனுப்பப்பட்ட தந்தி. அந்த தந்தி வைக்கம் போராட்ட வரலாறு என்னும் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதன் பிரதியை கீழே தந்திருக்கிறேன்.

கேசவமேனனின் தந்தி.

ம.வெங்கடேசன், போராட்டத்திற்கான காந்தியின் ஆதரவை நிரூபிப்பதற்காக 19.3.1924தேதியிட்ட கடிதத்தை ஆதரமாக காட்டுகிறார். ஆனால் போராட்டத்தை நிறுத்த கோரும் காந்தியின் மனமாற்றத்தை (அ) தடுமாற்றத்தை 6.4.1924 தேதியிட்ட கேசவமேனனின் தந்தி தெரியப்படுத்துகிறது. காந்தி இந்த தந்திக்கு பதிலளித்தாதாக எந்த தகவலும் இல்லை. திட்டமிட்டபடி போராட்டம் தொடர்கிறது. கேசவமேனன் கைதாகிறார். அவரைத் தொடர்ந்து ஜார்ஜ் ஜோசப் அவர்களும் கைதாகிறார். இதன் பிறகே பெரியார் போராட்டத்தில் பங்கேற்கிறார்.

போராட்டம் தீவிரமாக நடைபெற்று சமயத்தில் காந்தி வைக்கத்திற்கு வரவில்லை. ஆனால் நாரயண குரு செப்டெம்பர் 27, 1924 அன்று போராட்ட இடத்திற்கு வந்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

வைக்கம் போராட்டத்தில் நாரயணகுரு அவர்களின் ஈடுபாட்டை ''நாரயண குரு" கே.சீனிவாசன் அவர்களின் நூல் மூலம் அறியலாம். நாரயண குருவிற்கும் அவரது சீடர்களில் ஒருவரான கேசவன் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் மூலம் இதை அறியலாம். ( நாரயணகுரு - பக்கம் 166-167)

''
குரு: சத்யாகிரகம் எப்படி நடக்கிறது?

கேசவன்:வேகமெடுத்து வருகிறது. அனேகமாக கொட்டும் மழையில் அவர்கள் இப்போது
நனைந்து விட்டிருக்க வேண்டும்

குரு: ஏன் அவர்களிடம் குடை இல்லையா?

கேசவன்: காந்திஜி மறுதரப்பினரின் அரசாங்கத்தின்-ஆதரவையும் பரிவையும் பெற வேண்டும் என ஆசைப்படுகிறார். சத்யாகிரகிகளின் தியாகத்தால் அவர்களை நெகிழச்செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். உடலை வருத்தி வரும் தியாகத்தின் மூலம் இறுதி வெற்றி வேண்டும் என்பது அவர் விருப்பம்.

குரு: உடல் துயரினைத் தாங்கும் சக்தியும், அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவமும் வேண்டியதுதான். அதற்காக மழையில் நனைந்து பட்டினி கிடக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஓரிடத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தால், வரும் விளைவுகளை கண்டு அஞ்சாமால் தடையை மீற வேண்டும். அடித்தால் பட்டுக்கொள்ள வேண்டும்.. பதில் தாக்குதல் நடத்த கூடாது. போகும் பாதியில் வேலியிருந்தால் திரும்பி விடக்கூடாது. தாண்டிப்போக வேண்டும். சாலையில் நடந்து செல்வதோடு நின்றுவிடாமல் கோவிலுக்குள்ளும் நுழைய வேண்டும். எல்லோரும் எந்நாளும் அனைத்துக் கோவில்களுக்கும் போய்வரவேண்டும். பிரசாதம் வழங்கப்படுமானால் எடுத்துகொள்ள வேண்டும். கோவிலில் அன்னதானம் வழங்கப்படுமானால் அன்னதானம் சமமாக பிறருடன் உட்கார்ந்து உணவருந்துங்கள். அரசாங்கத்திற்கு உங்கள் செய்கையின் நோக்கம் தெரியட்டும். இதற்காக உயிரை விடவும் தயங்கக்கூடாது. ஒருவன் தீண்டுவதானால் இன்னொருத்தன் பரிசுத்தம் கெடுமானால் அந்த பரிசுத்தம் அழியட்டும். இது என் செய்தி. இதை பத்திரிக்கை செய்தியாக்கி அனைவரிடம் இச்செய்தி சேரும்படி செய்யுங்கள். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்பது மக்களுக்கு தெரியட்டும். ஆனால் வன்முறையும், அடிதடியும் ஒருபோதும் இருக்ககூடாது. வன்முறை அடக்குமுறை ஏவிவிடுதல் கண்டு மனம் தளர வேண்டாம்.

