01 March 2008

இந்து மகாசபையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்-பெரியார்

இந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே இது பிராமண ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும் பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்துவதாய் முடியுமென்றும், இந்தியாவின் ஜனசமூகத்தின் நான்கிலொரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் மகமதிய சகோதரர்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் இடமளிக்கக்கூடியதாகும் என்றும் இந்து மகாசபை ஆரம்பித்ததற்கே, மகமதிய சகோதரர்களின் நடவடிக்கையைத்தான், முக்கியக் காரணமாகச் சொல்லி வருவதால் வெகு கஷ்டப்பட்டு மகாத்மாவினால் ஏற்பட்ட இந்து - முஸ்ஸீம் ஒற்றுமை அடியோடு மறைந்து போகுமென்றும், நமது குடி அரசின் பத்திராதிபர் பல தடவைகளிலும், பல பிரசங்கங்களிலும் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.

அதுமாத்திரமல்லாமல், நமது தமிழ்நாட்டில், இந்து மகாசபைக்கு கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளிலெல்லாம் வருணாசிரம தர்மிகளும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் அக்கிராசனாதிபதிகளாகவும், காரியதரிசிகளாகவும் நியமுகம் பெற்றிருக்கின்றார்களென்பதும், அநுபவத்தில் தெரிந்த விஷயம். பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையில் இருக்கும்போது, தீண்டாமை ஒழிய வேண்டுமென்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதும், அதே ஆசாமிகள் மறுபடியும் வருணாசிரம சபையென்று ஒன்றுகூட்டி, அதிலும் உட்கார்ந்து கொண்டு தீண்டாமை வேத சம்மதம் என்றும், மநுதர்மவிதியென்றும், வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றவேண்டும் என்றும் இதற்கு விரோதமாய் இருக்கும் மகாத்மா காந்தியை ஒழிக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்வதை நாம் பார்க்கிறோம்.

சென்னை மாகாணத்தின் இந்து மகாசபையின் கிளைத்தலைவர் சிறீமான் டி. ஆர். ராமச்சந்திர ஐயர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். அவர் வருணாசிரம தர்மத்தினுடையவும், பிறவியில் தான் உயர்ந்த பிராமண ஜாதியாமென்பதினுடையவும், தீண்டாதான் என்பவன் தெருவில் நடக்கக்கூடாது, கண்ணில் படக்கூடாது என்பதினுடையவும் அவதாரம். அதே மாதிரி கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டணம், கோயமுத்தூர் முதலிய இடங்களிலுள்ள இந்து மகாசபைத் தலைவர்களும், சென்னைத் தலைவருக்கு இளைத்தவர்களல்ல. கும்பகோணம் இந்து மகாசபையிலேயே தீண்டாமை சாஸ்திர சம்மதமானதென்றும், அதை ஒழிக்கக்கூடாதென்றும் ஓர் தீர்மானம் செய்திருப்பதாக நமக்கு ஞாபகமிருக்கிறது. இப்படியிருக்க இந்து மகாசபை நாட்டில் பரப்புவது எப்படி இந்துமதத்திற்கு நன்மை பயப்பதாகும்? ஓர் கொள்கைக்காக ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டால் அந்தக் கொள்கைப்படி நடப்பவர் கிடைக்காவிட்டாலும், அந்தக் கொள்கையை நம்புகிறவர்களாவது, அந்த ஸ்தாபனத்தை நடத்துகிறவர்களாயிருக்க வேண்டாமா ? சிறீமான் டி.ஆர். இராமச்சந்திர ஐயர் தீண்டாமையை ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு சபைக்கு அக்கிராசனம் வகிப்பதானது, வாஸ்தவத்திலேயே அச்சபையின் யோக்கியதையைக் காட்டுவதாகுமா? அல்லது அச்சபையின் புரட்டுகளை காட்டுவதாகுமா ?

நமது நாட்டிலுள்ள சில வைதீகர்கள் எப்படி பாமர மக்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறலாம் என்கிற கொள்கைக்கு ஸ்தாபனங் கண்டுபிடிக்க கருத்தாய் இருக்கின்றார்களேயல்லாமல் உண்மையாக ஓர் காரியத்தைச் செய்வதற்கு ஒருவருமில்லை. இந்து மகாசபையின் ஸ்தாபகர் சிறீமான் மாளவியா அவர்களே, தீண்டாதவரைப் பற்றி பேசும்போது, கண்களில் ஜலம் விடுகின்றாரேயல்லாமல், பிறவியில் தனக்கும், தீண்டாதாருக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுவதே இல்லை. தன்னை பெரிய வருணாச்சிரமத் தர்மியாகத்தான் ஒப்புக்கொள்ளுகிறார். முஸ்ஸீம்களின் உபத்திரவங் காரணமாக இந்து மகாசபையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று என்று சொன்ன காரணத்தால், பஞ்சாபில் முஸ்ஸீம்கள் நடத்தையால் அதிருப்தி கொண்ட லாலா லஜபதிராய் அவர்களும் இந்து மகாசபையில் சேர்ந்து இந்து மகாசபைக்கு உழைக்க முன் வரவேண்டியதாயிற்று.

