காஞ்சி மாநாட்டின் போது, அங்கேயே பெரியாரின் முயற்சியால் பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அந்த மாநாட்டின் தலைவராக கோவை திரு. T.A.இராமலிங்க செட்டியாரை அழைத்து பேசிய பெரியார் "தேசத்தில் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமேயாகும், இவ்வாறு பிரிவினையில்லையென்று எவ்வளவுதான் மூடிவைத்த போதிலும் காங்கிரசிலுங்கூட இத்தகைய பேதம் உண்டென்பதை யாரும் மறுக்கமுடியாது. பிராமணர், பிராமணரல்லாதார் பிரிவினையில்லையென்பது உடலிலுள்ள புண்ணை மூடிவைத்து அழுகவிடுவதற்கு ஒப்பானதாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து, உடலநலத்தை கெடுக்கும் புண்ணை ஆற்ற முயல்வதே பொதுநோக்குடைய அறிஞர் கடமையாகும்" என்று கூறினார்.
பெரியார் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறியதும், அதற்கான காரணமாக அமைந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானமும் குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்ததல்ல. சிலர் பரப்பும் பொய்யுரை போல தனிப்பட்ட சிலரால் பாதிக்கப்பட்டு வெளியேறிய சாதாரண நிகழ்வுமல்ல. பிராமணர் அல்லாதவர்களின் வகுப்புரிமைக்கும், சமூக உரிமைக்கும் காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயே போராடியவர் தான் பெரியார். இதை அறிய பெரியார் வெளியேறியதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சமூகத்திலும், காங்கிரஸ் இயக்கத்திலும் இருந்து வந்த பார்ப்பனீய ஆதிக்க செயல்களை தெரிந்துகொள்வோம்.
- சர்.சி.பி. தியாகராயர், டாக்டர் நாயர், சி.நடேச முதலியார், பனகல் அரசர் ஆகியோர் இணைந்து "திராவிடர் சங்கம்" ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் இரண்டு நூல்களை "திராவிடரின் தகுதிகள்", "பார்ப்பனரல்லாதார் கடிதங்கள்" என்ற பெயரில் 1915ல் வெளியிட்டனர். அவர்கள் இணைந்து "தென்னிந்திய மக்கள் உரிமசங்கம்" என்ற பெயரில் அமைப்பு ஒன்றை 1916ல் உருவாக்கினர். காலப்போக்கில் அந்த அமைப்பின் பத்திரிக்கையான 'ஜஸ்டிஸ்' என்ற பெயரில் 'ஜஸ்டிஸ் கட்சி/நீதிக்கட்சி' என அழைக்கப்பட்டது. 1917ல் பிராமணரல்லாதார் மாநாடு சர்.சி.பி. தியாகராயர் தலைமையில் நடந்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அரசாங்கத்திலும், சட்டசமையிலும் நிறைவேற்ற இம்மாநாடு கோரியது. இந்த மாநாட்டு தீர்மானங்கள் சாதி ஆதிக்கத்தை எதிர்த்த முற்போக்கானவை என கருதப்படுகிறது. நீதிக்கட்சி தோன்றிய காலத்தில் பெரியார் போன்றவர்கள் நீதிக்கட்சியில் சேராமல் தடுக்க "சென்னை மாகாண சங்கம்", "தேசீய சங்கம்" என இரண்டு அமைப்புகளை பார்ப்பனீயவாதிகள் உருவாக்கினர். இச்சங்கம் பிராமணரல்லாதவர்கள் பெயரால் நடத்தப்பட்டாலும் இச்சங்கங்கள் பார்ப்பனீயவாதிகளின் கட்டுப்பாட்டில் தான் இயங்கியது. வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை தீர்மானத்தை இந்த இரு சங்கங்களிலும் பெரியார் நிறைவேற்றியதும் இரு சங்கங்களும் கொல்லப்பட்டன.
- 1920ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் நிறுவப்பட்டன. ஆதிதிராவிட குழந்தைகளை அனுமதிக்காத அரசு உதவி பெற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை. ஆதிதிராவிடர் முதல் பிராமணர்கள் வரையில் அனைவருக்கும் வகுப்புவாரி உரிமை அடிப்படையில் அரசு பள்ளிகளில் இடம் பங்கிடப்பட்டது. இந்து அறநிலைய பாதுகாப்புச்சட்டம் இயற்றப்பட்டு இந்து கோவில்களின் நிலம், உடமைகள் என அனைத்தும் கண்காணிக்கப்பட்டது. இன இழிவை அகற்றும் விதமாக தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டங்கள் அனைத்தும் பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியும், மானமும் பெற்றுத்தர துவங்கியது மட்டுமல்ல கோவில் சொத்துக்கள் சிலரால் மட்டும் களவாடப்படுவதையும் தடுத்து பொதுவானதாக மாற்ற முனைந்தது.
சென்னை மாகாண ஆட்சி பிராமணர் அல்லாதவர்களிடம் இருந்ததால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் பார்ப்பனீயவாதிகளின் ஆதிக்கத்தை தகர்த்துவிடும் என்பதால் பார்ப்பனீயவாதிகள் எதிர்க்க துவங்கினார்கள். 'இந்துமதத்தில் சர்க்கார் தலையிடுகிறது' என கோவில் தர்மகர்த்தாக்களும், மடாதிபதிகளும், எதிர்த்தனர். திரு. S.சீனிவாசய்யங்கார், விஜயராகவாச்சாரியார் போன்ற வழக்கறிஞர்கள் 'மதத்திற்கு ஆபத்து', 'இந்த சட்டம் இயற்ற சென்னை சட்டச்சபைக்கு அதிககரமில்லை' என கூச்சலிட்டனர். காங்கிரஸில் இருந்த பார்ப்பனீயவாதிகளும் இந்த செயல்களை ஆதரித்தனர். இந்த நேரத்தில் பெரியார் வெளியிட்ட அறிக்கையில் "கட்சி வேற்றுமை பாராட்டாமல் அறநிலைய பாதுகாப்புச்சட்டத்தை ஆதரிக்க வேண்டும். இதனால் அறநிலையங்களுக்கு ஆபத்தில்லை. அவைகளின் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்க வேண்டும். மதத்தின் பெயரால் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான் இதனால் ஆபத்து." என்றார்.
- திருநெல்வேலி, சேரன்மாதேவியில் 'குருகுலம்' என்ற பெயரில் வ.வெ.சுப்பிரமணிய அய்யர் பொதுமக்களிடமிருந்தும், காங்கிரஸிலிருந்தும் பணம் பெற்று நடத்திய பள்ளியில் பிராமணர்களுக்கு தனி உணவு, பிரார்த்தனை வேறு இடம் பிராமணர் அல்லாதவர்களுக்கு வேறு இடம், உணவு, பிரார்த்தனை என நடத்தினார், இதை எதிர்த்தார் பெரியார். திரு.வி.க, டாக்டர்.வரதராஜலு நாயுடு போன்றவர்களும் இணைந்து குருகுலத்தை எதிர்த்தனர். நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. காந்தியார் தலையிட்ட பிறகும் வ.வெ.சு அய்யர் உடன்படவில்லை. பெரியார், திரு.வி.க, டாக்டர் போன்றவர்களது பிரச்சாரத்தால் குருகுலத்திற்கு கொடுக்கப்பட்டுவந்த நன்கொடைகள் நின்றன. வர்ணாஸ்ரம குருகுலம் ஒளிந்தது.
- இந்த காலத்தில் திருச்சியில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் 'பார்ப்பனர்களுக்கு எதிராக பேசிவருகிறார்' என டாக்டர்.நாயுடு மீது கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெரியார் அதை எதிர்த்து பேசி தோற்கடித்தார். அந்த கூட்டத்திலேயா சி.இராஜகோபாலாச்சாரியார், டி.எஸ்.எஸ்.ராஜன், என்.எஸ்.வரதாச்சாரியார், கே.சந்தானம், டாக்டர்.சாமிநாத சாஸ்திரி ஆகியவர்கள் ராஜினாமா செய்து வெளியேறினார்கள்.