கேசவன்: சத்யாகிரகத்தின் இறுதி இலக்கு ஆலயபிரவேசமாகும். அதனை அடுத்த ஆண்டில் அடையவேண்டும் என்று வைத்திருக்கிறோம்.

குரு: ஏன் இன்னும் ஒருவருடம்? இப்போதே காலம் கடந்துவிடவில்லையா?''


நாரயணகுருவின் இந்த உரையாடலை இங்கே குறிப்பிட்டதற்கு முக்கிய காரணம் உண்டு. ஈழவமக்களின் ஆன்மீகத்தலைவரான நாரயணகுருவின் இந்த பேச்சு வன்முறையை தூண்டுவதாக இருக்கிறது என்றும் சத்யாகிரக விதிகளுக்கு மாறானதாக இருக்கிறது என்றும் காந்தியடிகள் கருதினார்.

மேலும் இந்த போராட்டத்தில் மாற்று மதத்தினரும், மாற்று மாநிலத்தவரும் கலந்து கொள்வதற்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் காந்தியடிகளின் அறிவிப்பிற்கு பிறகு விலகி கொண்டனர். ஜார்ஜ் ஜோசப்பும் தன் கட்டளைப்படி விலகிக்கொண்டார் என்று 1932ல் த யங் இந்தியா இதழில் குறிப்பிட்டார். இதை ஜார்ஜ் ஜோசப் கல்கத்தாவிலிருந்து வந்த Indian Social Reformer'' என்னும் இதழின் வாயிலாக அதை மறுத்தார். சாலை நுழைவு என்பது மதம் சம்பந்த பிரச்சனையில்லை, மனிதனின் உரிமை சம்பந்தமானது என்னும் நிலைப்பாடு கொண்டிருந்தார் ஜார்ஜ் ஜோசப்.

போராட்டத்தின் இறுதி கட்டத்திலே, அரசாங்கம் அனுமதி கொடுக்க முன்வந்த போதுதான், மார்ச் 1925ம் ஆண்டு காந்தியடிகள் வைக்கத்திற்கு வருகை தந்தார். கேரளத்திற்கு வந்த போது நாரயணகுருவை அவர் ஆசிரமத்தில் சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்த மாமரத்தின் இலைகளைச் சுட்டிகாட்டி ஒவ்வொரு இலைகளுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது தானே என்று சொல்ல அதற்கு குரு அதன் சுவை ஒன்றுதானே என்று சொல்லியிருக்கிறார். இலையாக குறிப்பிடப்பட்டது மனிதனை தான் என்பதை அனைவரும் அறிவர்.

போராட்டத்தின் இறுதி தருணத்தில் நம்பூதிரிகளிடம் பேசவும், அவர்களிடம் மனமாற்றம் ஏற்படுத்தவும் காந்தி முயற்சித்தார். அங்கு அவருக்கு கிடைத்த அனுபவம் முக்கியமானது. காந்தியை நேரில் சந்திக்க நம்பூதிரிகள் மறுத்துவிட்டனர். காந்தியை தங்கள் இடத்திற்கு வரச்சொல்லிவிட்டார்கள். இந்த உரையாடல் வைக்கம் போராட்டம் பற்றிய ஆய்வு நூலை எழுதிய டாக்டர் ரவிந்தரனின் நூலின் 166ம் பக்கத்தில் இருக்கிறது. அதன் பிரதியை இங்கு இணைத்திருக்கிறேன்.

காந்தி-இந்தன்துரித்தியல் நம்பூதரி இடையேயான உரையாடல்:

போராட்டத்தில் பெரியார் மற்ற அனைவரையும் போல கலந்து கொண்டார் என்று கூறுபவர்களுக்கு பதிலாக சென்னை அரசின் தலைமை செயலருக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதத்திலேயே விளக்கமாக குறிப்பிடபட்டிருக்கிறது.இதுவும் ஆய்வாளர் ரவிந்தரனின் புத்தகத்திலே இடம் பெறிருக்கிறது.

