17 September 2007

வைக்கம் வீரரா பெரியார்?

தந்தை பெரியாரின் நீண்ட நெடிய சமூகநீதி போராட்ட வாழ்க்கையில் வைக்கம் போராட்டம் (அ) வைக்கம் சத்யாகிரகம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியமைக்காக வைக்கம் வீரர் என்று குறிப்பிடப்பட்டவர் பெரியார். ''வைக்கம் வீரராக'' பெரியாரை ஏற்க ஒருசிலருக்கு மட்டும் முடியாது இருக்கிறது. அவர்கள் யாரென்பதும் அவர்களின் பின்புலம் என்னவென்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.







அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வைக்கம் போராட்டத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இந்த போரில் பங்காற்றியவர்கள் மிக அதிகமானோர். அவர்களில் முக்கியமானவர்கள் டி.கே.மாதவன். கே.பி.கேசவ மேனன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், தந்தை பெரியார், ஸ்ரீ நாரயண குரு, குரூர் நீலகண்டன் நம்பூதரி, மகாத்மா காந்தி. வைக்கம் போராட்டம் பலர் பங்கேற்று ஓராண்டுக்கு மேல் நீடித்து, பலநிலைகளை கடந்தே அதன் வெற்றியை அடைந்திருக்கிறது. இப்போராட்டத்தின் வெற்றி எந்த ஒரு தனிமனிதனுக்காக கிடைத்த வெற்றி இல்லை. பலருக்கும் பங்கிருக்கிறது. இந்த வெற்றி பெரியார் ஒருவரது தனிப்பட்ட வெற்றி என்று பெரியாரைப் பின்பற்றும் எவரும் சொல்லமாட்டார்கள். அதே சமயம் பெரியாரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதையும், அவரின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதையும் அனுமதிக்கவும் மாட்டான்.

1924ஆம் ஆண்டு மார்ச் 30 தேதி துவங்கிய இந்த போராட்டம் 1925நவம்பரில் முடிவு பெற்றது. எதற்காக இந்த போராட்டம். கோவில் நுழைவு போராட்டமா? இல்லை. கோவிலைச் சுற்றி இருந்த தெருக்களிலே நுழைய உரிமை மறுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களெனவும், நெருங்கக்கூடாதவர்களென்று சமூதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த ஈழவர், புலையர் மக்களுக்காக சாலைகளை பயன்படுத்த உரிமை வேண்டும் என்று நடத்தப்பட்ட மாபெரும் போராட்டம். இந்த புரிதல் மிக அவசியமானது. ஏனென்றால் கோவில் நுழைவிற்கும், சாலை நுழைவிற்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. கோவில் நுழைவு என்பதில் மதம் சம்பந்தப்பட்டிருக்கிறது. சாலை நுழைவில் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டையும் ஒன்றோடொன்று குழப்பிக்கொள்வது போராட்டத்தின் நியாயங்களை புரிந்து கொள்ள மறுப்பதாகும். இந்த இடத்தில் ஒரு சிறு தகவல்: தமிழகத்தின் முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவரும் தந்தை பெரியாரே.

வைக்கம் சத்யாகிரகம் 30.3.1924 ஆம் அன்று தொடங்கியது. போரட்டத்தின் பகுதியாக கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப் என ஒவ்வொரு முக்கிய பிரமுகர்களும் தொடர்ச்சியாக கைதாக பெரியார் வைக்கம் போராட்டத்தில் இணைந்து கொள்கிறார். சிறையிலிருந்த ஜார்ஜ் ஜோசப் அவர்களின் வேண்டுகோளை அடுத்து பண்ணைபுரத்திலிருந்த பெரியார் உடனடியாக தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தான் திரும்பி வரும் வரை காங்கிரசு தலைவர் பொறுப்பை ராஜாஜி அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கடிதம் எழுதிவிட்டு ஈரோடு திரும்பி, நாகம்மை அம்மையாரிடம் சென்னை செல்வதாக கூறிவிட்டு வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். வைக்கம் சென்ற அவரை திருவிதாங்கூர் அரசாங்கத்தின் சார்பாக தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்கிறார்கள். வேண்டிய சவுகர்யங்களை செய்து தரும்படி அரசர் பணித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.( திருவிதாங்கூர் அரசர் டில்லி செல்லும் பொழுது ஈரோட்டிலுள்ள பெரியாருக்கு சொந்தமான சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து செல்வது வழக்கம்).

