09 February 2008

கிராமச் சீர்திருத்தம்-பெரியார் உரை

"தலைவர் அவர்களே! தோழர்களே! இந்தக் கூட்டம் கிராமாதிகாரி ஆவதற்குப் பயிற்சி பெறும் மாணவர்கள் கூட்டமானாலும், இதற்குத் தலைமை வகிப்பவர் ஒரு கல்வி அதிகாரி ஆவார்; இங்கு அருகில் வீற்றிருப்பவர் கிராமாதி காரிகட்கு அதிகாரியாக இருக்கும் "டெப்டி கலெக்டர்" ஆவார்; இருவர்களும் தக்க அதிகாரமும், பொறுப்பும் பெற்ற அதிகாரிகள். அரசியல்வாதியும், பொதுமக்களின் வெறுப்பைப் பெற்ற சமுதாயப் "புரட்சிக்காரனும்" சகல துறையிலும் இந் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருக்கும் மேல் சாதிக்காரர்களால் தங்கள் சமுதாயத்திற்கே எதிரி என்று எண்ணும்படியான விரோதியுமாவேன் நான். இந்த லட்சணத்தில் நான் பழமை வழமை, பெரியோர் கருத்து, சாஸ்திரம், ஆதாரம் என்பவைகளைக் கண்மூடிப் பின்பற்றாத ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்லப்படுபவன். நானும் என்னைப் பொதுவாக ஒரு சீர்த்திருத்த உணர்ச்சியுள்ளவன் என்று உரிமை பாராட்டிக் கொண்டாலும், என்னுடைய சீர்திருத்தம் என்பதானது பழைய அமைப்பு - மத - அடிப்படை என்பவைகளைக் கூட லட்சியம் செய்யாமல் அநேக காரியங்களை அடியோடு அழித்து நிர்மாணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவன், இதனால் என்னை நாசவேலைக்காரன் என்று பலர் சொல்லும்படியானவனுமாவேன்.

இந்த நிலையில் இப்படிப்பட்டவர்கள் முன்னிலையில் "கிராமச் சீர்த்திருத்தம், கிராமத்தின் எதிர்காலத்திட்டம்" என்பதைப் பற்றிப் பேசுவதென்றால், அது இச்சபைக்கு அவ்வளவு திருப்தியாயும், பொருத்தமாகவும் இருக்குமா என்பது கவலைப்படத்தக்கதாக இருக்கிறது. இருந்தாலும் நாடகத்தில் நகைச்சுவை என்பதன் மூலம் எப்படித் தலை கீழான - வெறுப்பான - பல மாறான கருத்துகளைக் கண்டு உடல் துடிக்காமல் அவைகளைச் சகித்துக்கொண்டு அனுபவிக்க றோமோ அதுபோல், நான் சொல்வதைச் சற்று கவனமாய்க் கேட்டு நகைச்சுவையாய் அனுபவித்து வீட்டுக்குச் சென்று நடுநிலையில் இருந்து ஆலோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். ஆத்திரப்படாமல் ஆலோசனையில் இறங்கினால்தான் நல்ல முடிவு கிடைக்கும். எதைச் சொல்கிறேனோ எதை எதிர்பார்க்கிறேனோ அதை தமிழ் நாடு பூராவும் பகுதி செய்கிறது. என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும் திராவிடர் கழகம் ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்து பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும் திராவிடர் கழகத்தினர் தலைசிறந்த கட்டுப் பாடான நாணயமான எந்தவிதமான சுயநலமில்லாத வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்தவித தியாகத்திற்கும் முன்வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரை புகழை தஞ்சை வாங்கிக் கொடுத்துள்ளது.

இது தனிச் சிறப்புக் கொண்ட மாநாடு
உள்ளபடியே சொல்லுகிறேன் பகுதி மக்கள் வெளியில் இருக்கிறார்கள் உள்ளே இடமில்லாததால் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தியிருப்பார்கள் நானும் அப்படித் தான் சொல்லிவிட்டு வந்தேன்.