அதில் பெரியார் போராட்டத்தில் கலந்து கொண்டதின் தாக்கம் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் சில:

''From
C.W.CCotton Esq. C.T.E., I.C.S.
Agent to the Governer General
Madras State

To Chief Secratery to the Government of Madras

------
6. Of the nine leaders who are in the central jail Trivandrum where they are treated with great consideration, five only Trivangoreans. Infact the movement would have collapsed long ago but the support it has received from outside-Travancore though the question of opening this road is purely domestic problem

........
...

But the support the Vaikom sathyagrahis received from Madras, both in money and leadership was very great and impressive. E.V.Ramasamy Naicker's lead gave a new life to the movement. His strong appeal on the eve of his journey to kerala had made deep impression on the mind of tamilnadu.

...."

காங்கிரஸ் கட்சி தான் போராட்டம் நடத்தியது என்று சொல்லும் ம.வெங்கடேசன் அவரின் அளவுகோலின்படியே காங்கிரஸ்காரரான பெரியார் தீவிரமாக உழைத்ததை ஏற்க மறுக்கிறார். காந்தியின் ஆலோசனையின் படியே போராட்ட குழுவில் இணைக்கப்பட்டார் என்று மங்கள முருகேசன் புத்தகத்தை கொண்டு வாதிடும் ம.வெங்கடேசன் பெரியார் போராட்டத்திற்கு வந்த விதத்தை கேலி செய்கிறார். போராட்டத்தில் தீவிரமாக பங்காற்றிய பெரியாரின் உழைப்பு பற்றி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் களத்திற்கு வந்த காந்தியை வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு சொந்தக்காரராக்குகிறார்கள்.

தனது விமர்சனத்தை சாமி.சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் என்னும் நூலினை மேற்கோள் காட்டி இவ்வாறு வெளிப்படுத்துகிறார். (பக்கம் 159)

'' வைக்கம் போராட்டத்திலே 19பேர் திருவிதாங்கூர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுவிட்ட பிறகு சிறையிலிருந்தபடியே யோசித்து தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வே.ராவுக்கு உடனே வரவும் என்று ஒரு கடிதம் எழுதினார்கள்''(தமிழர் தலைவர் பக்கம் 70 - அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் தரும் தகவல்)

''ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?
எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் சேர்ந்து கையெழுத்துப்போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்'' என்று வைக்கத்தில் தீண்டாமையை ஒழித்த தந்தை பெரியார் என்ற தன் புத்தகத்திலே கூறுகிறார் ( வைக்கம் போராட்ட வரலாறு - பக்கம் 15). யார் அழைத்தார்கள் என்பதிலே முரண் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

பெரியாரை இப்போராட்டத்திற்கு அழைத்ததிலே முக்கிய பங்காற்றியவர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள். பெரியாருக்கு கடிதம் எழுதிய அந்த நேரம் போரட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரும் சிறையிலே இருந்தனர். ஜார்ஜ்ஜோசப், கேசவமேனன், குரூர் நீலகண்டன் நம்பூதரி, டி.கே மாதவன் ஆகிய அனைவரும் சிறையிலே இருந்தனர். ( சிறை என்பது ஒரு பெரிய மாளிகையில் வீட்டுக்காவல் வைத்தது போன்றது. குற்றவாளிகளை அடைக்கும் சிறைக்கொட்டாரத்தில் அல்ல).

பெரியார் 1973ல் நடந்த வானொலி பேட்டியிலே இது பற்றி தெரிவித்து இருக்கிறார். ஜார்ஜ் ஜோசப் அவர்கள் பெயரை இதிலே குறிப்பிட்டு இருக்கிறார். பெரியாரின் வானொலி பேச்சை வைத்து ம.வெங்கடேசன் இன்னும் ஒரு திரிப்பைச் செய்து இருக்கிறார். மொத்த பேட்டியிலிருந்து தனக்கு தேவையான வாக்கியத்தை மட்டும் எடுத்து கொண்டு வாதம் புரிகிறார்.

''காந்திதான் இதைச் செய்ய வேண்டாம் என்று சொன்னவர். அவருக்கு இதில் சம்பந்தமே இல்லை''( ம.வெங்கடேசனின் நூல் - பக்கம் 159).

