09 November 2006

வர்ணாஸ்ரமமும் சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலும்

முந்தைய காஞ்சி சங்கராச்சாரியார் அருளிய வார்த்தைகளிலிருந்து சில பகுதிகள் இங்கே.

சிவப்பு வண்ண எழுத்துகள் எனது கேள்விகள்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்), வைதிக மதம்

வர்ண தர்மம்
.............................நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ணம் தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள். (அவர்களுக்கு வேற வேலையில்ல இராமசாமியார் வந்து சீர்திருத்தம், சுயமரியாதை அது இதுன்னு சொல்லி இதுவரை கேள்வி கேட்காம இருந்தவாளை எல்லாம் கிளப்பி விட்டுட்டார். இத தானே சொல்லுறேள் சாமி?)

.................மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே ஸாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் வித்தித்திருக்கிறது. அஹிம்ஸை, சத்தியம், தூய்மை, புலனடக்கம் தேவைக்கு அதிகமாக ஒரு துரும்பைக்கூடத் தனக்கென வைத்துக் கொள்ளாமலிருப்பது, தெய்வ பக்தி, மாதா பிதா விடம் விசுவாஸம், சகல ஜீவராசிகளிடத்துலும் சமமான அன்பு, இவை எல்லாம் எல்லாருக்கும் நம் மதத்தில் விதிக்கப்பட்ட ஸாமான்ய தர்மங்கள். (இந்த ஸாமான்ய தர்மத்தை கோட்சே, நரேந்திர மோடி, மத தீவிரவாத இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ் போன்றவை கடைப்பிடிக்க வேண்டாமுங்களா சாமி?) அது தவிர வர்ணம் என்ற பெயரில் சமூகத்தைப் பரம்பரை ரீதியில் வெவ்வேறு தொழில்களாகப் பல பிரிவாகப் பிரித்து சில விசேஷ தர்மங்கள் அவரவருக்கும் விதிக்கப்படிருக்கின்றன.

...............................

யோசித்துப் பார்த்தால், நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்தபிற்பாடுதான், மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது (மக்கள் விழிப்புணர்வு அடைந்து சூட்சுமத்தை புரிந்து கொண்டதன் விளைவு இதுன்னு சொல்ல வறேளா சாமி?).

.................பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் என்னை யார் என்ன செய்துவிடமுடியும் என்று மூச்சைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு உயிர்வாழ்கிறது. இதன் சூக்ஷ்மத்தை நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைத் தெளிவாக வைத்துக் கொண்டு ஆலோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆயிரம் பதினாராயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன. அப்படியாவது, நம் சாஸ்திரங்களை ரக்ஷித்துக் கொண்ப்பதே ஸ்வதர்மம் என்று கொண்டிருந்த பிராம்மணர்கள் பெருமாபான்மையினராக (மெஜாரிட்டியாக) இருந்தார்களா இல்லை. அவர்கள் ஆயுத பலத்தையாவது வைத்துக் கொண்டிருந்தாரா. அதுவும் இல்லை. பிராமணன் பணம் சேர்த்து வைப்பது ரொம்பப் பிற்காலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட விபரீதம்தான். சாஸ்திரப்படி பிராமணன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். இப்படிப் பணம் இல்லாமல், பலமும் இல்லாமல், எண்ணிக்கையிலும் பெரும்பான்மையாக இல்லாமல் இருக்கிறவர்கள் விதித்த சாஸ்திரப் பிரிவினைகளை மற்றவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும். (பிராமணர்கள் தான் வர்ணசாஸ்திரத்தை விதித்தார்கள்னு சொல்லுறேள்) மற்ற அத்தனைப் பேரும் அத்தனை காலமும் ஏமாந்தவர்களாகவா இருந்தார்கள். அப்படி இவர்கள் ஏமாந்து போயிருந்தால்கூட, அவ்வப்போது ஒரு புத்தர், ஒரு ஜீனர் மாதிரி ரொம்பப் பெரியவராக ரொம்பச் செல்வாக்கோடு ஒருத்தர் வந்து இந்த வேதம், யாகம் இதெல்லாம் வேண்டாம். எல்லா ஜனங்களுக்கும் பொதுவான சாமான்ய தர்மங்களை மட்டும் வைத்துக் கொள்வோம். ஸமஸ்கிருதம் வேண்டாம். பொது ஜனங்களின் பிராகிருத பாஷைகளான பாலி முதலியவைகளிலேயே நம்முடையது புது சாஸ்திரங்களை வைத்துக் கொள்வோம் என்று புதிய வழியைக் காட்டினால்கூட ஜனங்கள் அப்போதைக்கு ஏதோ ஒரு வசீகரத்தால் அந்தப் புது மதங்களில் சேர்ந்து இருக்கிறார்களேயழிய, அப்புறம் அவற்றின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடைசியில் அவை ரொம்பவும் தேய்ந்து போயே போய் விடுகின்றன. பார்த்தால், பழைய வைதிக மதமே செத்தேனாபார் என்று தலையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறது. (கடைசியா சுற்றி சுற்றி வந்து வர்ணாஸ்ரம சாதிமுறையை மாற்றக்கூடாதுன்னு சொல்ல வறேளா சாமி?)

நிஷ்பக்ஷபாதமாக இதை ஆராய்து பார்த்தால் என்ன தெரிகிறது. மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி. மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாராயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத ஒன்று இவற்றில் இருக்கிறது என்று தானே அர்த்தம். அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியோகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரீகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது. நவீன யுகத்தில் சமத்துவம் என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்திற்கு ரொம்பவும் க்ஷிக்ஷமம் விளைவிப்பதாகப் பழைய தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது. (அந்த எதுவோ என்பது என்ன சாமி உறுதியாக சொல்லுங்களேன், யூகமாக சொல்லுறேளே) அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது.

வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையில் மனிதனை பிரித்து வைத்து சாதிகளாக கூறு போட்டு, ஒரு சாதி இன்னொரு சாதியை அடிமைப்படுத்தி, கொலை, பாலியல் பலாத்காரம் என அட்டூழியங்கள் நடத்தி சக மனிதனை கேவலமாக நடத்துவதை சங்கராச்சாரியார் எப்படியெல்லாம் ஆதரிக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

3 comments:

கோவி.கண்ணன் [GK] said...

தெய்வத்தின் 'குரல்' நீண்ட நாளாக படித்து 'தெளிய' வேண்டும் என்றிருந்தேன். இதுதானா அது !

இன்ப தேன் வந்து பாயுது காதினிலே !

thiru said...

//கோவி.கண்ணன் [GK] said...
தெய்வத்தின் 'குரல்' நீண்ட நாளாக படித்து 'தெளிய' வேண்டும் என்றிருந்தேன். இதுதானா அது !

இன்ப தேன் வந்து பாயுது காதினிலே !//

கண்ணன்,

இது மட்டுமல்ல... திகட்ட திகட்ட இன்னும் நிறைய இருக்கிறது. தெய்வத்தின் குரலின் ஓங்காரம்...ம்ம்ம்

குழலி / Kuzhali said...

//மக்கள் விழிப்புணர்வு அடைந்து சூட்சுமத்தை புரிந்து கொண்டதன் விளைவு இதுன்னு சொல்ல வறேளா சாமி?//
ம்... சரியாத்தான் சொல்லியிருக்கிங்க....