23 November 2006

ஒடுக்கப்படுகிற மக்களே ஒன்றுபடுங்கள்!

நேற்று இரவு 8 மணிக்கு இந்தியாவின் தலித் மக்களது நிலை பற்றிய ஒரு கலந்துரையாடல் நடந்தது. இந்தியாவிலிருந்து மூன்று தலித் பெண்கள் ஹாலந்து நாட்டின் ஹேக் மாநகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இந்த கலந்துரையாடலில் வந்திருந்தனர். அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது கூட்டத்தில் அனைவரது முகமும் அதிர்ச்சியில் உறைந்திருந்தது.

உலகை அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குள் ஆதிக்கம் செலுத்த துடித்து, "நான் வளர்கிறேனே மம்மி" விளம்பரத்தில் திளைக்கிற இந்தியாவை பற்றி இந்த "தேசவிரோதிகள்" வெளிநாட்டினர் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்க பேசியது என்ன?

"உங்களுக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற இந்தியா 20 சதவிகித மக்களை பற்றியது. அவர்களுடைய வளர்ச்சி, கனவு, திட்டம், மதம், கொள்கை, வாழ்க்கை பற்றியது. இந்த திரைக்கு பின்னால் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை போராட்டம் மறைக்கப்படுகிறது."

"பெண்களுக்கான திட்டங்களும் ஒதுக்கீடுகளும் ஆதிக்க வகுப்பை சார்ந்த பெண்களுக்கே சேர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், மேல்சாதியினரின் கல்வி வளர்ச்சிக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. இது எங்கள் மக்கள் வேலை மற்றும் தலைமை பொறுப்புகளில் வருவதற்கு எதிரான தடை. கிடைக்கிற சில திட்டங்களில் கூட ஆண்களுக்கே கிடைத்து விடுவதால் ஒடுக்கப்பட்ட பெண்கள் இரண்டு விதமான ஒடுக்குமுறையை சந்திக்கிறார்கள். ஒன்று சாதி சார்ந்தது இன்னொன்று ஆணாதிக்கம் சார்ந்தது."

"எங்கள் உடம்பில் பட்ட காற்று கூட மேல்சாதி வீடுகளில் வீசினால் தீட்டாம். இதனாலே ஆண்டாண்டு காலமாக எங்கள் குடிசைப் பகுதிகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்திலேயே தள்ளி இருக்குது..."
- ஜான்சி, ஆந்திரா மாநிலம்.

காற்று பட்டால் கூட தீட்டாக ஒதுக்கி வைக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட பெண்களை வன்புணர்ச்சி செய்கிற வேளைகளில் மேல்சாதி ஆணாதிக்க வர்க்கத்திற்கு "தீட்டு" பற்றிய கவலையில்லை. அவர்களது மதமே அதை தான் அவர்களுக்கு கற்றுத் தருகிறது.

"பெண்களையும், நாயையும் தினமும் அடித்து வளர்க்க வேண்டும்"
- மனு தர்மம்.
சாதியாதிக்கமும், ஆணாதிக்கமும் கலந்த இந்த கொடுமையான மத கோட்பாடுகளை தலையில் தூக்கி வைத்து ஆடும் வரை சாதீய விடுதலை எளிதான செயலல்ல.

"என்னோட பாட்டி பீ அள்ளி அகற்றும் வேலை பாத்தாங்க, என் அம்மாவும் அதை தான் செய்தாங்க, நானும் அதையே செய்திருக்கேன்....இந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு கண்பார்வை, இதயம், ஈரல், தோல் சார்ந்த நோய்கள் அதிகமா வந்து ஆரோக்கியமற்று வாழுறாங்க" - தனது பரம்பரை அடிமையாக்கப்பட்டது பற்றி, உத்தரபிரதேசத்திலிருந்து, மஞ்சு வால்மீகி

நம்மிடையே "இன்னும்" 7 தலைமுறைகளின் பெயர், வரலாறு, பரம்பரை குலப்பெருமை என பெருமிதம் கொள்பவர்களுக்கும் ஒடுக்கபடுகிற மக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி என்பது ஒரு அடக்குமுறையின் வரலாற்றுப் பதிவு.

தகுதியும் திறமையும் பற்றிய வாதங்களால் அடக்குமுறையை ஆதரிப்பது என்பது இன்று அறிவுசீவித்தனமாக வளர்கிறது. பரம்பரை பரம்பரையாக "இழிபிறவிகளாக" நடத்தப்பட்டு வந்தவர்கள் ஒரு தலைமுறை அலல்து இரு தலைமுறை கல்வி, வேலைவாய்ப்பில் குலப்பெருமை பேசும் ஆதிக்கசாதியினருடன் தகுதி, திறமை என்ற அளவுகோலில் போட்டியிட சொல்வது மோசடியான ஆதிக்கமனப்பான்மை. இடஒதுக்கீடு அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்தும் ஒடுக்கப்பட்ட மக்களில் நிலை நம்பிக்கையற்ற, அடையாளம் இல்லாது கல்வி, வேலைவாய்ப்பற்ற நிலையில் இருக்கிறது.