ம.வெங்கடேசன் மறைத்த அடுத்த சிலவரிகள் இதோ!
''காந்திதான் இதைச் செய்ய வேண்டாம் என்று சொன்னவர். அவருக்கு இதில் சம்பந்தமே இல்லை''அரசாங்கம்தான் இதை முடிவு செய்தது. ராஜாஜி காந்திக்கு கடிதம் எழுதினார். காந்தி உடனே புறப்பட்டு வந்தார்.

பெரியாரின் வானொலி பேட்டியின் மொத்தமும் கீழே இணைத்திருக்கிறேன்.

பெரியாரின் வானொலி உரை:
12


3

4.மேற்கண்ட வானொலி பேட்டியிலேயே பெரியாரின் பெருந்தன்மை தெரியவரும். இப்போராட்ட வெற்றியில் தன்னை முதன்மைப்படுத்திகொள்ளாது சத்யாக்கிரகத்தையே முன்னிலைப்படுத்தியவர் அவர். காந்தியின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியார் அவருக்கு பெருமதிப்பு கொடுத்து வந்தார். தனது குடியரசு இதழ்களில் மகாத்மா காந்தி வாழ்க என்று அச்சிட்டவர் பெரியார். .

அவரின் பேச்சு இதோ.

வைக்கம் வெற்றிக் கொண்டாட்டத்தில் பெரியாரின் உரை.


யார் வந்து முட்டுக்கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலையிலும் இல்லை எம் தாடிக்கிழவன். வாசித்த தோழர்களே! பெரியார் வைக்கம் வீரரா என்று உங்கள் சிந்தனை கொண்டும், பகுத்தறிவு கொண்டும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த கட்டுரையை பெரியாரின் பிறந்த தினத்தில் பதிவிடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெரியார் வலைதளத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு தந்த தோழர்.திரு அவர்களுக்கு என் நன்றி.


உதவிய நூல்கள்:
தமிழர் தலைவர் - சாமி சிதம்பரனார்
வைக்கம் போராட்ட வரலாறு -திராவிடர் கழக வெளியீடு
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் - ம.வெங்கடேசன்
நாரயண குரு - கே.சீனிவாசன் தமிழினி பதிப்பகம்

தொடர்புடைய சில சுட்டிகள்:
வைக்கம் - விக்கிபீடியா
A.J.பிலிப் - இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை
நாரயண குரு
நாரயண குரு - சிவகிரி ஆசிரமம்

11 September 2007

வாருங்கள்! தந்தை பெரியார் கூகிள் குழுமத்தில்!!

தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த, சுயமரியாதை கருத்துகளை பரப்புவதற்கும், உரையாடவும் விரும்பும் தோழர்களுக்கான இணையக் கூடலுக்காக "தந்தை பெரியார்" கூகிள் குழுமம் துவங்கியுள்ளோம்.

"தந்தை பெரியார்" குழுமத்தின் இணைப்பு சுட்டி இங்கே http://groups.google.com/group/egroupperiyar/ பெரியார்/பெரியாரியம் பற்றி அறியவும், பகரவும், உரையாடவும் ஆர்வமுள்ள அனைவரும் இணையலாம். தொடர்ந்து ஆக்கப்பூர்வமான விவாதங்களையும், கருத்துக்களையும், மாற்றுக்கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வோம்.

தோழமையுடன்,

முத்துகுமரன், திரு

31 August 2007

அடிமைத்தனத்தை உருவாக்கும் கல்வி முறை - பெரியார்

தற்கால ஆசிரியர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் போசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.

முதலாவது, நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து, வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?

நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்போர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் எந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டிப் போடுகிறான்.

வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திர பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப் பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ. படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது.

ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படிக்காதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம், தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்ராயம்.

எனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளற, கிளற மிகவும் மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மகாநாட்டைப் பொறுத்த வரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப் படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும் கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

24.4.1927இல் போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை.