எனது 40 ஆண்டு பொதுவாழ்க்கையில் எந்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன் சுயமரியாதை இயக்க காலமுதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு மாநாடு ஜமீன்தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள் எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந்தார்கள் நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் 1/2 பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும் அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக்கூட நடந்ததில்லை இன்று திராவிடர் கழக தனிமாநாடு என்பதாக கூட்டியுள்ளோம் என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு ஆதரவான மாநாடு எல்லாவற்றையும்விட சிறப்பு! கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து அந்தந்த நகரங்கள் கிராமங்களிலிருந்தெல்லாம் என்னை தங்கள் குடும்பத்தில் சேர்ந்த ஒருவனாகவே கருதி உணர்ச்சியுள்ள மக்கள் கூடியுள்ள மாநாடு தனிமாநாடு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு எடைக்கு எடை வெள்ளி அளிக்கும் விழா பகுதிக்குமேல் காரணம், மதிப்புள்ள தங்கள் தலைவனுக்கு வழிகாட்டிக்கு இதுவரை நடந்திராத மரியாதை நடக்கிற போது அதை நாம் காண வேண்டாமா? நம் பங்கும் இருக்கவேண்டாமா என்று இவ்வளவு அதிகமான மக்கள் கூடியிருக்கிறார்கள். நான் பெருமைக்காகச் சொல்ல வில்லை எங்கும் கூட்டம் குறைவாக இருந்தால் "கூட்டம் இல்லை" என்று சொல்லுவதுதான் எனது வழக்கம் நானும் நண்பர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். கொள்ளலாம்; முதல் வருணத்தார்தான் படிக்கலாம், 4,5ஆவது வருணத்தார் படிக்கக்கூடாது; படித்தால் உலகம் நடைபெறாது" என்பது போன்ற மனுதர்ம முறைப்படிதானே அனுபவத்தில் கிராமத்திற்கும், நகரத்திற்கும், வருணமுறை ஊர்த் தர்மம் இருந்து வருகிறது. இது உண்மையா இல்லையா? என்று யோசித்துப்பாருங்கள்.

கிராமம் என்றால் என்ன?
கிராமம் என்றால் என்ன? அதில் பள்ளிக்கூடமில்லை, ஆஸ்பத்திரி இல்லை, டிராமா இல்லை, பார்க் இல்லை, நீதி ஸ்தல மில்லை, போலீஸ் காவல் இல்லை, நல்ல ரோட்டு வசதியில்லை, விளக்கு இல்லை, நல்ல தண்ணீர் இல்லை, உயர்ந்த நாகரிகம் என்பது இல்லை, பெரும்பாலும் வயிற்றுக்கு ஆகாரம் சம்பாதிப்பதைவிட, வாழ்வு ஆசைக்குப் பணம் சம்பாதிக்கும் வசதி இல்லை, புத்தியைச் செலவழித்து முற்போக்கடைய வழியில்லை - இப்படி இன்னும் பல வசதிகள் (நகரத்தானுக்கு இருப்பவைகள்) கிராமத்தானுக்கு இல்லையென்பதல்லாமல் கிராமம் என்றால் வேறு என்ன?

ஆனால், "நகரங்களுக்கு ஆதாரம் கிராமங்கள் தான்" என்று சொல்லப்படுகிறது. சொல்லுவது மாத்திரமல்லாமல் கிராமத்தாரின் உழைப்பில் ஏற்பட்ட விளைபொருள்களும், உற்பத்திப் பொருள்களுமே நகரத்தார் அனுபவிக்கவும், நகரத்தார் செல்வவான்களாக ஆகவும், அரசாங்கம் நடக்க வரி கொடுக்கவும், அரசாங்கம் - நகர மக்கள் ஆகியவர்கள் மாத்திரமல்லாமல் கடவுள்கள், கோவில்கள்கூட அங்கிருப்பவர்களும் சேர்ந்து தேவஸ்தான சட்டபடி ஒழுங்காக சகல இன்பங்களும் அனுபவிக்கவும் வசதிகள் இருந்துவருகிறது.

உதாரணமாக
லேவாதேவிக்கு வட்டி கொடுத்துவந்த கிராமங்களான நஞ்சை புஞ்சை நில வசதிகளுள்ள நீர்ப்பாசனமும், பருவம் தவறாமல் மழை பெய்யும் கொழுத்த நீர் வசதியும் உள்ள நிலப்பரப்புக்கு மத்தியில் உள்ள கிராமங்களின் நிலைகள் எப்படி இருக்கிறது? அவர்களின் வீடு வாசல் மக்கள் நிலை எப்படியிருக்கிறது? அவர்களின் வீடு வாசல்- மக்கள் நிலை எப்படியிருக்கிறது? என்பதையும், பொட்டல் காடு, கானல் காடு, பாலைவனங்கள் ஆகியவைகளில் குடியிருக்கும் லேவாதேவித் தொழில்காரர்களான நாட்டுக் கோட்டையார், மார்வாடிகள் ஆகியவர்கள் வீடுகள் எப்படி இருக்கிறது? அவர்கள் வாழ்க்கை நிலைகள் எப்படி இருக்கிறது? என்பதையும் பாருங்கள். இதற்குக் காரணம் என்ன? இது வருணாசிரம முறையா அல்லவா? யோசித்துப் பாருங்கள், மற்றும் பாடுபட்டும் மிராசுதாரர், குடியானவன் ஆகியவர்கள் வீடு எப்படி இருக்கிறது? அவர்களிடம் சரக்கு வாங்கி விற்ற நகர வியாபாரிகள் வீடு, அவர்களது வாழ்வு எப்படியிருக்கிறது பாருங்கள்.

