தலைவரவர்களே! தோழர்களே! திருவாங்கூர் மகாராஜா அவர்கள் தனது சகல இந்து பிரஜைகளுக்கும் ஜாதி வித்தியாசமில்லாமல் இந்து பொதுக்கோவில்கள் எல்லாவற்றிலும் பிரவேசிக்க அனுமதி அளித்ததைப் பாராட்ட இக்கூட்டம் கூட்டப்பட்டது என்றாலும் எனக்கு முன் பேசியவர்கள் பலர் இந்த மாதிரி உத்திரவு இப்போது திருவாங்கூரில் வெளியாவதற்கு 12வருஷங்களுக்கு முன் நானும் எனது மனைவியாரும் இருந்து வைக்கத்தில் நடத்தி வெற்றிபெற்ற சத்தியாக்கிரகமே முக்கிய காரணமென்று சொன்னார்கள். பல பத்திரிகைகளும் அந்தப்படி எழுதி இருக்கின்றன. ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ள முடியாது. நானும் ஒரு அளவுக்கு காரணஸ்தனாய் இருக்கலாம் என்றாலும் வைக்கம் சத்தியாக்கிரகம் மூலம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. சத்தியாக்கிரகம் காரணம் அல்ல வென்றால் மற்ற எந்த விதத்தில் நானும் காரணமாய் இருக்கலாம் என்று கூறுகிறேன் என்பதாக நீங்கள் கேட்கலாம். சத்தியாக்கிரகத்துக்கு உலகில் மதிப்பில்லை, அதை சண்டித்தனம் என்றுதான் நானே கருதிவிட்டேன். சத்தியாக்கிரகம் நடத்தப்பட்ட விஷயங்களில் 100க்கு 5 கூட வெற்றி பெறவில்லை. ஏதாவது பெற்று இருந்தால் நம் எதிரிகள் சண்டித்தனமும் தொல்லையும் பொறுக்கமாட்டாமல் இசைந்து வந்ததாயிருக்கலாம். ஆதலால் திருவாங்கூர் மகாராஜா இந்த உத்திரவு போட கருணை கூர்ந்ததற்கு காரணம் தற்சமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையேயாகும். என்னைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க் காரர்களை விட உள்ளுர்க்காரர்களாகிய உங்களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன். எனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள் ஒன்றும் பிடிக்காது என்பதும் அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவது மில்லை என்பதும் நீங்கள் அறிந்ததே. அதனாலேயே இந்த ஊர் பொது ஜனங்களிடம் எனக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடையாது. சுமார் 1520 வருஷங்களுக்கு முன் இந்த ஊரில் அனேக வீடுகளுக்கு நான் வராவிட்டால் கல்யாணங்கள் முகூர்த்த நேரம் தவறிக்கூட காத்திருக்கும். அது போலவே பிணங்கள் கூட வெளியேறாமல் காத்திருக்கும். அவ்வளவு பொது ஜன செல்வாக்குப் பெற்றிருந்தவனாகிய நான் இன்று ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கு நின்றால் கூட கட்டின பணம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். (அப்படி அல்ல என்ற சப்தம்) அது எப்படியோ போகட்டும். இன்று எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஒரு இயக்க சம்மந்தமான நட்பு தவிர மற்றபடி உலக வழக்கமான பொதுஜன நட்பு எனக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் அநேக துறைகளில் பொது ஜன அபிப்பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர் நீச்சல் நீந்திக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கதிதான். ஆனால் இப்படி இருந்தும் சிறிதாவது சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். மற்றவர்களில் அனேகருக்கு இதுகூட சாத்தியப்படாமல் அடிக்கடி கரணம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவேன். ஜாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லுவதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா? நான் ஏதாவது எதிர் மதக்காரனா? அல்லது