அவர்களின் அடையாளம் ஒடுக்கப்படுகிற சாதியினர் என்பதே! இந்த அடையாளம் ஒரு போராட்ட கருவியாக அமைதல் அவசியம். ஆதிக்கசாதியினரின் சாதித் திமிர் பிடித்த சங்கங்களுக்கும், அடக்கப்படுபவனின் ஒன்று கூடல் அடையாளத்திற்கும் வேறுபாடு அதிகம். வெள்ளையினத்தவரின் அடக்குமுறைக்கு எதிராக கறுப்பின மக்களின் அமைப்புகள் எழுந்ததை யாரும் வரலாற்றில் குறை சொல்லவில்லை. கறுப்பு என்ற இழிவாக நடத்தப்பட்ட ஆயுதம் மறுப்பக்கத்தில் விடுதலைக்கான கூரான சிந்தனையியலை உருவாக்கியது. இப்படியான் அடையாளத்திலிருந்து பிறந்த விடுதலை வேட்கையினால் தான் தென்னாப்பிரிக்காவில் வாழுகிற இந்தியர்கள் கறுப்பின மக்களுடன் ஒரே களத்தில் நிறவெறியை எதிர்த்து நின்றார்கள். ஒடுக்கப்படுகிற மக்கள் ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கிற பங்காளி வேற்றுமைகளை கழைந்து ஆதரவு சக்திகளுடன் இந்தியாவின் சாதீய விடுதலைப் போராட்டத்தில் ஒன்று சேர்வது இன்றைய காலத்தின் அவசியம். இந்த ஆயுதத்தை பறித்து ஆதிக்கத்தை நிலை நாட்டவே பார்ப்பனீய சக்திகள் "நாம் அனைவரும் இந்து" என கூவியழைக்கிறது. ஒடுக்கப்படுகிற மக்களே ஒன்றுபடுங்கள்!

"நமது யுத்தம் செல்வம் சேர்ப்பதற்கானதோ, அதிகாரத்திற்கானதோ அல்ல, இது விடுதலைக்கான யுத்தம், நமது ஆளுமையை மீட்டெடுப்பதற்கான யுத்தமிது." -டாக்டர்.பாபாசாகேப். அம்பேத்கார்.

7 comments:

நாமக்கல் சிபி said...

//என்னோட பாட்டி பீ அள்ளி அகற்றும் வேலை பாத்தாங்க, என் அம்மாவும் அதை தான் செய்தாங்க, நானும் அதையே செய்திருக்கேன்....இந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு கண்பார்வை, இதயம், ஈரல், தோல் சார்ந்த நோய்கள் அதிகமா வந்து ஆரோக்கியமற்று வாழுறாங்க" - தனது பரம்பரை அடிமையாக்கப்பட்டது பற்றி, உத்தரபிரதேசத்திலிருந்து, மஞ்சு வால்மீகி

//

படித்தவுடன் கண்ணீரை வரவழைத்துவிட்டது திரு சகா அவர்களே!

சோஃபிஷ்டிக்கேட்டாக வாழ்பவர்களை வைத்து இந்தியாவின் வளர்ச்சியை மதிப்பீடு செய்யமுடியாது.

:(

மாசிலா said...

நல்ல பதிவு.
//"நாம் அனைவரும் இந்து" என கூவியழைக்கிறது."//
மதவெறி பிடித்த இம்மிருகங்கள் தன் ஆதிக்க வெறியை பாதுகாத்துக்கொள்ள நடத்தும் நாடகமே இந்த பிதற்றல். உள் நாடு, வெளி நாடுகள் ஆகியவைகளிடம் எதிர்ப்பினையும், எரிச்சலையும் சம்பாதித்துக்கொண்ட இந்த வர்க்கம் தான் விதைத்து வளர்த்த விணையை அறுவடைய செய்யும் காலம் நெருங்கிக்கொண்டே வருகிறது. தாங்கள் விரித்த பாவ வலையில் வகையாக சிக்கிக்கொண்டார்கள்.
காலம் இவர்களை சும்மா விடாது.

Anonymous said...

In the name of Dalits you are showing your hatred and bias
against Hinduism. How about
the position of Dalit Christians
and Dalit Muslims.Race is different from caste.Racism is
not the equivalent of casteism.

திரு said...