கிராமத்தானுக்குக் கல்வி இல்லாமல் இருந்தால்தானே பயிரிட்டு உழைத்து உழைத்து, அறுத்துமூட்டையாக்கித் தைத்து வண்டியில் போட்டு நகரத்துக்கு அனுப்பிவிட்டு சாவியாய்ப்போன தானியத்தை வீட்டுக்கு எடுத்துக் கொண்டுப் போய் கஞ்சியாகக் காய்ச்சிக் கலயத்தில் ஊற்றி, பிள்ளை குட்டிகளைச் சுற்றி வைத்துக்கொண்டு "இன்று கடவுள் நமக்கு இவ்வளவு கொடுத்தார்" என்று வாழ்த்துப்பாடி, எருமைமாடு தவிட்டுத் தண்ணீர் குடிப்பதுப் போல் வயிறு முட்டக் குடிக்கமுடியும்; அதோடு அவன் திருப்தி அடையவும் முடியும்.

அப்படி இல்லாமல் கிராமத்தானுக்கு கல்வி கொடுத்துவிட்டால் "நாம் உழைக்கிறோம்; நாம் விளைவித்தோம்; நாம் உருப்படி பண்ணினோம். அப்படி இருக்க நாம் கஞ்சி குடிப்பதும், உழைக்காதவன் தரித்துப் புடைத்து ஆக்கிப் படைத்துக் கொண்டு இப்படி தொப்பை வெடிக்க அமுக்குவதா?" என்கின்ற எண்ணம் ஏற்பட்டுவிடாதா? அதனால் தான் கிராமம் ஒரு பஞ்சமனுடைய நிலையில் வைக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையை நிலைக்க வைக்க "கிராமச் சீர்திருத்தம்" என்கின்ற பித்தலாட்டப் பெயரை வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் அதுவும் வருணாசிரம தர்மத்தின் மேல்படியில் இருப்பவர்கள் சீர்திருத்தக்காரர்களைப் பார்த்து பிகிராமத்துக்குச் செல்லுங்கள் பீ (கீச் ஞ்ச் ஞ்குக் ஞீகூஙீஙீஹகீக்சூ) என்று வாயில் கத்திக் கொண்டு ஞாயிற்றுக் கிழமை அன்றைக்கு வியாபாரத்துக்கும்,வக்கீல் வேலைக்கும் (கட்சிக்காரர்களைச் சேர்க்கும் நோக்கத்தோடு) கிராமங்களுக்குச் சென்று விளக்குமாற்றால் (துடைப்பத்தால்) ஒரு வீதியைக் கூட்டிவிட்டு அதற்கொரு பஜனைப் பாட்டைப்பாடி ஒரு கூடையில் அக்குப்பையை வாரித் தூக்கிக் கொண்டு போய் பக்கத்தில் ஒரு சிறு பிரசங்கம்-இராமாயணத்தில் இராவணக் கொடுமையும், அனுமான் பெருமையும், பற்றிப் பேசிவிட்டு வந்துவிட்டால் கிராமம் சீர்ப்பட்டு விடுமா என்று யோசித்துப் பாருங்கள்