பெரியார் வந்து சேர்ந்தவுடன் தொய்வு நிலையிலிருந்த போராட்டத்திற்கு புத்துயிர் கிடைக்கிறது. பல்வேறு இடங்களுக்கு சென்று தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொள்கிறார் பெரியார். பெரியாரின் பேச்சிற்கு பெரும் வரவேற்பும் சத்யாகிரக போராட்டத்திற்கு ஆதரவும் கிடைத்தது. பெரியாரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்டு அருவிக்குத்தி என்னும் இடத்தில் ஒரு மாதம் சிறை வைக்கப்பட்டார். இந்த சமயத்தில் நாகம்மையாரும், இன்னும் சில தோழர்களும் வைக்கம் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள். நாகம்மை அவர்கள் பல இடங்களில் பிரச்சாரம் செய்து போராட்டத்திற்கு ஆதரவும் நிதியும் திரட்டினர். போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் மனைவியர்களுடன் இணைந்து சத்யாகிரகத்தை தொடர்ந்தனர்.19.5.1924 ஆண்டு அவர்கள் பங்கு பெற்ற போராட்டம் நடைபெற்றது. அப்போதிருந்த இந்திய சமூக மனோபாவத்தை கருத்தில் கொள்ளும் போது இவர்களின் போராட்டத்தின் முக்கியதுவம் விளங்கும்.

சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின் பெரியார் மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிராமம் கிராமாக சென்று போராட்டத்திற்கு ஆதரவும் நிதியையும் திரட்டினார். இடையே ராஜாஜி மற்றும் சீனிவாச அய்யாங்கார் சென்னை திரும்ப அழைத்த போதும் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சமயத்தில் திடீரென்று திருவிதாங்கூர் மகாராஜா மரணம் அடைந்து விட மகாராணியார் அரசு பொறுப்பை ஏற்கிறார். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் விடுவிக்கப்படுகிறார்கள். கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தீண்டத்தகாத மக்களை அனுமதிக்கும் மனநிலைக்கு ராணியார் வந்துவிடுகிறார். ஆனால் சனாதானிகள் அதை கடுமையாக எதிர்க்கின்றனர். அதன் பிறகு பல்வேறு தடைகளை கடந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் மக்கள் நுழையும் உரிமை பெற்றனர். அதிலும் ஒரு தெருவில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

* * *

பெரியாரின் வைக்கம் போராட்டமும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஒரு வரலாறு. வைக்கம் வீரர் என்று அவரது சீடர்களால் உயர்த்தி சொல்லப்பட்டார் என்பது அதில் முக்கியமான குற்றச்சாட்டு. சோ.ராமசாமியின் துக்ளக் தொடங்கி ம.வெங்கடேசனின் ''ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'' வரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவை உண்மையான விமர்சனமாக இருந்தால் வரவேற்கலாம். அவை வெறும் காழ்ப்புணர்வு பிரச்சாரங்களாகவே இருப்பதினால் அவை எதிர்க்கப்படுகின்றது, நிராகரிக்கப்படுகின்றது. பெரியாரின் பேச்சினை அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைத்து மேற்கோள் காட்டி, இதுதான் உங்கள் பெரியாரின் யோக்கியதை என்று காட்ட முற்படும் அவரது அறியாமையை எண்ணி வருத்தப்படவே வேண்டி இருக்கிறது. தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறும் அவரின் இந்த விமர்சன புத்தகம் பாரதிய பார்வர்ட் பிளாக் (முருகன் ஜி :-)) சார்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் பின்னணி என்னவென்பதும், எதற்காக ம.வெங்கடேசன் இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இது குறித்து விவாதிக்கும் முன் பல முக்கியமான செய்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வைக்கம் போராட்டத்தின் தொடக்கம், அதில் பங்கு பெற்றவர்களின் பங்கு குறிப்பாக அவர்கள் போராட்டத்தின் எந்த காலப்பகுதியில் பங்கேற்கிறார்கள் என்பதும், அவர்களின் சிந்தனை போக்கு என்னவென்பதையும் தீவிரமான வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உட்படுத்துதல் மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் காந்தியடிகளை மையமாக வைத்து ஏராளமான சர்ச்சைகள் இந்த போரட்டத்தை தொடர்புபடுத்தி இருக்கிறது. சிலரால் மகாத்மாவின் நிலைப்பாடு மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்டிருக்கிறது. சிலரால் பாராட்டவும் பட்டிருக்கிறது. ம.வெங்கடேசன் அவர்களின் விமர்சனமும் மகாத்மாவின் பங்கையும், காங்கிரசின் பங்கையும் மையமாக வைத்து எழுப்பப் பட்டிருக்கிறது. அவரைப் பொறுத்த வரையில் வைக்கம் போராட்டம் என்பது காங்கசின் போராட்டம், போராட்டத்தின் வெற்றி மகாத்மாவினுடையது, பெரியார் அப்போராட்டத்தில் பங்கு பெற்றவரில் ஒருவர் என்ற அளவுதான். இதே விமர்சனத்தைதான் இலக்கியவாதி ஜெயமோகனும் ''நாராயணகுரு'' என்னும் புத்தகத்தில் நாரயணகுருவை பற்றி அறிமுகம் செய்யும் பகுதியிலும் சொல்லியிருக்கிறார்.

