மற்றவர்கள், பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும் குடும்பச் சொத்து குறையாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியம் என்று கூறுகின்றார்கள். பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சைபெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். (கு.6.4.30;10:9)
பெண்ணைக் கொல்ல ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொல்லப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும். (கு.12.2.28.13.3)
ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள், பலப்பட்டுக் கொண்டு வருகின்றன, பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சிகளே ஒழிய வேறல்ல. எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? (கு.12.8.28;10:1-2)
(தொடரும்)
No comments:
Post a Comment