- 1920ல் திருநெல்வேலியில்ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை தீர்மானத்தை விஷயாலோசனை கமிட்டியில் 6 வாக்குகள் அதிகம் பெற்று நிறைவேற்றினார் பெரியார். மாநாட்டின் தலைவராக இருந்த எஸ்.சீனிவாசய்யங்கார் 'இது பொதுநலாத்திற்கு கேடு' என அனுமதி மறுத்தார். 1921ல் தஞ்சாவூரில் நடந்த மாகாண காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தார் பெரியார். அதற்கு 'சீமான்' இராசகோபாலாச்சாரியார் 'கொள்கையாக வைத்துக்கொள்வோம்; தீர்மான ரூபமாக வேண்டாம்' என எதிர்த்தார். திருப்பூரில் நடந்த மாகாண மாநாட்டில் மீண்டும் அதே தீர்மானத்தை கொண்டுவந்தார். மீண்டும் பார்ப்பனவாதிகள் எதிர்க்கவே 'இராமாயணத்தையும், மகாபாரத்தையும் நெருப்பில் கொளுத்தவேண்டும்' என்றார் பெரியார். கலவரம் ஏற்படவே திரு. விஜயராகவாச்சாரியார் அடங்கினார். 1923ல் சேலம் மாகாண மாநாட்டில் மீண்டும் தீர்மானத்தை கொண்டுவந்தார். கலகம் ஏற்படும் சூழ்நிலை வரவே டாக்டர்.வரதராஜலு நாயுடுவும், ஜார்ஜ் ஜோசப்பும் நிறுத்தினார்கள். 1924ல் பெரியார் தலைமையில் திருவண்ணாமலையில் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தை கொண்டுவந்தார். வகுப்புவாரி தீர்மானத்தை தோற்கடிக்க சென்னையிலிருந்து அதிகமான ஆட்களை எஸ்.சீனிவாசய்யங்கார் கூட்டி வந்து தீர்மானத்தை தடுத்தார். தீர்மானம் நின்றுபோனது. 1925ல் காஞ்சி மாநாட்டில் தீர்மானம் தலைவரால் அனுமதிக்கப்படவில்லை. அப்போது தான் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தான் பெற்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடு கொண்ட அமைப்பை விட்டு, ஆதிக்கவாதிகளால் நிறைந்த காங்கிரஸ் இயக்கத்தை விட்டு ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் உரிமைக்காகவும் வெளியேறினார். அவர் தான் பெரியார்!
*******
இப்பதிவை எழுத உதவிய நூல்கள்:
- தமிழர் தலைவர், சாமிசிதம்பரனார்.
- மனிதம் - பெரியார் பற்றிய டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரை.
11 comments:
திரு
பதிவுக்கு நன்றி!
தோழர் திரு,
அருமையான பதிவு. உண்மை வராற்று நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே சமூதாயத்திற்கு எடுத்துக்காட்டிய உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
திரு,
பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
விவரமான பதிவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
ஒரு செல்வந்தராகப் பிறந்து வாழ்ந்து அனைத்தையும் பொது நலத்திற்காக விட்டுக் கொடுத்தவர்.மகாதமா காந்தியைவிட உண்மையானக் காந்தியவாதி.
வாழ்க்கையில் எவ்வள்வு அவமானங்கள்,துரோகங்கள்,துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவித்தவர்.குறை கூறுபவர்களைப் பொறுமையாகக் கேட்டு பதில் சொன்னவர்.
காங்கிரசை எதிர்த்தார் ஆனால் இந்தியாவிற்குக் காந்திநாடு என்று பெயர் சூட்டச் சொன்னார்.
பெரியாரை எதிரியாக நினைப்பவர்கள் அவரைப் பற்றிப் புரிந்து கொள்ள இந்தப் பதிவு ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறது.கடைசி வரையில் நான் பொது மக்கள் பணத்தில் வாழ்கிறேன்.அந்தக் கூலிக்காவது வேலை செய்ய வேண்டாமா?என்று தொண்டாற்றினார்.
பி.கு.தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.
திரு,
நீங்கள் திரும்பவந்துவிட்டீர்களா? இன்றுதான் கவனித்தேன். உங்களுக்கேயுரிய பொறுமையுடன் மீண்டுமொரு நல்ல இடுகை. பெரியாரைப் புரிந்துகொள்ளவேண்டிய தேவையும், அதற்குரிய முதிர்ச்சியுமுள்ளவர்களுக்கு இவ்விடுகை பயன்படும். நன்றி. உங்களின் எட்டு பதிவில் சுட்டியிருந்த நிகழ்வு உங்களைப்பற்றி அறிய உதவியது. தமிழீழப்பயணம் பற்றிய உங்கள் இடுகையை வாசிக்க ஆவலாய்.
வரலாற்றுத் திரிபுகளை உண்டு பண்ண ஒரு கூட்டம் முயற்சிக்கும் வேளையில் அறிவுச் சூரியனை உதிக்க வைக்கும் பதிவு இது. நன்றி!
வரலாற்றை புரட்ட காத்திருக்கும் குள்ள நரிக்கூட்டத்திற்கு சரியான சவுக்கடி. சேவை தொடரட்டும்.
கோட்சேவின் அடிவருடிகளுக்கு இது எச்சரிக்கை பதிவு
நல்ல பதிவு... வாழ்த்துக்கள்.
பெரியாரின் "நான் ஏன் வெளியேறினேன்?" என்ற கையடக்க வெளியீடு ஒன்று என்னிடம் உள்ளது. அதில் இன்னும் சில செய்திகள் படித்த நினைவு. தேடிப் பார்த்து ஸ்கேனில் அனுப்புவேன்.
அருமையான பதிவு.
பதிவுக்கு நன்றி...
Post a Comment