வைக்கம் போராட்டத்தில் மிகத் தீவிரமாக செயலாற்றியவர்களுள் முக்கியமானவர் திரு.டி.கே.மாதவன் அவர்கள். இவர் ஸ்ரீ நாரயணகுருவின் மிக நெருக்கமான சீடராவார். எஸ்.என்.டி.பி. யோகம் என்னும் மையத்தின் செயலாளராக பணியாற்றியவர். ஈழவ மக்களின் ஆன்மீகத்தலைவராக விளங்கியவர் திரு.நாரயணகுரு. அவர் வெறும் ஆன்மீகத்தலைவர் மட்டும் அல்ல. சமுதாயத் தலைவரும் ஆவார். ஈழவ மக்கள் சமூக அளவில் வளர்ச்சி பெற கல்வியும், பொருளாதார வளர்ச்சியும் மிக முக்கியமான தேவைகள் என்று வலியுறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் அதை செயலிலும் காட்டிய முக்கியமான ஒரு தலைவர். இன்றைய கேரளாவில் ஈழவ மக்களை தவிர்க்க முடியாத, சமூக அரசியல், பொருளாதார சக்தியாக உருமாற அடித்தளமிட்டவர் ஆவார். வைக்கம் போராட்டத்திற்கான இவரது ஆதரவு அப்போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது உண்மை.

சுதந்திர போராட்ட காலத்தில் மக்களின் நலன்களுக்காக போராடுபவர்கள் ஏதாவது ஒருவகையில் காங்கிரசோடு தொடர்பு கொள்ளும் ஒரு சூழல் நிலவி வந்தது என்பது வரலாறு. காந்தியின் வருகைக்கு பிறகு இது தவிர்க்க முடியாது என்கிற அளவில் இருந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய செய்தியாகும்.

ம.வெங்கடேசன் போன்றோர் முன்வைக்கும் வாதங்களான காந்திக்கும், காங்கிரசிற்கும் வைக்கம் போராட்டத்தில் பங்கு உண்டு என்பதை முற்றிலும் நிராகரிக்க முடியாது. நிராகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. காங்கிரசுக்கும் வைக்கம் போராட்டத்தில் பங்கு உண்டு.

1921ல் திருநெல்வேலியில் காந்தியடிகளை சந்தித்த டி.கே.மாதவன் வைக்கம் போராட்டத்தின் அவசியம் குறித்தும், தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பேசினார். காந்தியடிகளும் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்தார். 1923ல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள பிரதேச காங்கிரஸ் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. கேரள பிரதேச காங்கிரஸின் தலைவராக இருந்த திரு.கே.பி. கேசவமேனன் தலைமையில் இதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இதற்காக வைக்கத்தில் சத்யாகிரக ஆசிரமும் ஏற்படுத்தப்பட்டது.

