29 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்- இறுதி பகுதி

பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள். (கு.8.3.36;14:3)

இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னாவாகும்?எந்தச் சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம். (கு.27.10.40;3:3)

இன்றையப் பெண்கள், வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள், அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது. (வி.26.5.58;1:பெ,செ.)

குழந்தை மணம் ஒழிந்து, திருமண ரத்து, விதவைமணம்,கலப்புமணம், திருமண உரிமை ஆகியவைகள் இருக்குமேயானால் இன்றுள்ள விபசாரத்தில் 100-க்கு 90 பகுதி மறைந்து போகும். (வி.21.3.50;பெ.செ.)

பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும், அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம்ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். (கு.12.8.23;10:3)

2 comments:

சுந்தரவடிவேல் said...

திரு,
இந்தத் தொகுப்பு வலைப்பதிவுக்கு முதலில் நன்றி.
நேற்று யோசித்துக்கொண்டிருந்தது: பெண் இயற்கையிலேயே அறச்சீற்றம் மிக்கவள். தற்பாதுகாப்பும், வீரமும் மிக்கவள். அவளைப் பெண் தெய்வமாக்கி அவ்வலிமையைப் போற்றியிருந்தது சமூகம். அவளுக்குள்ளிருந்த இத்தகைய வீரம்பொருந்திய குணங்களை ஆணாதிக்கம் தனது தொடர்ந்த 'உபதேசங்களாலும்' பெண் என்பவள் மென்மையான மனங்கொண்டவளாகவே எப்போதும் இருக்க வேண்டும், பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டாலும் எவ்வித எதிர்ப்புமின்றி உடன்படுபவளாகவே இருக்க வேண்டும் என்பன போன்ற விடாமுயற்சிக் கருத்துருவாக்கங்களாலும் அடிமாட்டு நிலைக்குத் தள்ளி வைத்திருக்கிறது. பெண்கள் தம் உன்னத/உண்மை நிலையை அடைய அவர்கள் எடுக்க வேண்டிய முதற்படி, தம் அறச்சீற்றத்தை மறுபடியும் கண்டுபிடித்துத் தொடர்ந்து பயன்படுத்துவது.
நன்றி திரு.
பி.கு. இன்று வெற்றிடவிரும்பி பெரியார் படம் பற்றிய நல்லதொரு பதிவை இட்டிருக்கிறார். பார்க்கவும்.

thiru said...

நன்றி திரு.சுந்தரவடிவேல் அண்ணா. அண்ணா என கூப்பிடலாம் தானே?