05 March 2007

கற்பக்கிரகத்தில் தலித் - (குறுங்கதை)

"பெருமாளே..." வலியில் கதறுகிறார் அர்ச்சகர் நாராயணன்.

"செத்த நாழி பொறுத்துக்கோங்கோ. புரோக்கரையும், வக்கீலையும், கிட்னி தாறவாளையும் கூட்டிண்டு கையெழுத்து வாங்க டாக்டர் ரூமுக்கு ரகு போயிட்டான். செத்த நாழியில ஆப்பரேசன் பண்ணிடுறதா சொல்லிட்டா. எல்லாம் செரியாகிடும் பெருமாள் காப்பாத்துவார்" ஆறுதல் சொல்லுகிறார் அர்ச்சகரின் ஆத்துக்காரி சுஜாதா.

அர்ச்சகருக்கு ஆறுதல் சொன்னாலும் மனசு முழுசும் 'ஸ்ரீராம ஜெயம்' சொல்லிக்கொண்டே ஓரக்கண்ணில் வழியும் கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைக்கிறாள் சுஜாதா அம்மாள்.

கண்ணை மூடி தன் புருசன் பூஜை செய்யும் பெருமாள் சந்நிதியை மனதில் நினைத்து மாங்கல்யத்தை கெட்டியாக பிடித்தபடி, "பகவானே ஆத்துக்காரரை காப்பாத்து! பகவான் புண்ணியத்துல எல்லாம் நல்லா முடிஞ்சா பெருமாள் சந்நிதிக்கு அழைச்சிண்டு வறேன்" திருப்பதி வெங்கடாசலபதியை நினைத்து உருக்கமாக வேண்டுகிறாள்.

காஞ்சிபுரம் கோயில்ல பெருமாளுக்கு பூஜை செய்ற அர்ச்சகரை முதலில் சந்தித்த கணங்களை சுஜாதா நினைத்தபடியே பெருமாளை வேண்டிக்கொள்கின்றார்.
-000-
"நான் படுற வேதனை எம் புள்ளைக்கு வரக்கூடாது. வீசுற நாத்தத்தையும் பொறுத்து சாக்கடையில் மூழ்கி அடைப்பெடுக்கும் இந்த முனிசிபாலிட்டி வேலைய பாக்குறதே எம்புள்ள படிச்சு முன்னேறணும்னு தான். அவளுக்கு படிக்க பீஸ் கட்ட கந்து வட்டி கடன் வாங்கினதுல குவிஞ்சு கிடக்கிற கடனை அடைக்க இத விட்டா வேற என்ன வழி? கிட்னிய வித்தாவது மானத்தை காப்பத்தணுமே!" நீட்டிய பத்திரங்களில் கையெழுத்து போடும் முனியன் மனதிற்குள் வேதனையை கொட்டுகிறான்.

தடபுடலாக ஆப்பரேசன் நடக்கிறது. இரண்டு தினங்கள் கழித்து முனியனின் கையில் மாத்திரைகளும், 40,000 ரூபாயும் திணிக்கப்படுகிறது. பேசியபடி 5 லட்சம் ரூபாயும், மாதம் தோறும் 2000 ரூபாயும் வருமென நினைத்த முனியனுக்கு முதல் அதிர்ச்சி!
-0000-
முனியனின் கிட்னியால் குணமடைந்த அர்ச்சகர் கோயிலில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். பழையபடி வேலைக்கு போகமுடியாத முனியன் பேசிய தொகையை வசூலிக்க அர்ச்சகரை தேடி கோயிலில் காத்திருக்கிறான்.

'போ வெளியே! இங்கேயெல்லாம் வரப்படாது. சாமிக்கு தீட்டு! அபச்சாரம்' என்கிறார் அர்ச்சகர்.

'என்ன சாமி எங்கிட்ட வாங்கின கிட்னிக்கு காசு கேக்க தானே வந்தேன். இதில எங்கே தீட்டு? நான் வந்தா அபச்சாரம் ஆனா, என் கிட்னிய ஒங்க ஒடம்புல பொருத்துனா மட்டும் அபச்சாரமில்லையா?' என்றான் முனியன்.

அர்ச்சகரின் முகத்தில் ஆயிரம் கைகள் ஓங்கி அறைவது போல உணர்கிறார். தாழ்த்தப்பட்டவன் நுழைய அனுமதிக்காத வர்ணாஸ்ரம கற்பக்கிரகத்தில் தாழ்த்தப்பட்டவனது கிட்னி நுழைவதை அர்ச்சகராலும் தடுக்க முடியவில்லை.
உயிர்பயத்தின் முன்னர் பெருமாளாவது, தீட்டாவது! வர்ணாஸ்ரமம் தலைகுனியத்தான் வேண்டும்!

11 comments:

சிவபாலன் said...

திரு,

நல்ல கதை!!

வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

நல்ல கதை. கதையின் கருத்து சரியானது. உயிர் பயத்திற்கு முன்னர் மட்டுமில்லை; பொருட்செல்வத்திற்கு முன்னரும் கொள்கைகள் விடப்படுகின்றன.