காந்தி இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தந்தார் என்பது ம.வெங்கடேசனின் வாதம். இதற்கு ஆதரமாக 19.3.1924 காந்தி அவர்கள் கேசவ மேனனுக்கு எழுதிய கடிதத்தை ஆதராமாக காட்டுகிறார்.(ம.வெங்கடேசனின் புத்தகம் பக்கம்162-163). ஆனால் 6.4.1924 ஆண்டு காந்திக்கு கேசவமேனன் ஒரு தந்தி ஒன்றை அனுப்புகிறார். அதன் காரணம் முக்கியமானது. காந்தியடிகள் சத்யாகிரகத்தை நிறுத்த முயற்சி மேற்கொள்கிறார் என்பதை அறிந்து அதை விளக்குவதற்காக அனுப்பப்பட்ட தந்தி. அந்த தந்தி வைக்கம் போராட்ட வரலாறு என்னும் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதன் பிரதியை கீழே தந்திருக்கிறேன்.

கேசவமேனனின் தந்தி.

ம.வெங்கடேசன், போராட்டத்திற்கான காந்தியின் ஆதரவை நிரூபிப்பதற்காக 19.3.1924தேதியிட்ட கடிதத்தை ஆதரமாக காட்டுகிறார். ஆனால் போராட்டத்தை நிறுத்த கோரும் காந்தியின் மனமாற்றத்தை (அ) தடுமாற்றத்தை 6.4.1924 தேதியிட்ட கேசவமேனனின் தந்தி தெரியப்படுத்துகிறது. காந்தி இந்த தந்திக்கு பதிலளித்தாதாக எந்த தகவலும் இல்லை. திட்டமிட்டபடி போராட்டம் தொடர்கிறது. கேசவமேனன் கைதாகிறார். அவரைத் தொடர்ந்து ஜார்ஜ் ஜோசப் அவர்களும் கைதாகிறார். இதன் பிறகே பெரியார் போராட்டத்தில் பங்கேற்கிறார்.

போராட்டம் தீவிரமாக நடைபெற்று சமயத்தில் காந்தி வைக்கத்திற்கு வரவில்லை. ஆனால் நாரயண குரு செப்டெம்பர் 27, 1924 அன்று போராட்ட இடத்திற்கு வந்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

வைக்கம் போராட்டத்தில் நாரயணகுரு அவர்களின் ஈடுபாட்டை ''நாரயண குரு" கே.சீனிவாசன் அவர்களின் நூல் மூலம் அறியலாம். நாரயண குருவிற்கும் அவரது சீடர்களில் ஒருவரான கேசவன் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் மூலம் இதை அறியலாம். ( நாரயணகுரு - பக்கம் 166-167)

''
குரு: சத்யாகிரகம் எப்படி நடக்கிறது?

கேசவன்:வேகமெடுத்து வருகிறது. அனேகமாக கொட்டும் மழையில் அவர்கள் இப்போது
நனைந்து விட்டிருக்க வேண்டும்

குரு: ஏன் அவர்களிடம் குடை இல்லையா?

கேசவன்: காந்திஜி மறுதரப்பினரின் அரசாங்கத்தின்-ஆதரவையும் பரிவையும் பெற வேண்டும் என ஆசைப்படுகிறார். சத்யாகிரகிகளின் தியாகத்தால் அவர்களை நெகிழச்செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். உடலை வருத்தி வரும் தியாகத்தின் மூலம் இறுதி வெற்றி வேண்டும் என்பது அவர் விருப்பம்.