30 August 2007

பெரியாரின் பேச்சு - ஒலிவடிவில்

தமிழ் மண்ணின் வீதிகளில் மேடையமைத்து சாதாரண மக்களுக்கு பகுத்தறிவு கருத்துக்களை பரப்பிய தந்தைப் பெரியாரின் குரலை கேட்கும் ஆர்வத்தில் தேடியபோது கிடைத்தது ஒரு ஒலித்துண்டு. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் மீட்க மேடைகள் தோறும் பார்ப்பனீயவாதிகளின் புரட்டுக்களை, கட்டுக்கதைகளை, சுயமரியாதைக்கு எதிரான கொடுமைகளை தனக்கே உரிய கேலியும், கிண்டலும், கோபமும் பொங்க மக்களிடம் விளக்கிய பெரியாரின் குரல்.

Get this widget | Share | Track details


சொந்த சொத்துக்களை சுயமரியாதை பகுத்தறிவு பிரச்சாரத்திற்காக செலவிட்ட பெரியார் பொதுவாழ்க்கையில் ஒரு உதாரணம். தமிழகத்தின் ஆளுமைமிக்க தலைவர் பெரியார்.

01 August 2007

பெரியார் ஏன் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்?

1925 நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் தமிழ் மாகாண மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு தலைவராக தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் இருந்தார்கள். அந்த மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை பெரியார் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் 'காங்கிரசால் பார்பனரல்லாதார் நன்மை பெறமுடியாது; காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை' என்று மாநாட்டிலேயே எழுந்து கூறிவிட்டு வெளியேறினார். உடனே அவருடன் ஒரு பெருங்கூட்டம் மாநாட்டை விட்டு வெளியேறியது.


காஞ்சி மாநாட்டின் போது, அங்கேயே பெரியாரின் முயற்சியால் பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அந்த மாநாட்டின் தலைவராக கோவை திரு. T.A.இராமலிங்க செட்டியாரை அழைத்து பேசிய பெரியார் "தேசத்தில் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமேயாகும், இவ்வாறு பிரிவினையில்லையென்று எவ்வளவுதான் மூடிவைத்த போதிலும் காங்கிரசிலுங்கூட இத்தகைய பேதம் உண்டென்பதை யாரும் மறுக்கமுடியாது. பிராமணர், பிராமணரல்லாதார் பிரிவினையில்லையென்பது உடலிலுள்ள புண்ணை மூடிவைத்து அழுகவிடுவதற்கு ஒப்பானதாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து, உடலநலத்தை கெடுக்கும் புண்ணை ஆற்ற முயல்வதே பொதுநோக்குடைய அறிஞர் கடமையாகும்" என்று கூறினார்.


பெரியார் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறியதும், அதற்கான காரணமாக அமைந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானமும் குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்ததல்ல. சிலர் பரப்பும் பொய்யுரை போல தனிப்பட்ட சிலரால் பாதிக்கப்பட்டு வெளியேறிய சாதாரண நிகழ்வுமல்ல. பிராமணர் அல்லாதவர்களின் வகுப்புரிமைக்கும், சமூக உரிமைக்கும் காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயே போராடியவர் தான் பெரியார். இதை அறிய பெரியார் வெளியேறியதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சமூகத்திலும், காங்கிரஸ் இயக்கத்திலும் இருந்து வந்த பார்ப்பனீய ஆதிக்க செயல்களை தெரிந்துகொள்வோம்.
  • சர்.சி.பி. தியாகராயர், டாக்டர் நாயர், சி.நடேச முதலியார், பனகல் அரசர் ஆகியோர் இணைந்து "திராவிடர் சங்கம்" ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் இரண்டு நூல்களை "திராவிடரின் தகுதிகள்", "பார்ப்பனரல்லாதார் கடிதங்கள்" என்ற பெயரில் 1915ல் வெளியிட்டனர். அவர்கள் இணைந்து "தென்னிந்திய மக்கள் உரிமசங்கம்" என்ற பெயரில் அமைப்பு ஒன்றை 1916ல் உருவாக்கினர். காலப்போக்கில் அந்த அமைப்பின் பத்திரிக்கையான 'ஜஸ்டிஸ்' என்ற பெயரில் 'ஜஸ்டிஸ் கட்சி/நீதிக்கட்சி' என அழைக்கப்பட்டது. 1917ல் பிராமணரல்லாதார் மாநாடு சர்.சி.பி. தியாகராயர் தலைமையில் நடந்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அரசாங்கத்திலும், சட்டசமையிலும் நிறைவேற்ற இம்மாநாடு கோரியது. இந்த மாநாட்டு தீர்மானங்கள் சாதி ஆதிக்கத்தை எதிர்த்த முற்போக்கானவை என கருதப்படுகிறது. நீதிக்கட்சி தோன்றிய காலத்தில் பெரியார் போன்றவர்கள் நீதிக்கட்சியில் சேராமல் தடுக்க "சென்னை மாகாண சங்கம்", "தேசீய சங்கம்" என இரண்டு அமைப்புகளை பார்ப்பனீயவாதிகள் உருவாக்கினர். இச்சங்கம் பிராமணரல்லாதவர்கள் பெயரால் நடத்தப்பட்டாலும் இச்சங்கங்கள் பார்ப்பனீயவாதிகளின் கட்டுப்பாட்டில் தான் இயங்கியது. வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை தீர்மானத்தை இந்த இரு சங்கங்களிலும் பெரியார் நிறைவேற்றியதும் இரு சங்கங்களும் கொல்லப்பட்டன.