தலித் பற்றி அறியாதவர்; அவர்கள் வாழ்க்கை முறை பக்கத்திலிருந்தும் அறியாதவர், தலித் பற்றி எழுதுவது கூடாது என்று ஏதோ ஒரு எழுத்தாளரை (சுஜாதாவையா?) யாரோ கண்டித்தது இந்தப் பதிவைப் படித்த போது நினைவிற்கு வந்தது. 'ஐயோ பெருமாளே' என்று கதறினார் 'தீட்சிதர்' என்று தொடங்கி 'ஆம்படையாள்' என்று கணவனைக் குறித்தது வரை சில புரிதல் தவறுகள் இருக்கின்றன.

திரு said...

//குமரன் (Kumaran) said...
நல்ல கதை. கதையின் கருத்து சரியானது. உயிர் பயத்திற்கு முன்னர் மட்டுமில்லை; பொருட்செல்வத்திற்கு முன்னரும் கொள்கைகள் விடப்படுகின்றன.//

குமரன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

//தலித் பற்றி அறியாதவர்; அவர்கள் வாழ்க்கை முறை பக்கத்திலிருந்தும் அறியாதவர், தலித் பற்றி எழுதுவது கூடாது என்று ஏதோ ஒரு எழுத்தாளரை (சுஜாதாவையா?) யாரோ கண்டித்தது இந்தப் பதிவைப் படித்த போது நினைவிற்கு வந்தது.//

சுஜாதாவை தான்! அக்கிரகாரத்தில் வாழ்ந்து பார்க்காமல் எழுதக்கூடாது என சொல்ல வருகிறீர்களா? இந்த கதையில் தீட்சிதரின் வாழ்க்கை முறையை பற்றி சொல்ல வரவில்லை. ஒடுக்கப்பட்டவன் பார்வையில் எழுதுவதற்கும், ஆதிக்கபார்வையில் எழுதுவதற்கும் வேறுபாடுகள் அதிகம். இதை உணராதவரா நீங்கள்? (!)

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கட்டிக்காக்கிற வர்ணாஸ்ரம பித்தலாட்டம் இன்றைய உறுப்பு மாற்று உலகில் உடைவதை சொல்வது தான் கதையின் கரு. ஆதிக்கச்சாதியில் பிறந்த 80 வயது மூதாட்டிக்கு, ஒடுக்கப்பட்ட பெண்ணின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. தீட்டு என எந்த மருத்துவரோ, ஏன் அந்த மூதாட்டியோ குறிப்பிடவில்லை. இது நடந்த சம்பவம். சில மாற்றங்களுடன் கதையாக புனைந்திருக்கிறேன் அவ்வளவே.

//'ஐயோ பெருமாளே' என்று கதறினார் 'தீட்சிதர்' என்று தொடங்கி 'ஆம்படையாள்' என்று கணவனைக் குறித்தது வரை சில புரிதல் தவறுகள் இருக்கின்றன.//

தவறான புரிதல் அல்ல! சொற்கள்... மாற்ற முயல்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

கோவி.கண்ணன் said...

திரு,
நல்ல கதை ...முன்பு நான்
உடல் உறுப்புக்கள் புனிதம் அடையுமா ? என்ற தலைபில் சிறுகவிதை எழுதினேன்.

தருமி said...

immuno-suppressants கொடுத்துட்டா தீட்டு எல்லாம் போயிரும். உசுருன்னு வந்துட்டா தீட்டாவது, மண்ணாவது. நீங்க சொல்றபடி பார்த்தா அவங்க அப்புறம் ஒண்ணுமே சாப்பிடக் கூட முடியாதே!

கௌசி said...

திரு நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்.முனியன் ஒரு அமைச்சாராகவோ,மாவட்ட அதிகாரியாகவோ இருந்திருந்தால் கோயிலுக்குள் மட்டுமல்ல ,பரிவட்டமே கட்டியிருப்பார்கள்.எனக்குத் தெரிந்து
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் தலித் சமுதாயத்தவர் தன் ஊரில் கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்திருக்கிறார்.
அதிகார பலம்,பணம்,செல்வாக்கு இவைகளுக்கு முன்னால் தலித்தாவது ,தீட்சிதனாவது.அவாள்ளாம் இப்ப ரொம்ப வெவரம்.
அது சரி பெருமாள் கோயில் குருக்களை 'தீட்சிதர்' எனலாமா?
நந்தனுக்கு நந்தி வழிவிட்ட சிதம்பரத்தில் நராஜருக்கு [சிவ ஊழியம் செய்பவர்கள்] பூஜை செய்வோர் தீட்சிதர்கள்.
ஆனால் பணம் செல்வாக்கு,அதிகாரம் இவற்றுக்கும் மீறிய ஒன்று உண்டென்றால் அதுதான் உயிப் பயம்.

ravi srinivas said...

