பெரியார்?

பெரியாரின் வார்த்தைகளில்...
"ஈ.வே.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்த தொண்டு செய்ய எனக்கு "யோக்கியதை" இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதை தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்."
- ஈ.வே.இராமசாமி

யுனெஸ்கோ!
"பெரியார், புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை. அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி."
- யுனெஸ்கோ 27-6-1970

பெண் உரிமை பற்றி பெரியார்...
மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.(கு3.11.79;8)

பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான். கு.16.11.30;7)

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள். (கு.8.2.31;12:2-1)

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். (கு.28.4.35;5:1)

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. (கு.16.6.35;7:3)