  • 1920ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் நிறுவப்பட்டன. ஆதிதிராவிட குழந்தைகளை அனுமதிக்காத அரசு உதவி பெற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை. ஆதிதிராவிடர் முதல் பிராமணர்கள் வரையில் அனைவருக்கும் வகுப்புவாரி உரிமை அடிப்படையில் அரசு பள்ளிகளில் இடம் பங்கிடப்பட்டது. இந்து அறநிலைய பாதுகாப்புச்சட்டம் இயற்றப்பட்டு இந்து கோவில்களின் நிலம், உடமைகள் என அனைத்தும் கண்காணிக்கப்பட்டது. இன இழிவை அகற்றும் விதமாக தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டங்கள் அனைத்தும் பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியும், மானமும் பெற்றுத்தர துவங்கியது மட்டுமல்ல கோவில் சொத்துக்கள் சிலரால் மட்டும் களவாடப்படுவதையும் தடுத்து பொதுவானதாக மாற்ற முனைந்தது.

சென்னை மாகாண ஆட்சி பிராமணர் அல்லாதவர்களிடம் இருந்ததால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் பார்ப்பனீயவாதிகளின் ஆதிக்கத்தை தகர்த்துவிடும் என்பதால் பார்ப்பனீயவாதிகள் எதிர்க்க துவங்கினார்கள். 'இந்துமதத்தில் சர்க்கார் தலையிடுகிறது' என கோவில் தர்மகர்த்தாக்களும், மடாதிபதிகளும், எதிர்த்தனர். திரு. S.சீனிவாசய்யங்கார், விஜயராகவாச்சாரியார் போன்ற வழக்கறிஞர்கள் 'மதத்திற்கு ஆபத்து', 'இந்த சட்டம் இயற்ற சென்னை சட்டச்சபைக்கு அதிககரமில்லை' என கூச்சலிட்டனர். காங்கிரஸில் இருந்த பார்ப்பனீயவாதிகளும் இந்த செயல்களை ஆதரித்தனர். இந்த நேரத்தில் பெரியார் வெளியிட்ட அறிக்கையில் "கட்சி வேற்றுமை பாராட்டாமல் அறநிலைய பாதுகாப்புச்சட்டத்தை ஆதரிக்க வேண்டும். இதனால் அறநிலையங்களுக்கு ஆபத்தில்லை. அவைகளின் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்க வேண்டும். மதத்தின் பெயரால் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான் இதனால் ஆபத்து." என்றார்.