கிராமம் எதற்கு ?
கிராமம் என்று ஒரு குப்பைக்காடு எதற்காக இருக்க வேண்டும்? ஆடு, மாடு, எருமை மேய்ப்பதும், அவைகளைக் காப்பாற்றிப் பால், தயிர், நெய், மோர் உற்பத்தி செய்வதும் கிராமத்தான்; அவ்வளவையும் அனுபவித்து வருவது நகரத்தான். இதற்கு என்ன ஆதாரம்? கிராமவாசி கிராமத்தில் இரவு 3மணிக்கு எழுந்து மாட்டுக்குத் தண்ணீர் வைத்து, கொட்டத்தைக் கூட்டி சுத்தம் செய்துவிட்டு 4 மணிக்குப் பால் கறந்துவிட்டு கஞ்சிகாய்ச்சிக் குடித்துவிட்டு 5 மணிக்குப் புறப்பட்டு 3,4,5, மைல் நடந்து 6 மணிக்கு நகரத்துக்கு வந்து நகரத்து மக்களை பிஅய்யா பாலுபீ, பிஅம்மா பாலுக்காரி நான்பீ என்று சொல்லிக் கதவைத் தட்டி எழுப்பி பால் ஊற்றிவிட்டுப் போகிறார்கள். தங்கள் பிள்ளை குட்டிகளுக்குப் பால், நெய் ருசியே தெரியாமல் செய்துவிடுகிறார்கள். இதற்கு பிநகரத்தார் பணம் கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான்பீ. கிராமத்தான் கையில் கிடைத்த இந்தப் பணம்தான் என்ன ஆகிறது. போலீசுக்கு ஒரு பங்கு, முனிசிபல் சிப்பந்திகளுக்கு ஒரு பங்கு போனது போக கனமாக ஏதாவது மீதியிருந்தால் அது வக்கீலுக்கும் அதிகாரிகளுக்கும் போகிறது.

தானியம் விற்பது
நல்ல பெரிய விவசாயி என்பவனும் கிராமத்தில் இருந்தால் இதுபோல் தான். கிராமத்தான் பாடுபட்டுப் பயிராக்கித் தானியமாக்கி நகரத்துக்குக் கொண்டுவந்தால் நகர வியாபாரி கிராமத்தானின் பயிர்ச்செலவு - முட்டுவளிக்குக்கூட பத்தும் பத்தாமல் கணக்குப் போட்டு விலைபேசி ஒன்றுக்கு ஒன்றேகாலாக ஏமாற்றி அளந்து வாங்கிக் கொண்டு மொத்தக் கிரையத்தைத் பிதரகு, மகிமை, சாமிக்காசு, நோட்டு வட்டம், வாசக்காரிக்கு, கலாஸ்காரனுக்கு, வெத்திலை பாக்குச் செலவுபீ என்றெல்லாம் பல செலவுக்கணக்குப் போட்டுப் பிடித்துக்கொண்டு மீதி ஏதோ கொஞ்சம் கொடுக்கிறான். பணத்தை மொத்தமாகக் கண்டறியாத கிராம விவசாயி தன் மீது கருணைவைத்து, கடவுள் இவ்வளவு ரூபாயை கைநிறையக் கொடுத்தார் என்று கருதிக்கொண்டு காப்பி சாப்பிட்டு சினிமாப் பார்த்து விட்டு ஊருக்குப் போகிறான். வியாபாரியோ இந்தச் சரக்கை வாங்கி, இருப்பு வைத்து அதிக விலை வரும்போது விற்று லாபமடைந்த லட்சாதிபதியாகி மாடமாளிகை கட்டிக்கொண்டு கிராமவாசியை வண்டி ஓட்டவும், மாடு மேய்க்கவும், வீட்டு வேலை செய்யவும், உடம்பு பிடிக்கவும் வேலைக்கமர்த்திக் கொள்ளுகிறான்.

சர்க்காருக்கும் கிராமவாசி என்றால், கசாப்புக் கடைக்குப் போகும் ஆடுகள் போலக் காணப்படுகிறார்கள்.

ஆகவே, கிராமம் என்பது தீண்டப்படாத மக்கள் நிலையில்தான் இருந்துவருகிறது. கிராமத்தார் அல்லாத மற்றவர்களுக்கு உழைப்பதற்கு ஆகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அடிப்படையை அப்படியே வைத்துக் கொண்டு கிராமத்தை எவ்வளவு சீர்திருத்தினாலும் கிராமம் பிசூத்திரன் - தீண்டாத ஜாதியானபீ நிலையில்தான் இருக்கும்.

எனவே சமுதாயத்தில் மக்கள் மனிதத்தன்மை பெற வேண்டுமானால் பிராமணன் என்ற ஒரு ஜாதியும் பறையன் என்கின்ற ஜாதிதான் இருக்கவேண்டும் என்று எப்படிக் கருதுகிறோமோ அதுபோல் ஊர்களிலும், பட்டணம், நகரம் என்று சில ஊர்களும், கிராமம், குப்பைக்காடு என்றும் இல்லாமல் பொதுவாக ஊர்கள் தான் இருக்கவேண்டும் என்று ஆக்கப்பட வேண்டும்.