குரு: உடல் துயரினைத் தாங்கும் சக்தியும், அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவமும் வேண்டியதுதான். அதற்காக மழையில் நனைந்து பட்டினி கிடக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஓரிடத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தால், வரும் விளைவுகளை கண்டு அஞ்சாமால் தடையை மீற வேண்டும். அடித்தால் பட்டுக்கொள்ள வேண்டும்.. பதில் தாக்குதல் நடத்த கூடாது. போகும் பாதியில் வேலியிருந்தால் திரும்பி விடக்கூடாது. தாண்டிப்போக வேண்டும். சாலையில் நடந்து செல்வதோடு நின்றுவிடாமல் கோவிலுக்குள்ளும் நுழைய வேண்டும். எல்லோரும் எந்நாளும் அனைத்துக் கோவில்களுக்கும் போய்வரவேண்டும். பிரசாதம் வழங்கப்படுமானால் எடுத்துகொள்ள வேண்டும். கோவிலில் அன்னதானம் வழங்கப்படுமானால் அன்னதானம் சமமாக பிறருடன் உட்கார்ந்து உணவருந்துங்கள். அரசாங்கத்திற்கு உங்கள் செய்கையின் நோக்கம் தெரியட்டும். இதற்காக உயிரை விடவும் தயங்கக்கூடாது. ஒருவன் தீண்டுவதானால் இன்னொருத்தன் பரிசுத்தம் கெடுமானால் அந்த பரிசுத்தம் அழியட்டும். இது என் செய்தி. இதை பத்திரிக்கை செய்தியாக்கி அனைவரிடம் இச்செய்தி சேரும்படி செய்யுங்கள். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்பது மக்களுக்கு தெரியட்டும். ஆனால் வன்முறையும், அடிதடியும் ஒருபோதும் இருக்ககூடாது. வன்முறை அடக்குமுறை ஏவிவிடுதல் கண்டு மனம் தளர வேண்டாம்.

கேசவன்: சத்யாகிரகத்தின் இறுதி இலக்கு ஆலயபிரவேசமாகும். அதனை அடுத்த ஆண்டில் அடையவேண்டும் என்று வைத்திருக்கிறோம்.

குரு: ஏன் இன்னும் ஒருவருடம்? இப்போதே காலம் கடந்துவிடவில்லையா?''


நாரயணகுருவின் இந்த உரையாடலை இங்கே குறிப்பிட்டதற்கு முக்கிய காரணம் உண்டு. ஈழவமக்களின் ஆன்மீகத்தலைவரான நாரயணகுருவின் இந்த பேச்சு வன்முறையை தூண்டுவதாக இருக்கிறது என்றும் சத்யாகிரக விதிகளுக்கு மாறானதாக இருக்கிறது என்றும் காந்தியடிகள் கருதினார்.

மேலும் இந்த போராட்டத்தில் மாற்று மதத்தினரும், மாற்று மாநிலத்தவரும் கலந்து கொள்வதற்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் காந்தியடிகளின் அறிவிப்பிற்கு பிறகு விலகி கொண்டனர். ஜார்ஜ் ஜோசப்பும் தன் கட்டளைப்படி விலகிக்கொண்டார் என்று 1932ல் த யங் இந்தியா இதழில் குறிப்பிட்டார். இதை ஜார்ஜ் ஜோசப் கல்கத்தாவிலிருந்து வந்த Indian Social Reformer'' என்னும் இதழின் வாயிலாக அதை மறுத்தார். சாலை நுழைவு என்பது மதம் சம்பந்த பிரச்சனையில்லை, மனிதனின் உரிமை சம்பந்தமானது என்னும் நிலைப்பாடு கொண்டிருந்தார் ஜார்ஜ் ஜோசப்.

போராட்டத்தின் இறுதி கட்டத்திலே, அரசாங்கம் அனுமதி கொடுக்க முன்வந்த போதுதான், மார்ச் 1925ம் ஆண்டு காந்தியடிகள் வைக்கத்திற்கு வருகை தந்தார். கேரளத்திற்கு வந்த போது நாரயணகுருவை அவர் ஆசிரமத்தில் சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்த மாமரத்தின் இலைகளைச் சுட்டிகாட்டி ஒவ்வொரு இலைகளுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது தானே என்று சொல்ல அதற்கு குரு அதன் சுவை ஒன்றுதானே என்று சொல்லியிருக்கிறார். இலையாக குறிப்பிடப்பட்டது மனிதனை தான் என்பதை அனைவரும் அறிவர்.

போராட்டத்தின் இறுதி தருணத்தில் நம்பூதிரிகளிடம் பேசவும், அவர்களிடம் மனமாற்றம் ஏற்படுத்தவும் காந்தி முயற்சித்தார். அங்கு அவருக்கு கிடைத்த அனுபவம் முக்கியமானது. காந்தியை நேரில் சந்திக்க நம்பூதிரிகள் மறுத்துவிட்டனர். காந்தியை தங்கள் இடத்திற்கு வரச்சொல்லிவிட்டார்கள். இந்த உரையாடல் வைக்கம் போராட்டம் பற்றிய ஆய்வு நூலை எழுதிய டாக்டர் ரவிந்தரனின் நூலின் 166ம் பக்கத்தில் இருக்கிறது. அதன் பிரதியை இங்கு இணைத்திருக்கிறேன்.