  • திருநெல்வேலி, சேரன்மாதேவியில் 'குருகுலம்' என்ற பெயரில் வ.வெ.சுப்பிரமணிய அய்யர் பொதுமக்களிடமிருந்தும், காங்கிரஸிலிருந்தும் பணம் பெற்று நடத்திய பள்ளியில் பிராமணர்களுக்கு தனி உணவு, பிரார்த்தனை வேறு இடம் பிராமணர் அல்லாதவர்களுக்கு வேறு இடம், உணவு, பிரார்த்தனை என நடத்தினார், இதை எதிர்த்தார் பெரியார். திரு.வி.க, டாக்டர்.வரதராஜலு நாயுடு போன்றவர்களும் இணைந்து குருகுலத்தை எதிர்த்தனர். நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. காந்தியார் தலையிட்ட பிறகும் வ.வெ.சு அய்யர் உடன்படவில்லை. பெரியார், திரு.வி.க, டாக்டர் போன்றவர்களது பிரச்சாரத்தால் குருகுலத்திற்கு கொடுக்கப்பட்டுவந்த நன்கொடைகள் நின்றன. வர்ணாஸ்ரம குருகுலம் ஒளிந்தது.
  • இந்த காலத்தில் திருச்சியில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் 'பார்ப்பனர்களுக்கு எதிராக பேசிவருகிறார்' என டாக்டர்.நாயுடு மீது கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெரியார் அதை எதிர்த்து பேசி தோற்கடித்தார். அந்த கூட்டத்திலேயா சி.இராஜகோபாலாச்சாரியார், டி.எஸ்.எஸ்.ராஜன், என்.எஸ்.வரதாச்சாரியார், கே.சந்தானம், டாக்டர்.சாமிநாத சாஸ்திரி ஆகியவர்கள் ராஜினாமா செய்து வெளியேறினார்கள்.
  • 1920ல் திருநெல்வேலியில்ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை தீர்மானத்தை விஷயாலோசனை கமிட்டியில் 6 வாக்குகள் அதிகம் பெற்று நிறைவேற்றினார் பெரியார். மாநாட்டின் தலைவராக இருந்த எஸ்.சீனிவாசய்யங்கார் 'இது பொதுநலாத்திற்கு கேடு' என அனுமதி மறுத்தார். 1921ல் தஞ்சாவூரில் நடந்த மாகாண காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தார் பெரியார். அதற்கு 'சீமான்' இராசகோபாலாச்சாரியார் 'கொள்கையாக வைத்துக்கொள்வோம்; தீர்மான ரூபமாக வேண்டாம்' என எதிர்த்தார். திருப்பூரில் நடந்த மாகாண மாநாட்டில் மீண்டும் அதே தீர்மானத்தை கொண்டுவந்தார். மீண்டும் பார்ப்பனவாதிகள் எதிர்க்கவே 'இராமாயணத்தையும், மகாபாரத்தையும் நெருப்பில் கொளுத்தவேண்டும்' என்றார் பெரியார். கலவரம் ஏற்படவே திரு. விஜயராகவாச்சாரியார் அடங்கினார். 1923ல் சேலம் மாகாண மாநாட்டில் மீண்டும் தீர்மானத்தை கொண்டுவந்தார். கலகம் ஏற்படும் சூழ்நிலை வரவே டாக்டர்.வரதராஜலு நாயுடுவும், ஜார்ஜ் ஜோசப்பும் நிறுத்தினார்கள். 1924ல் பெரியார் தலைமையில் திருவண்ணாமலையில் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தை கொண்டுவந்தார். வகுப்புவாரி தீர்மானத்தை தோற்கடிக்க சென்னையிலிருந்து அதிகமான ஆட்களை எஸ்.சீனிவாசய்யங்கார் கூட்டி வந்து தீர்மானத்தை தடுத்தார். தீர்மானம் நின்றுபோனது. 1925ல் காஞ்சி மாநாட்டில் தீர்மானம் தலைவரால் அனுமதிக்கப்படவில்லை. அப்போது தான் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தான் பெற்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடு கொண்ட அமைப்பை விட்டு, ஆதிக்கவாதிகளால் நிறைந்த காங்கிரஸ் இயக்கத்தை விட்டு ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் உரிமைக்காகவும் வெளியேறினார். அவர் தான் பெரியார்!

*******

இப்பதிவை எழுத உதவிய நூல்கள்:

  1. தமிழர் தலைவர், சாமிசிதம்பரனார்.
  2. மனிதம் - பெரியார் பற்றிய டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரை.

25 May 2007

ஆதி திராவிடர்கள் மதம் மாறுதல்-பெரியார்

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்! - (பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

05 March 2007

கற்பக்கிரகத்தில் தலித் - (குறுங்கதை)

"பெருமாளே..." வலியில் கதறுகிறார் அர்ச்சகர் நாராயணன்.