வருணவிகிதமே
வருணாச்சிரம தர்மத்தைப்போல் தான் கிராமங்களும் என்பதற்கு மற்றொரு உதாரணம் பாருங்கள்; ஜனத்தொகைப்படி 100க்கு 90பேர்கள் 4ஆவது, 5ஆவது வருணத்தார்கள்; 10 பேர்கள்தான் மேல் வருணத்தார்களாக (முதல் மூன்று வருணத்தார்களாக) இருப்பார்கள். அதுபோலத்தான் மொத்த ஊர்களில் 100க்கு 90க்கு மேற்பட்ட ஊர்கள் கிராமங்களாக இருக்கின்றன. அதாவது இந்தியா பூராவும் 7லட்சம் கிராமங்கள் என்று தலைவர் சொன்னார். ஆனால் பட்டணங்கள் நகரங்கள் 7500கூட (100க்கு 10 கூட)இருக்காது.

படிப்பு
மற்றும் பார்க்கப்போனால் பட்டணத்தில் உள்ள ஒரு கைவண்டி இழுப்பவன், ஒரு கோர்ட்டுப் பிžன், ஒரு பிச்சையெடுக்கும் புரோகிதன், மணியாட்டும் அர்ச்சகன் ஆகிய இவர்கள் பிள்ளைகள் ந.ந.க.இ. ஆ.அ இஞ்சினீயர், டாக்டர் ஐ.இ.ந.கூடப் படிக்க முடிகின்றது. ஆனால், கிராமத்தில் 100ஏக்ரா, 200ஏக்ரா உள்ள குடியானவன் மகன்கூட எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் வரும்படியில் பகுதி செலவாகிறது. ஏழைக் குடியானவன் மகனுக்கு நடக்கத் தெரிந்ததும் மாடுமேய்க்க வேண்டியதாகத்தான் முடிகிறது. பட்டணங்களில் இருப்பதில் ஒரு கக்கூசு எடுப்பவர், வீதி கூட்டுபவர் குழந்தையும் கட்டாயமாகப் படித்து ஆகவேண்டும் என்று சர்க்கார் உத்திரவுபோடும். இலவசப் பள்ளியும் வைக்கும். ஆனால்; கிராமத்தான் தன் மகனைப் படிப்பிக்க நகரத்துக்கு அனுப்பவேண்டும்; அங்கு மேல்பார்வை இல்லாமல் சிகரெட்டு, பீடி, காடி(கள்) பிராந்தி குடித்து நாசமாக வேண்டும். இதற்கு அருத்தம் என்ன?

ரேஷன்
இவ்வளவு சங்கதி ஏன்? ரேஷனை எடுத்துக் கொள்ளுங்கள். பட்டணத்திலே இருப்பவர்கள் கடவுள்களுக்கு நாட்டுக்கோட்டையார் படி அளப்பதுபோல், ஆளுக்கு இவ்வளவு என்று சர்க்காரால் அளவு அளிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தான்களுக்கு அதுவும் தானியங்களை உற்பத்தி செய்யும் கிராமத்தான்களுக்கு ரேஷன் கடவுளிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. பிகடவுள் தான்பீ அவர்களுக்குப் படி அளக்க வேண்டும். அதாவது ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி நகரத்தானிடம் திருட்டுத் தனமாய் வாங்கிக்கொண்டு போகிறார்கள். பாடுபட்டு விளைவித்ததைக் கொண்டு வந்து வியாபாரியிடம் கொடுத்துவிட்டு அதுவும் திருட்டுத்தனமாக வாங்கிக்கொண்டு போக வேண்டியிருக்கிறது.

உழைப்பு
மேலும் நகர வாழ்க்கை, நகரத்தில் இருந்தால் 100க்கு 90க்கு மேற்பட்ட மக்களுக்கு உடலுழைப்பு இல்லாத சுகவாழ்வு வாழ முடிகிறது. கிராம வாழ்வு, கிராமத்தில் இருந்தால் 100க்கு 90பேர் உடலுழைப்பு வேலையேசெய்தாக வேண்டும். அவர்களுக்குள் ஒரு சிறு தகராறு, சண்டை, விவகாரம் ஏற்பட்டாலும் விவகாரப் பெறுமானத்தைவிட அதிகமான செலவு செய்து நகரத்துக்குப் பல தடவை நடந்து நீதி பெற வேண்டும். இதன் பயனாய் போக்கிரிகளுக்கும், செல்வவான்களுக்கும் அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது.