இந்துக்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில், இந்துக்களல்லாத வர்களைத் தாழ்மையாகக் கருதுவதும், இந்துக்களில் பிராமணர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் பிராமணரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும், மகமதியர் அதிகமாயிருக்கிற பாகங்களில் மகமதிய ரல்லாதவரைத் தாழ்மையாகக் கருதுவதும், கிறிஸ்தவர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் கிறிஸ்தவரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும் பெரும்பாலும் உலக சுபாவமாகவே கருதுகிறோம். அத்தோடு, கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர்களும் செல்வாக்கில்லாத வர்களைத் தாழ்மையாகவே கருதுவதும் சுபாவமாகத்தானிருக்கிறது. உதாரணமாக, இந்துக்கள் மகமதியர்களையும், கிறிஸ்தவர்களையும் மிலேச்சர்களென்று சொல்லுவதையும், மகமதியனைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டியெறிய வேண்டுமெனச் சொல்லி வந்ததையும், இந்துக்களுக்குள் பிராமணனை, பிராமணரல்லாதார் மிலேச்சர்களென்று அகராதியில் எழுதியிருப்பதையும், பிராமணர் பிராமணரல்லாதாரை விபசாரி மகன், வேசிமகன், சூத்திரன் என்று எழுதிவைத்துக் கொண்டிருப்பதையும் மகமதியர் இந்துக்களை "காபர்" அதாவது நாஸ்திகர் என்று சொல்லுவதையும், கிறிஸ்தவர்கள் இந்துக்களை அஞ்ஞானிகள் என்று சொல்லுவதையும், தினமும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இத்தத்துவத்தினாலேதான், இன்றைய தினம் நாம் நமது ராஜ்யத்தை இந்திய அரசாங்கமாகச் செய்து கொள்ளாமல், பிரிட்டிஷ் அரசாங்கமாகச் செய்து வைத்துக்கொண்டிருக்கிறோம். நமது பொய்க்கிளர்ச்சிகளின் பலனாக ஒருசமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் தொலைந்தாலும், ஜெர்மனி அரசாங்கமோ, ஜப்பான் அரசாங்கமோ அல்லது வேறு எந்த வெளிநாட்டு அரசாங்கமோ ஏற்படுமேயல்லாமல் ஒருக்காலும் இந்திய அரசாங்கம் ஏற்படுமென்று கருதுவதற்கே வகையில்லாமல் இருக்கிறது. லாலா லஜபதிராய் அவர்கள் தமது பிரசங்கத்தில், " முஸ்லீம்கள், முஸ்லீம் ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டுமென்று ஏதோ ஓர் பத்திரிகை எழுதுவதாகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதாகவும், ஆதலால் இடங்கொடுக்கக் கூடாதென்றும் " வெகு எளிதில் சொல்லிவிட்டார்.

இந்திய அரசாங்கத்தில் இந்திய ஜனசங்கையில், நாலிலொரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய மகமதிய சகோதரர்களுக்கு பங்கு உண்டா ? இல்லையா ?

அவர்கள் ஏழரைக் கோடிப்பேரும் இனிமேல் இந்தியாவை விட்டுப் போய்விட முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால், ராஜீய விஷயத்திலும், மதவிஷயத்திலும் நமக்கு சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடுமா ? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மகமதியர்களுக்கு ஏற்படாததற்கு முன் மகமதியர் கொஞ்சமாயுள்ள எந்தப் பிரதேசத் திலாவது, தேர்தல்களில் ஒழுங்கான பிரதிநிதித்துவம் பெற்றிருக் கிறார்களா? அல்லது எந்த கிறிஸ்தவர்களாவது அப்படிப் பெற்றிருக் கிறார்களா ? உதாரணமாய், நம் நாட்டிலுள்ள தீண்டாதாரென்று சொல்லப்படுவோரை நாம் எப்படி வைத்திருக்கிறோம்? பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு இன்றைக்கு 200 வருஷங்களாகியும், ஒரு தீண்டாதானாவது தேர்தல்களில் நின்று இந்தியனுடன் போட்டி போட்டு ஜெயம் பெற சக்தியுண்டாக்கியிருக்கிறானா? எந்த ஒரு தீண்டாதானல்லாத இந்தியனாவது, தீண்டாதவனும் நமது சமூகத்தில் மூன்றிலொருபங்கு எண்ணிக்கை உள்ளவர் தானே, அவனை நிறுத்தி அவனுக்கு நம்முடைய ஓட்டைக் கொடுத்து, நமது அரசியல், சமூகவியல் இவைகளில் அவனுக்குள்ள பங்கைக் கொடுக்க வேண்டுமென்று சிறீமான்கள் மாளவியா, லஜபதிராய் போன்ற யாராவது அநுபவத்தில் காட்டியிருக்கிறார்களா? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சமசுதந்திரம் அடைவதோடல்லாமல், உயர்ந்த நிலைமையையும் அடைய ஆசைப்படுவது ஒவ்வொரு ஜீவனின் சுபாவமாகும். அப்படியிருக்க, உன்னுடைய சமத்துவத்திற்கு நானும் பிரயத்தனப் படமாட்டேன், நீ பிரயத்தனப்பட்டால் அதையும் ஒழிப்பதற்கு நான் பிரயத்தனப்படுவேன் என்று சொல்வது சமத்துவ மனித தர்மமாகுமா? இந்தியாவில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், மகமதியர்களும், இந்துக்களில் தீண்டாதவர்களும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையும் சம உரிமையும் பெற்றாலல்லாது, இந்தியா விடுதலையடையுமென்று நினைப்பது பைத்தியக்காரத்தனமென்றே சொல்லுவோம். சம உரிமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மனம் ஒப்பிக் கொடுப்பதுதான் ஏற்ற மருந்தாகும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உணர்ச்சியை அடக்கி மழுப்பி விடலாமென்று நினைப்பது, சரீரத்தில் ஏற்பட்ட ஒரு புண்ணை மருந்துபோடாமல் மூடிவைத்து விடுவதினால் அது ஆறிப்போகுமென்று நினைப்பதுபோல்தான் முடியும். இந்து மகாசபைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் விரோதமென்று சொல்வதனால் அவ்விந்து மகாசபையை, நமது தேசத்தின் ஒற்றுமைக் குறைவுக்கும், துவேஷத்திற்கும் ஏற்பட்ட மற்றொரு சாதனமென்றுதான் சொல்ல வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி "இந்து"ப் பத்திரிகையென்னும் பிராமணப் பத்திரிகை எழுதியிருப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். அதாவது :-

" வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், ஜனங்களிடை சுயமதிப்பை உண்டுபண்ணியிருக்கிறதென்பதையும், சமுதாய முன்னேற்றத்திற்கு காரணமாயிருக்கிறதென்பதையும், அது ஏற்படுவதற்கு முன் ராஜீய வாழ்வில் அலட்சியமாயிருந்த வகுப்பினர்க்கு ராஜீய அறிவு புகட்டுவதற்கான வசதிகளை அது உண்டு பண்ணியிருக்கிறதென்பதையும் மறுக்க முடியாது" என்று எழுதியிருக்கிறது.

இந்தக் குணங்களை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் உண்டாக்கி யிருக்குமேயானால், இந்தியாவிலுள்ள மற்ற எல்லா ஸ்தாபனங் களையும்விட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதிகபலன் அளித்திருக்கிறது என்பதில் சந்தேகம் உண்டா ? ஆதலால் இந்து மகா சமூகமானது, ஒரு கூட்டத்தாரின், ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு அநுகூலமானதேயல்லாமல், தேச பொதுநன்மைக்கும், சமூக ஒற்றுமைக்கும் உற்றதல்லவென்பதையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான், தேச ஒற்றுமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும்,பரஸ்பர நம்பிக்கைக்கும், சஞ்சீவி என்பதையும் நாம் உறுதியாகச் சொல்லுவோம்.

குடி அரசு - தலையங்கம் 13 . 12 . 1925

2 comments:

Anonymous said...

i love his writing. He is such a logical thinking persion. Hats off to PERIYAR.. He is definitely a grate personality.
Fyi: i am a brahmin by birth, though i feel bad when PERIYARs so called followers forget what periyar wrote/taught and blindly hitting brahmin's still.. If PERIYAR live today then he will hate 'the guys now a days call themselve a follower of him'

Anonymous said...

Really i agree with that, unfortunately nobody is going to look into this, they are going believe in, what they are getting ,the fake and intetional news from the so called medai.