"செத்த நாழி பொறுத்துக்கோங்கோ. புரோக்கரையும், வக்கீலையும், கிட்னி தாறவாளையும் கூட்டிண்டு கையெழுத்து வாங்க டாக்டர் ரூமுக்கு ரகு போயிட்டான். செத்த நாழியில ஆப்பரேசன் பண்ணிடுறதா சொல்லிட்டா. எல்லாம் செரியாகிடும் பெருமாள் காப்பாத்துவார்" ஆறுதல் சொல்லுகிறார் அர்ச்சகரின் ஆத்துக்காரி சுஜாதா.

அர்ச்சகருக்கு ஆறுதல் சொன்னாலும் மனசு முழுசும் 'ஸ்ரீராம ஜெயம்' சொல்லிக்கொண்டே ஓரக்கண்ணில் வழியும் கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைக்கிறாள் சுஜாதா அம்மாள்.

கண்ணை மூடி தன் புருசன் பூஜை செய்யும் பெருமாள் சந்நிதியை மனதில் நினைத்து மாங்கல்யத்தை கெட்டியாக பிடித்தபடி, "பகவானே ஆத்துக்காரரை காப்பாத்து! பகவான் புண்ணியத்துல எல்லாம் நல்லா முடிஞ்சா பெருமாள் சந்நிதிக்கு அழைச்சிண்டு வறேன்" திருப்பதி வெங்கடாசலபதியை நினைத்து உருக்கமாக வேண்டுகிறாள்.

காஞ்சிபுரம் கோயில்ல பெருமாளுக்கு பூஜை செய்ற அர்ச்சகரை முதலில் சந்தித்த கணங்களை சுஜாதா நினைத்தபடியே பெருமாளை வேண்டிக்கொள்கின்றார்.
-000-
"நான் படுற வேதனை எம் புள்ளைக்கு வரக்கூடாது. வீசுற நாத்தத்தையும் பொறுத்து சாக்கடையில் மூழ்கி அடைப்பெடுக்கும் இந்த முனிசிபாலிட்டி வேலைய பாக்குறதே எம்புள்ள படிச்சு முன்னேறணும்னு தான். அவளுக்கு படிக்க பீஸ் கட்ட கந்து வட்டி கடன் வாங்கினதுல குவிஞ்சு கிடக்கிற கடனை அடைக்க இத விட்டா வேற என்ன வழி? கிட்னிய வித்தாவது மானத்தை காப்பத்தணுமே!" நீட்டிய பத்திரங்களில் கையெழுத்து போடும் முனியன் மனதிற்குள் வேதனையை கொட்டுகிறான்.

தடபுடலாக ஆப்பரேசன் நடக்கிறது. இரண்டு தினங்கள் கழித்து முனியனின் கையில் மாத்திரைகளும், 40,000 ரூபாயும் திணிக்கப்படுகிறது. பேசியபடி 5 லட்சம் ரூபாயும், மாதம் தோறும் 2000 ரூபாயும் வருமென நினைத்த முனியனுக்கு முதல் அதிர்ச்சி!
-0000-
முனியனின் கிட்னியால் குணமடைந்த அர்ச்சகர் கோயிலில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். பழையபடி வேலைக்கு போகமுடியாத முனியன் பேசிய தொகையை வசூலிக்க அர்ச்சகரை தேடி கோயிலில் காத்திருக்கிறான்.

'போ வெளியே! இங்கேயெல்லாம் வரப்படாது. சாமிக்கு தீட்டு! அபச்சாரம்' என்கிறார் அர்ச்சகர்.

'என்ன சாமி எங்கிட்ட வாங்கின கிட்னிக்கு காசு கேக்க தானே வந்தேன். இதில எங்கே தீட்டு? நான் வந்தா அபச்சாரம் ஆனா, என் கிட்னிய ஒங்க ஒடம்புல பொருத்துனா மட்டும் அபச்சாரமில்லையா?' என்றான் முனியன்.

அர்ச்சகரின் முகத்தில் ஆயிரம் கைகள் ஓங்கி அறைவது போல உணர்கிறார். தாழ்த்தப்பட்டவன் நுழைய அனுமதிக்காத வர்ணாஸ்ரம கற்பக்கிரகத்தில் தாழ்த்தப்பட்டவனது கிட்னி நுழைவதை அர்ச்சகராலும் தடுக்க முடியவில்லை.
உயிர்பயத்தின் முன்னர் பெருமாளாவது, தீட்டாவது! வர்ணாஸ்ரமம் தலைகுனியத்தான் வேண்டும்!