கிராமாதிகாரி (கிராம அதிகாரி)
இந்த லட்சணத்தில் கிராமாதிகாரிக்குச் சம்பளம் மாதம் 15 ரூபாய். அவர்களுக்கு சப்ளை, தங்கள் நிலைமையை அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள செலவு, குடும்பச் செலவு, நகர அதிகாரிகளுக்குக் கப்பம் ஆகியவைகளுக்கு மாதம் குறைந்தது 100 ரூபாயாவது வேண்டியதாகிவிடுகிறது. இப்படி தேவையாயிருக்கிற அதிகாரிகளிடமிருந்து எப்படி நீதி எதிர்பார்க்க முடியும்? அந்தக் கிராம அதிகாரியும், கிராமத்தானுக்கு அதிகாரி; ஆனால் நகரத்தானுக்குச் சிப்பந்தி.. ஒரு தாலுக்கா சேவகன் கிராமாதிகாரியை பிஏ சேடூர்பீ பிஏ அணை நாவிதன் பாளையம்பீ என்று கூப்பிடுவான்! கிராமத்தானுக்கு தொழிலோ நம் விவசாயமும் கால்நடை மேய்ப்புமாகும்.

விவசாயத்தின் தன்மை
விவசாயம் 200 வருடத்திற்கு முன் இருந்த மாதிரி தான் இன்றும் இருக்கிறது. அதில் நீர்ப்பாய்ச்சல் வசதி, நீர் நிலை தேக்கம், ஆகியவை ஏற்பட்டு சில நிலங்களுக்குப் புதியதாய் நீர்பாசன வசதி ஏற்பட்டது. என்பதல்லாமல் விவசாயத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல் ஒன்றும் ஏற்படவில்லை. சர்க்காரின் விவசாய இலாகாவானது சிலபேருக்கு உத்தியோகத்தைத்தான் கொடுத்தது. அதுவும் விவசாயத்தைத் தொழிலாகக் கொள்ளாத பரம்பரைக்கே பெரிதும் உத்தியோகமாய் முடிந்தது என்பதல்லாமல் மற்றபடி விளைபொருளில் மாறுதல் இல்லை; விளைவு அளவில் கூடுதல் இல்லை; விவசாய முறையில் மாற்றம் இல்லை. விவசாயிகள் விளைபொருளின் சரியான விலையை அனுபவிக்க வழியில்லை. விவசாயி விவசாய ஞானம்பெற வழியில்லை. விவசாயிகள் விஷயத்தில் சர்க்கார் எடுத்துக் கொண்ட மற்ற முயற்சி என்ன என்று பார்ப்போமானால் மேல்நாட்டாரைப்போல் இந் நாட்டு விவசாயிகள் எல்லோரும் படித்த மக்கள் என்று கருதிக்கொண்டு அவர்களுக்கு அறிவுறுத்தத் துண்டுப்பிரசுரம் மூலம் சில முறையைக் கையாண்டார்கள் என்பதைத் தவிர அவர்கள் பெரும்பாலோர் படிப்பும் நாகரிகமும் இல்லாதவர்களாக பட்டணங்களுக்கு வெகு தூரத்தில் இருக்கிறார்கள்; நாகரிகமும் பகுத்தறிவும் அற்ற மக்கள் என்கிற எண்ணமே இல்லாமல் அவர்களுக்கு நலஞ் செய்யும் வழிகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

திட்டம்
உண்மையில் கிராமங்களை சீர்த்திருத்தவேண்டுமானால் நான் சொல்லப்போகும் முக்கியமான காரியங்களைச் செய்ய வேண்டும். விவசாயம் உடலுழைப்பில் நடைபெறுவதை மாற்றி அதை ஒரு தொழில்முறையாக, அதுவும் இயந்திரத் தொழில் முறையாக (இன்டஸ்ட்ரியல் ஆக) ஆக்கப்பட வேண்டும்.

உழுவதும், விதைப்பதும், அறுப்பதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும். கிணறு வெட்டுவதும், தண்ணீர் இறைப்பதும்-பாய்ச்சுவதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும்.

அந்த அளவுக்குப் பூமிகளைத் திருத்தி இணைக்க வேண்டும். அதற்குப் பயன்படாத பூமிகளைத் தனிப்படுத்தி அடிக்கடி பாடுபட வேண்டிய அவசியம் இல்லாத பயிர் செய்ய வேண்டும்.

விளைபொருளால் ஆக்கப்படும் பண்டங்கள் ஆங்காங்கே விவசாயிகள் கூட்டுறவு முறையில் ஆக்கப்பட்டு அந்தப் பயன் விவசாயி களுக்கே கிடைக்க வேண்டும். பல கிராமங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிறு நகரமாக ஆக்கி அதில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பார்க்கு, சினிமா, டிராமா, தமாஷ் அறை, வாசகசாலை, புத்தகசாலை, ரேடியோ நிலையம், நல்லரோடு, கால அளவுப்படி போக்குவரத்துள்ள ஒரு பஸ் ஸ்டாண்டு, போலீஸ் ஸ்டேஷன், நன்றாய் படித்த ஒரு நீதிபதி, சகலசாமான்களும் கிடைக்கத்தக்க கடைகள் ஏற்படுத்த வேண்டும்.