தீண்டாத ஜாதியா? என்றால் அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ்தான கமிட்டியில் முக்கியஸ்தனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். எனது பெற்றோர்களும் செய்திருக்கிறார்கள். இதே எதிரில் தெரியும் இந்த அம்மன் கோவில் நான் முன்னின்று கட்டி வைத்ததல்லவா? மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார் தகப்பனார் பெயர் போட்டிருக்கிறதல்லவா? அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன்? அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான். கோவில் பிரவேசத்திற்கு இந்த ஊர் தேவஸ்தான கமிட்டியில் நான்தான் என் தலைமையில் தான் முதல் முதல் ஒரு தீர்மானம் நிறைவேற்றினேன். அதை அமுலுக்கு கொண்டு வந்ததில் கோயில் பிரவேசம் செய்த சில தாழ்த்தப்பட்டவர்களையும் தோழர் ஈஸ்வரன் அவர்களையும் சர்க்காரில் தண்டித்தார்கள். அப்பீலில் விடுதலை ஆயிற்று என்றாலும் அந்த தீர்மானம் கேன்சில் செய்ய வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே நான் தேவஸ்தான கமிட்டியில் ராஜினாமா செய்தேன். அதற்கப்புறமே சாமியையும் கோவிலையும் மதத்தையும் அடியோடு அழிக்க துணிந்தேன். காரியம் வெற்றி பெற்றதோ இல்லையோ அது வேறு விஷயம். அதன் பயனாய் பல கோவில்களுக்கு வரும்படி குறைந்தது. சில சாமிகளுக்கு மதிப்பும் குறைந்தது. திருப்பதி ராமேஸ்வரம் டிரஸ்டிகள் வரும்படி குறைந்து விட்டதாக ரிபோர்டு செய்தார்கள். கொச்சி திருவாங்கூரில் 10 லக்ஷக்கணக்கான மக்கள் தாங்கள் நாஸ்திகர்கள் என்றும் சகல மதத்தையும் சிறப்பாக இந்து மதத்தை விட்டுவிட வேண்டுமென்றும் தீர்மானம் செய்தார்கள். பதினாயிரக்கணக்கான பேர் கிறிஸ்து முஸ்லீம் சீக்கிய ஆரிய சமாஜம் முதலிய மதங்களுக்கு பாய்ந்தார்கள். திருவாங்கூர் பிரஜைகளில் ஏறக்குறைய பகுதிக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே கிறிஸ்துவர்களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கிறார்கள் என்பதோடு இப்போதும் கும்பல் கும்பலாய் மதம் மாற ஆரம்பித்தார்கள். எனது பிரசாரத்தின் பலனாய் நான் ஜாதிமத ஜனங்களிடை செல்வாக்கு இழந்து மதிப்பு இழந்து வர நேருகிறது என்றாலும் மேல் கண்ட பலன்கள் இந்நாட்டில் இதற்கு முன் என்றும் இருந்ததை விட அதிகமாக ஏற்பட ஆரம்பித்து விட்டதால் பொது ஜனங்களிடை என் மீது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் நாஸ்திகத்தையும் கோவில் குள வெறுப்பையும் மாற்றி இந்துக்கள் மதம் மாறுவதையும் நிறுத்தித் தீரவேண்டிய அவசியம் மகாராஜாக்கள் முதல் சாதாரண பார்ப்பனர்கள் வரை ஏற்பட்டு விட்டது. நானோ அல்லது என்னைப் போன்ற யாராவது ஒருவரோ தனது சுயநலத்தையும் தனது செல்வாக்கையும் இழந்து பொதுஜன வெறுப்பையும் ஏற்க தயாராய் இருந்திருக்காத வரையில் இந்த மாறுதல் அதுவும் புரட்சி போன்றது ஒன்று ஏற்பட்டிருக்க முடியவே முடியாது என்பதை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதுவும் இப்படிப்பட்ட புரட்சி ஏற்பட்டும் சாஸ்திரிகளும் ஆச்சாரிகளும் வர்ணாச்சிரமக்காரர்களும் இந்த புரட்சியை வாய் வார்த்தையிலாவது கூட்டோடு ஆதரிக்க வெளிவரவும் முடியாது. ஆதலால் இந்த உத்திரவுக்கு காரணம் வைக்கம் சத்தியாக்கிரகம் அல்லவென்றும் கடவுளையும் கோவிலையும் மதத்தையும் ஒழிக்கப் புறப்பட்ட சிலருடைய முயற்சியும் திருவாங்கூர் மகாராஜாவினுடைய ஒப்பற்ற விவேகமும் சாமர்த்தியமும் என்றுதான் சொல்லுவேன். இந்த