In reality what happens is that the brokers cheat the poor.Brokers and hospitals make money from patients and by cheating the poor.
A poor person irrespective of caste or religion is forced to sell kidney when (s)he is dire straits.To hide this reality you can write any number of stories.
Your intention is not to show the reality but to distort it and divert the reader's attention so
that (s)he will not ask the right questions.

திரு said...

//கௌசி said...
திரு நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்.முனியன் ஒரு அமைச்சாராகவோ,மாவட்ட அதிகாரியாகவோ இருந்திருந்தால் கோயிலுக்குள் மட்டுமல்ல ,பரிவட்டமே கட்டியிருப்பார்கள்.எனக்குத் தெரிந்து
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் தலித் சமுதாயத்தவர் தன் ஊரில் கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்திருக்கிறார்.
அதிகார பலம்,பணம்,செல்வாக்கு இவைகளுக்கு முன்னால் தலித்தாவது ,தீட்சிதனாவது.அவாள்ளாம் இப்ப ரொம்ப வெவரம்.
அது சரி பெருமாள் கோயில் குருக்களை 'தீட்சிதர்' எனலாமா?
நந்தனுக்கு நந்தி வழிவிட்ட சிதம்பரத்தில் நராஜருக்கு [சிவ ஊழியம் செய்பவர்கள்] பூஜை செய்வோர் தீட்சிதர்கள்.
ஆனால் பணம் செல்வாக்கு,அதிகாரம் இவற்றுக்கும் மீறிய ஒன்று உண்டென்றால் அதுதான் உயிப் பயம்.//

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கௌசி.

பணமும், அதிகாரமும் பரிவட்டம் முதல்மரியாதையை பெற்றுத்தரும் என்பது உண்மை தான். கோயிலை கட்டி கும்பாபிசேகம் நடத்தலாம். ஒரு தலித் கர்ப்பகிரகத்துக்குள் போவது என்பது அவ்வளவு எளிதானதா?

இல்லை என்பது தான் இந்தியாவில் நடக்கிற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

கதையில் கற்பக்கிரகம் என்பதை குறியீட்டிற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். தீட்டு என நடைமுறை வாழ்வில் ஒதுக்கப்படும் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின் உறுப்பு ஆதிக்கசாதியினரின் (அர்ச்சகரின் சாதி மட்டுமல்ல, எந்த ஆதிக்கச்சாதியினராக இருந்தாலும்) உடலில் சேரும் போது தீட்டாக உணரப்படுவதில்லை. உயிர் பயம் வரும்போது எந்த சாதிக்காரர்களின் இரத்தம், எந்த சாதிக்காரர்களின் சிறுநீரகம் என யாரும் கேட்பதில்லை. அப்படி கேட்பவர்கள் உயிர் வாழ உறுப்புகள் கிடைப்பது எளிதல்ல. சேரிகளிலிருந்தும், கிராமங்களிலிருந்து அறியாமையில் வாழும் மக்களது உறுப்புகளால் ஆதிக்கச்சாதி, பணக்காரர்கள் உயிர் காப்பற்றப்படுகிறது.

வழிபாடு, சமூக வாழ்க்கைமுறையில் மட்டும் இந்த சாதி வெங்காய வர்ணாஸ்ரம தர்மத்துக்கு என்ன வேலை?

திரு said...

ரவி,

வருக :)

சிறுநீரக திருட்டு பற்றி 'ஆலமரம்' வலைப்பதிவில் தமிழக சிறுநீரக மோசடி அதிர்ச்சியான தகவல்கள்,
சிறுநீரகம் வாங்கலையோ சிறுநீரகம்! என இரு பதிவுகள் எழுதியுள்ளேன். படித்து கருத்துக்களை எழுதுங்கள்.

இந்த கதையின் கரு வேறு நண்பரே! சரியான கேள்விகளை கேட்க வைக்க நீங்கள் எழுதலாமே. வழக்கமான நடையிலான உங்கள் பின்னூட்டம் சிரிப்பை தான் தருகிறது.

திரு said...

==கோவி.கண்ணன் said...
திரு,
நல்ல கதை ...முன்பு நான்
உடல் உறுப்புக்கள் புனிதம் அடையுமா ? என்ற தலைபில் சிறுகவிதை எழுதினேன்.//

சுட்டிக்கும் வருகைக்கும் நன்றி கண்ணன்!

//தருமி said...
immuno-suppressants கொடுத்துட்டா தீட்டு எல்லாம் போயிரும். உசுருன்னு வந்துட்டா தீட்டாவது, மண்ணாவது. நீங்க சொல்றபடி பார்த்தா அவங்க அப்புறம் ஒண்ணுமே சாப்பிடக் கூட முடியாதே!//

:)))

Ram said...

Kathai nalla irukku...yenekkennamo kathaiyin marupakkam konjam uthaikuthu...like 'kidni' ya muniyan kuduthathala thaan antha kurukkal feel panraar ngra mathiri theriyuthu..athu illamale avarukku theriyanum 'muniyanai' anumathikkanum nnu.!! anyway on a first look kathai looks good...keep it up.