இயங்கும் படியான சுற்றுப்பயணக் கண்காட்சி சாலைகள் அடிக்கடி பற்பல விதத்தில் அமைத்து ஊர்கள் தோறும் சுற்றிச்சுற்றி வரும்படியாகவும் ஆன காரியங்கள் செய்ய வேண்டும்.

ஆங்காங்கு அப்பீல் கோர்ட்டுகள், குறைதெரியும் அதிகாரிகள் சுற்றுப்பிராயாணம் செய்து ஆங்காங்கு வாரா வாரம் காம்ப் போடவும் ஆன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சென்னை 10 லட்சம் ஜனத்தொகை கொண்ட நகரம். கோவை ஒரு லட்சம் ஜனத்தொகை கொண்ட நகரம். இதுபோலவே இப்போது கிராமமாகப் பாவிக்கப்படும் ஈரோட்டிற்குப் பக்கத்தில் உள்ளது கொல்லம்பாளையம், மூலப்பாளையம், சூரம்பட்டி மேட்டுவலசு என்கின்றவை போன்ற பக்கப் பக்க கிராமங்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு ஏதோ ஒரு பெயர் கொண்ட பிசர்க்கிள்பீ ஆக்கி 2500 அல்லது 5000 ஜனத்தொகை கொண்ட நகரமாக ஆக்கிவிட்டு அதை நகரத்தார்கள்; தரகர்கள் சுரண்ட முடியாமல் செய்யவேண்டும்.

"நகரத்தார்களுக்குக்காகத்தான் அவர்கள் வாழ்கிறார்கள் வாழவேண்டும்" என்று சொல்லப்படுவதை அடியோடு மாற்ற வேண்டும்.

அதோடு கூடவே, அந்த இடங்களில் அவற்றிற்குத் தக்கப்படி இயந்திரத்தால் செய்யப்படும் சிறுசிறு தொழிற் சாலைகளை நிறுவி அவர்கள் வேறு ஊருக்குப் பிழைப்புக்கு போகாதபடி பிழைப்பு ஏற்படுத்த வேண்டும். கிராமத்தான், பட்டிக்காட்டான், குப்பைக்காட்டான் என்கின்ற பெயர்கள் ஒரு மனிதனுக்கு ஏன் இருக்க வேண்டும்? அதுவும் பாடுபட்டு உழைக்கும் மனிதனுக்கு ஏன் இருக்க வேண்டும்?

ஆதலால் அப்பெயர்கள் இல்லாமல் செய்யப்பட்டு விடவேண்டும்.

மேல் நாடுகளில்
மேல்நாடுகளில் பெரும்பான்மையான கிராமங்கள் நான் விரும்புகிறபடி தான் இருக்கின்றன.

அதாவது, தார்ரோடு, குழாய், தண்ணீர், எலக்டிரிக்பவர், பஸ் சர்வீஸ், பள்ளிக்கூடம், விளையாட்டு மண்டபம், சமநீதி, தொழிற்சாலை ஆகியவை இல்லாத இடங்கள் (கிராமங்கள்) மேல்நாடுகளில் காண்பது மிகமிக அதிசயமாகும; ரஷ்யாவில் மாத்திரம் சில இடங்கள் கிராமங்கள் போல் காணப்படுகின்றன அதுவும் இதற்குள் நகரமாகி இருக்கும். மற்றபடி அய்ரோப்பாவில் கிராமங்கள் என்ற நிலை இல்லவே இல்லை. இருந்தபோதிலும், அது அந்த இடத்திற்கு ஏற்ற வாழ்வாய் இருக்கலாமே தவிர "பிராமணனுக்குத் தொண்டு செய்வதற்கே கடவுள் சூத்திரர்களை - பஞ்சமர்களை படைத்தார்" என்பது போல் "நகரத்தார் நல்வாழ்வு வாழ்வதற்கே கிராமங்கள் ஏற்பட்டன" என்கின்ற முறையில் கிராமங்கள் அங்கு இல்லை. அங்கு ஏதாவது ஒன்றிரண்டு இருந்தபோதிலும் இங்கு இருக்கக் கூடாது என்று சொல்லுவேன்.