//நாமக்கல் சிபி @15516963 said...
//என்னோட பாட்டி பீ அள்ளி அகற்றும் வேலை பாத்தாங்க, என் அம்மாவும் அதை தான் செய்தாங்க, நானும் அதையே செய்திருக்கேன்....இந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு கண்பார்வை, இதயம், ஈரல், தோல் சார்ந்த நோய்கள் அதிகமா வந்து ஆரோக்கியமற்று வாழுறாங்க" - தனது பரம்பரை அடிமையாக்கப்பட்டது பற்றி, உத்தரபிரதேசத்திலிருந்து, மஞ்சு வால்மீகி

//

படித்தவுடன் கண்ணீரை வரவழைத்துவிட்டது திரு சகா அவர்களே!

சோஃபிஷ்டிக்கேட்டாக வாழ்பவர்களை வைத்து இந்தியாவின் வளர்ச்சியை மதிப்பீடு செய்யமுடியாது.

:(//

சிபி சகா,

கேட்கிற, படிக்கிற நமக்கு இவ்வளவு வலின்னா, அனுபவிக்கிற மக்களுக்கு?

நினைக்க முடியல!

திரு said...

கருத்துக்களுக்கு நன்றி மாசிலா

திரு said...

//Anonymous said...
In the name of Dalits you are showing your hatred and bias
against Hinduism.//

அன்பின் அனானி,

தலித் மக்களது உண்மை வாழ்வை சொல்லுவது இந்துமதத்திற்கு எதிரானது என ஒப்புக்கொள்கிறீர்கள்! உண்மை தான் இந்து மதம் என காட்டப்படுகிற பார்ப்பனீயம் தலித்களுக்கு எதிரானது தான். இந்த அவலமான வாழ்வில் ஒரு மணிநேரம் வாழ்ந்து பாருங்கள் உங்களுக்கே பார்ப்பனீயம் பற்றி விளங்கும்.

//How about
the position of Dalit Christians
and Dalit Muslims.//
தலித் மக்கள் வாழ்வை பற்றி பேசுகையில் பிற மதங்களை இழுத்து அந்த இடுக்கில் தப்பிக்க முயல வேண்டாம். மதகோட்பாடு அடிப்படையில் ஆதாரம் காட்டுவதால், வேறு ஒரு மதத்திற்காக பரிந்து பேச எனக்கு அவசியமில்லை. மனிதனை மனிதனாக மதிக்காத எதுவும் மாற்றம் பெற வேண்டும்! அது மதங்களுக்கும் பொருந்தும்.

//Race is different from caste.//
ஆம். இனமும் சாதீயமும் வேறுபட்டவை!

//Racism is
not the equivalent of casteism.//

ஆனால் சாதீயம் நிறவெறியை விட கொடுமையும் ஆபத்தும் நிறைந்தது!

Anonymous said...

இதனை வாசிக்க மிகவும் கவலையாக இருக்கிறது... ஏட்டிலும் எழுத்திலும் சாதி இரண்டு ஒழிய வேறில்லை என்று பலர் பேசுகிறார்கள்... ஆனால் அது மேலோட்டப் பேச்சு மட்டுமே... மற்றவர்களுக்குச் சொல்வதற்கும் தான் நல்ல பெயர் எடுப்பதற்கும்... ஆனால் அவரவர் தத்தமது வீட்டில்... தன்க்கு என்று வரும்போது ஏடு, எழுத்துப் பேச்சு எல்லாம் காற்றோடு கலந்து தெரியாமல் போய்விடும்...
மேலை நாட்டிலும் இதனைக் கடைப்பிடிக்கின்றனர்...
இப்போதும் இப்படியான செயல்கள் நடப்பதை அறிய வெறுப்பு வருகிறது...

மக்கள் எல்லாரும் பொங்கி எழுந்தால் யார் தான் தடுக்க முடியும்? எத்தனை நாள் அடுக்குமுறையைப் பொறுப்பது?

சில கதைகளைக் கேட்டு அறியும் போது அருவருப்பு ஏற்படுகிறது!
வெவ்வேறு சாதி மக்களுக்கு வெவ்வேரு ஆலயங்கள் (இந்து, கிறிஸ்தவ.. அல்லது என்னமோ..), வெவ்வேறு மதகுருமார் இருக்கின்றார்கள் என்று ஒரு முறை கேள்விப்பட்டபோது அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் இருந்தது? எந்தக் கடவுள் எந்த வேதத்தில் (இது தனிப்பட்டு எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை)இப்படிச் சொல்லி இருக்கிறார்? இப்படிச் செய்வதே முதல் பாவம் என்பது தெளிவாகச் சிந்தித்தால் புலன் படும்.

என்றுதான் திருந்தும் இந்த மானிடம்???