காந்தி-இந்தன்துரித்தியல் நம்பூதரி இடையேயான உரையாடல்:

போராட்டத்தில் பெரியார் மற்ற அனைவரையும் போல கலந்து கொண்டார் என்று கூறுபவர்களுக்கு பதிலாக சென்னை அரசின் தலைமை செயலருக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதத்திலேயே விளக்கமாக குறிப்பிடபட்டிருக்கிறது.இதுவும் ஆய்வாளர் ரவிந்தரனின் புத்தகத்திலே இடம் பெறிருக்கிறது.

அதில் பெரியார் போராட்டத்தில் கலந்து கொண்டதின் தாக்கம் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் சில:

''From
C.W.CCotton Esq. C.T.E., I.C.S.
Agent to the Governer General
Madras State

To Chief Secratery to the Government of Madras

------
6. Of the nine leaders who are in the central jail Trivandrum where they are treated with great consideration, five only Trivangoreans. Infact the movement would have collapsed long ago but the support it has received from outside-Travancore though the question of opening this road is purely domestic problem

........
...

But the support the Vaikom sathyagrahis received from Madras, both in money and leadership was very great and impressive. E.V.Ramasamy Naicker's lead gave a new life to the movement. His strong appeal on the eve of his journey to kerala had made deep impression on the mind of tamilnadu.

...."

காங்கிரஸ் கட்சி தான் போராட்டம் நடத்தியது என்று சொல்லும் ம.வெங்கடேசன் அவரின் அளவுகோலின்படியே காங்கிரஸ்காரரான பெரியார் தீவிரமாக உழைத்ததை ஏற்க மறுக்கிறார். காந்தியின் ஆலோசனையின் படியே போராட்ட குழுவில் இணைக்கப்பட்டார் என்று மங்கள முருகேசன் புத்தகத்தை கொண்டு வாதிடும் ம.வெங்கடேசன் பெரியார் போராட்டத்திற்கு வந்த விதத்தை கேலி செய்கிறார். போராட்டத்தில் தீவிரமாக பங்காற்றிய பெரியாரின் உழைப்பு பற்றி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் களத்திற்கு வந்த காந்தியை வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு சொந்தக்காரராக்குகிறார்கள்.

தனது விமர்சனத்தை சாமி.சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் என்னும் நூலினை மேற்கோள் காட்டி இவ்வாறு வெளிப்படுத்துகிறார். (பக்கம் 159)

'' வைக்கம் போராட்டத்திலே 19பேர் திருவிதாங்கூர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுவிட்ட பிறகு சிறையிலிருந்தபடியே யோசித்து தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வே.ராவுக்கு உடனே வரவும் என்று ஒரு கடிதம் எழுதினார்கள்''(தமிழர் தலைவர் பக்கம் 70 - அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் தரும் தகவல்)

''ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?
எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் சேர்ந்து கையெழுத்துப்போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்'' என்று வைக்கத்தில் தீண்டாமையை ஒழித்த தந்தை பெரியார் என்ற தன் புத்தகத்திலே கூறுகிறார் ( வைக்கம் போராட்ட வரலாறு - பக்கம் 15). யார் அழைத்தார்கள் என்பதிலே முரண் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

பெரியாரை இப்போராட்டத்திற்கு அழைத்ததிலே முக்கிய பங்காற்றியவர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள். பெரியாருக்கு கடிதம் எழுதிய அந்த நேரம் போரட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரும் சிறையிலே இருந்தனர். ஜார்ஜ்ஜோசப், கேசவமேனன், குரூர் நீலகண்டன் நம்பூதரி, டி.கே மாதவன் ஆகிய அனைவரும் சிறையிலே இருந்தனர். ( சிறை என்பது ஒரு பெரிய மாளிகையில் வீட்டுக்காவல் வைத்தது போன்றது. குற்றவாளிகளை அடைக்கும் சிறைக்கொட்டாரத்தில் அல்ல).

பெரியார் 1973ல் நடந்த வானொலி பேட்டியிலே இது பற்றி தெரிவித்து இருக்கிறார். ஜார்ஜ் ஜோசப் அவர்கள் பெயரை இதிலே குறிப்பிட்டு இருக்கிறார். பெரியாரின் வானொலி பேச்சை வைத்து ம.வெங்கடேசன் இன்னும் ஒரு திரிப்பைச் செய்து இருக்கிறார். மொத்த பேட்டியிலிருந்து தனக்கு தேவையான வாக்கியத்தை மட்டும் எடுத்து கொண்டு வாதம் புரிகிறார்.

''காந்திதான் இதைச் செய்ய வேண்டாம் என்று சொன்னவர். அவருக்கு இதில் சம்பந்தமே இல்லை''( ம.வெங்கடேசனின் நூல் - பக்கம் 159).

ம.வெங்கடேசன் மறைத்த அடுத்த சிலவரிகள் இதோ!
''காந்திதான் இதைச் செய்ய வேண்டாம் என்று சொன்னவர். அவருக்கு இதில் சம்பந்தமே இல்லை''அரசாங்கம்தான் இதை முடிவு செய்தது. ராஜாஜி காந்திக்கு கடிதம் எழுதினார். காந்தி உடனே புறப்பட்டு வந்தார்.

பெரியாரின் வானொலி பேட்டியின் மொத்தமும் கீழே இணைத்திருக்கிறேன்.

பெரியாரின் வானொலி உரை:
1



2


3

4.



மேற்கண்ட வானொலி பேட்டியிலேயே பெரியாரின் பெருந்தன்மை தெரியவரும். இப்போராட்ட வெற்றியில் தன்னை முதன்மைப்படுத்திகொள்ளாது சத்யாக்கிரகத்தையே முன்னிலைப்படுத்தியவர் அவர். காந்தியின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியார் அவருக்கு பெருமதிப்பு கொடுத்து வந்தார். தனது குடியரசு இதழ்களில் மகாத்மா காந்தி வாழ்க என்று அச்சிட்டவர் பெரியார். .

அவரின் பேச்சு இதோ.

வைக்கம் வெற்றிக் கொண்டாட்டத்தில் பெரியாரின் உரை.


யார் வந்து முட்டுக்கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலையிலும் இல்லை எம் தாடிக்கிழவன். வாசித்த தோழர்களே! பெரியார் வைக்கம் வீரரா என்று உங்கள் சிந்தனை கொண்டும், பகுத்தறிவு கொண்டும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த கட்டுரையை பெரியாரின் பிறந்த தினத்தில் பதிவிடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெரியார் வலைதளத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு தந்த தோழர்.திரு அவர்களுக்கு என் நன்றி.


உதவிய நூல்கள்:
தமிழர் தலைவர் - சாமி சிதம்பரனார்
வைக்கம் போராட்ட வரலாறு -திராவிடர் கழக வெளியீடு
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் - ம.வெங்கடேசன்
நாரயண குரு - கே.சீனிவாசன் தமிழினி பதிப்பகம்

தொடர்புடைய சில சுட்டிகள்:
வைக்கம் - விக்கிபீடியா
A.J.பிலிப் - இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை
நாரயண குரு
நாரயண குரு - சிவகிரி ஆசிரமம்

11 September 2007

வாருங்கள்! தந்தை பெரியார் கூகிள் குழுமத்தில்!!

தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த, சுயமரியாதை கருத்துகளை பரப்புவதற்கும், உரையாடவும் விரும்பும் தோழர்களுக்கான இணையக் கூடலுக்காக "தந்தை பெரியார்" கூகிள் குழுமம் துவங்கியுள்ளோம்.

"தந்தை பெரியார்" குழுமத்தின் இணைப்பு சுட்டி இங்கே http://groups.google.com/group/egroupperiyar/ பெரியார்/பெரியாரியம் பற்றி அறியவும், பகரவும், உரையாடவும் ஆர்வமுள்ள அனைவரும் இணையலாம். தொடர்ந்து ஆக்கப்பூர்வமான விவாதங்களையும், கருத்துக்களையும், மாற்றுக்கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வோம்.

தோழமையுடன்,

முத்துகுமரன், திரு