அப்படியானால், விவசாயம் யார் செய்வது? யார் பூமியை பயிர் செய்வது என்று கேட்கப்படலாம். இது, கக்கூசு எடுக்கும் சக்கிலி, பறையர், ஒட்டர் என்பவர்களுக்கு படிப்புக் கொடுத்து மேன்மக்களாக ஆக்கிவிட்டால் கக்கூசு எடுப்பவர்கள் யார் என்று கேட்பது போல் கேட்கப்படுவதாகும். அதற்கு என் பதில் "அந்தத் தொழில்களை நாம் எல்லோரும் (எல்லா இடத்தில் உள்ளவர்களும்) விகிதாச்சாரம் பங்குப்போட்டுக் கொள்ள வேண்டும்" என்பது தான்.

கீழான தொழில்
கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன்மிக்க அற்பமாகவும்-குறையாகவும்- வாழ்வில் இழிவாகவும் இருக்கும் படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். அதுதான் நாட்டு முன்னேற்றமாகும்.

கப்பல் கட்டி எவனோ ஒருவன் கோட்டிஸ்வரனாவது முன்னேற்றமாகாது. எங்கேயோ ஒரு இரும்புத் தொழிற் சாலை வைத்து யாரோ கோட்டீஸ்வரன் ஆனால் நாட்டுக்கு முன்னேற்றமாகிவிடாது.

நான் கூறுகிற முன்னேற்றம் செய்யமுடியவில்லையானால், அதற்கு அதாவது அப்படிப்பட்ட இழிவான கீழான, பிரயாசையான வேலை செய்பவர்களுக்கு அதிக லாபமும், சலுகையும் மேன்மையும் இருக்கும்படியான பிரதிபலன் அடையச் செய்யவேண்டும். இரசாயன முறை, விஞ்ஞான முறை, யந்திர முறை, முதலியவைகளைக் கையாண்டு அவைகளை கிராமங்கள் என்பவைகளில் இருந்து தொடங்குவோமானால் இந்தப் பிரச்சினைகள் சுலபத்தில் தீர்ந்துவிடும். கிராமம் என்கின்ற பெயரும் இழிநிலையும் தானாக மாறிவிடும்.

இதைப் பொதுவுடமை என்றோ சமதர்மம் என்றோ முட்டாள்தனமாய் கருதாமல் முற்போக்கு என்ற முறையில் சிந்தித்தால்தான் இதில் உள்ள நியாயமும் உண்மையும் விளங்கும்.

தொழிலாளிகளும், கிராமவாசிகளும் முன்னைவிட இப்போது சிறிது பணம் அதிகம் சம்பாதிப்பதைக் கொண்டு திருப்தி அடையக் கூடாது.

தொழிலாளிகளுக்கும்-முதலாளிகளுக்கும் முன் இருந்த வித்தியாசமும், கிராமத்தானுக்கும்-பட்டணத்தானுக்கும் முன் இருந்த வித்தியாசமும் பணப்பெருக்கினால் முன்னை விட அதிகமாகி விட்டதே தவிர குறையவில்லை.

அந்த வித்தியாசமானது முன்னைவிட அதிகமான பேதத்தையும், இழிவையும் மனக்குறையையும் உண்டாக்கி மிக்க கீழ்மகனாக ஆக்கிவிட்டது.


(31-10-44ல் ஈரோட்டில் தோழர் ப.சண்முகவேலாயுதம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராம அதிகாரிகள் பயிற்சிப்பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட கல்வி அதிகாரி திரு.வி.கே. ராமன்மேனன், எம்.ஏ.,(பாரிஸ்டர்) அவர்கள் தலைமையில், "கிராமச் சீர்த்திருத்தமும் அவற்றின் எதிர்காலத் திட்டமும்" என்ற தலைப்பில் பெரியார்.ஈ.வெ.ரா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

2 comments:

இனியவன். said...

இவ்வளவு காலத்துக்கு பிறகும் உத்வேகம் ஏற்படுத்த கூடிய உண்மையான வார்த்தைக்கள். படிக்க தந்தமைக்கு நன்றி

Anonymous said...

தொழிலாளிகளுக்கும்-முதலாளிகளுக்கும் முன் இருந்த வித்தியாசமும், கிராமத்தானுக்கும்-பட்டணத்தானுக்கும் முன் இருந்த வித்தியாசமும் பணப்பெருக்கினால் முன்னை விட அதிகமாகி விட்டதே தவிர குறையவில்லை.

அந்த வித்தியாசமானது முன்னைவிட அதிகமான பேதத்தையும், இழிவையும் மனக்குறையையும் உண்டாக்கி மிக்க கீழ்மகனாக ஆக்கிவிட்டது.


Yes, during the last 40 years
thanks to the rule of Kazhagams.