உத்திரவினால் சாமி தரிசனம் செய்ய கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு இடம் கிடைத்து விட்டது என்பதல்ல எனது திருப்திக்கு காரணம். மேல் ஜாதி கீழ் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் ஒரு அளவுக்கு ஆதரவாக சாமியும் கோவிலும் ஒரு தூணாய் இருந்தது திருவாங்கூரைப் பொறுத்த வரையிலாவது இடிந்து விட்டதல்லவா என்கின்ற திருப்தி தான். மதம் என்கின்ற தூணும் இடிந்து விழுந்தாலொழிய தீண்டாமையும் மேல் ஜாதி கீழ் ஜாதியும் நம் நாட்டில் ஒழியவே ஒழியாது என்பது தான் எனது அபிப்பிராயம். அதற்கு ஆகவே கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்களை முஸ்லீம் மதத்தில் சேருங்கள் என்று சொல்லிவருகிறேன். அதனால் இந்து மதத்துக்கு கேடு என்று கருதினால் இந்துமத தர்மகர்த்தாக்கள் ஜாதியை ஒழிக்கட்டுமே. மகாராஜா உத்திரவுபோல் ஒரு உத்திரவு போடட்டுமே. ஒரு சட்டம் கொண்டு வரட்டுமே. யார் வேண்டாம் என்கிறார்கள்? ஜாதி காப்பாற்றப்பட வேண்டும். பொது ஓட்டலில் ரயிலில் இருக்கிற வித்தியாசம்கூட ஒழியப்படாது என்று சொல்லிக்கொண்டும் ஒழிக்க சட்டம் கொண்டு வராமலும் இருந்து கொண்டும் மதம் கெட்டுப்போகிறது என்றால் இதில் நாணயமேது? ஜாதி ஒழிவதற்கு ஆக தீண்டாமை ஒழிவதற்கு ஆக ஒருவன் வேறு மதத்துக்கு போனால் மதம் வேண்டாம் என்பவர்களுக்குத் தான் ஏன் ஆத்திரம் வரவேண்டும்? இவர்கள் ஆத்திரத்தால் என்ன காரியம் நடக்கும்? ஒன்றுமே நடவாது. இந்தியா கூடிய சீக்கிரத்தில் முஸ்லீம் ஆதிக்கத்துக்கு வரப்போகிறது. பார்ப்பன ஆதிக்கத்துக்கு அதாவது இந்து ஆதிக்கத்துக்கு குழி தோண்டி ஆய்விட்டது. முஸ்லீம் ராஜ்யம் இந்தியாவில் விரிவு அடையப் போகிறது. அரசியலிலும் முஸ்லீம்கள் ஆதிக்கம் விரிவடைந்து வருகிறது. பொருளாதாரத்திலும் அவர்களே மேன்மை அடைந்து வருகிறார்கள். இந்த ஊரை எடுத்துக் கொள்ளுங்கள் 10, 20 வருஷத்துக்குள் முஸ்லீம்கள் எவ்வளவு முன்னுக்கு வந்து விட்டார்கள். எங்கும் அவர்கள் எண்ணிக்கைக்கு மேல் பதவி வகிக்கிறார்கள். இதெல்லாம் எதனால்? அச்சமூக ஒற்றுமையினால். அவர்கள் தங்கள் சமூகத்துக்குள் ஒருவரை ஒருவர் அழுத்த நினைப்பதில்லை. ஒருவருக்கு வரும் கஷ்டத்தை இழிவை தங்கள் சமூகத்துக்கே வந்ததாய் கருதுகிறார்கள். இதை அவர்கள் மதம் போதிக்கிறது. மற்றபடி சாமியைப்பற்றி மோக்ஷத்தைப்பற்றி நாம் கவலைப்படாதவர்களானாலும் இந்த அருமையான ஒற்றுமை குணத்திற்கு அவர்கள் பாராட்டப்பட வேண்டாமா? அதன் பயனை அவர்கள் அடைய வேண்டாமா? ஆதலால் இந்தியா ஒற்றுமையடைய இந்தியா சுயமரியாதை அடைய ஜாதி பிரிவு பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்; அல்லது முஸ்லீம் ஆதிக்கம் ஏற்பட வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் நம் கதி அதோ கதிதான். ஆதலால் இந்த பிரகடனத்துக்கு மகாராஜாவையும் ஜாதிமத ஒழிப்புக்கு முயற்சித்தவர்களையும் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும். குறிப்பு: 15.11.1936 ஆம் நாள் ஈரோடு காரை வாய்க்கால் மைதானத்தில் ஈரோடு பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தாரால் நடத்தப் பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை. குடி அரசு சொற்பொழிவு 06.12.1936 (குடி அரசு - 1936 டிசம்பர்) |
20 February 2011
திருவாங்கூர் ஆலயப் பிரவேச உரிமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment