12 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்3

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4)

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை - ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (கு.21.7.46;2:2)

பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும். (வி.14.2.61;1:பெ,செ.)

திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமா என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக, நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையே தான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள்.(வி.5.4.61;1:பெ.செ.)

No comments: