11 February 2008

சாதி அமைப்புமுறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது-பெரியார்

ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?

30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.

(27.4.1953 அன்று, மன்னார் குடி வல்லூரில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் ஆற்றிய உரை. "விடுதலை' 5.5.1953)

8 comments:

அசுரன் said...

////சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.////

வரலாறு நமக்கு கற்றுக் கொடுக்கீறது. பெரியாரின் பார்ப்ப்னிய எதிர்ப்பை அன்றைய கம்யுனிஸ்டுகள் அங்கீகரிக்காததில் இந்திய அரசின் வர்க்க இயல்பு குறித்த அவர்களின் தத்துவார்த்த பார்வை குறைபாடு பங்களிக்கிறது எனில்(அதில் அவர்களின் வர்க்க இயல்பும் பங்காற்றுகிறது), அதன் எதிர்வினையாக அரசை மாற்றாமலேயே பார்ப்ப்னிய எதிர்ப்பு சாத்தியம் என்று சொன்ன பெரியாரின் கருத்தும் இதே அம்சத்தில் தவறுகிறது. அதாவது இந்திய அரசு என்பதே ஒரு பார்ப்ப்னிய அரசு என்பதும், அதன் அதிகார பீடத்திற்க்கு செல்லும் ஒருவன் பார்ப்ப்னியவாதியாக மாறுவதுதான் விதி என்பதும். அரசு இயந்திரம் பார்ப்ப்னிய தன்மைவாய்ந்தது என்பதை பெரியார் விரிவாக பேசியுள்ள போதிலும், மிகக் குறிப்பாக இந்த அரசு என்பதே பார்ப்ப்னியம்தான் இதனை தூக்கியெறிய வேண்டும் என்ற கருத்து அவரிடம் வராததன் காரணங்களில் கம்யுனிஸ்டுகளின் பாத்திரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தத்துவங்கள் சமுதாய வளர்ச்சியில் ஆற்றும் பங்கு குறித்த மார்க்ஸிய வியாக்கியானங்களை நிராகரித்ததாலேயே பார்ப்ப்னியத்திற்க்கு எதிரான பெரியாரின் போராட்டத்தின் சமூகவியல் முக்கியத்துவத்தை அன்றைய கம்யுனிஸ்டுகள் நிராகரித்தனர். இது தத்துவத்தின் வறுமையே. பார்ப்பினியத்தின் பொருளாதார வேர்களை கண்டுனரா கம்யுனிஸ்டுகளின் எதிர்வினை(குறிப்பாக ஜீவாவினுடைய பெரியார் குறித்த பிந்தைய கால கருத்துக்கள்) பார்ப்ப்னியத்தின் அதன் யாதார்த்த நிலையிலிருந்து கண்டுணர்ந்த பெரியாருக்கு எதிராக போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை(முரன்பாடற்ற யாதார்த்தவாதி பெரியார் என்று சொன்னால் மிகையில்லை). பார்ப்ப்னிய தத்துவத்தை பரிசீலிக்க தவறிய கம்யுனிசம், அதன் விளைவாக அதன் பொருளாதார அடித்தளத்தையும் கூட புரிந்துகொள்ள தவறியது. இந்த தவறுகளிலிருந்துதான் பெரியாருக்கு எதிரான வினைகள் தொடங்குகின்றன. இதன் விளைவு பார்ப்ப்னிய எதிர்ப்பு என்பதும் பொருளாதார விடுதலைக்கான போராட்டம் என்பதும் தனித் தனி என்று கருதும் நிலையில் வந்து நிற்கிறது.

கற்பனை செய்து பார்க்கிறேன், ஒருவேளை அன்றைய கம்யுனிஸ்டுகள் உண்மையான பாட்டாளி வர்க்க தன்மை கொண்டவர்களாக இருந்திருந்தால்?..... பார்ப்ப்னியமும், ஏகாதிபத்தியமும் கள்ள உறவு கொண்டவர்கள் இருவரையும் எதிர்க்கும் ஒரு போராட்டமின்றி இந்திய சமூகத்தின் விடுதலை சாத்தியமில்லை என்ற விசயத்தை பெரியார் பேசியிருந்திருப்பார். நமக்கும் பெரியாரியம், மார்க்ஸியம் என்று தனித் தனியாக பேசிக் கொண்டிருக்கும் தேவையில்லாமல் இருந்திருக்கும். ஏனேனில் பெரியார் பொருளாதாரத் துறை பேதமொழிப்பை நிராகரிக்கவில்லை இன்னும் சொன்னால் அதற்க்கு உரிமை கொண்டாடினார். ஆனால் அன்றைய கம்யுனிஸ்டுகள் பார்ப்ப்னிய எதிர்ப்பை அங்கீகரிக்கக் கூட இல்லை. இது வரலாற்று தவறு.

அசுரன்

திரு/Thiru said...

அசுரன்,

விரிவான கருத்துக்களுக்கு நன்றி!

சாதி அடிமைத்தனத்தை சுமந்திருக்கும் ஒருவருக்கு பொருளாதார அடிமைத்தனமும் சேர்ந்தே இருக்கிறது. பெரியார் பொதுவுடமை கொள்கையை எதிர்த்தவரல்ல. சோவியத் ரஸ்யாவிற்கு சென்று வந்த பின்னர் பெரியாரின் பேச்சும், கருத்துக்களும் பொதுவுடமை கொள்கையை ஆதரித்து வந்தன.

ஜீவா போன்ற பொதுவுடமை கொள்கையாளர்கள் பெரியாரை புரிந்துகொள்ளவில்லை. பெரியார் முன்னெடுத்த கொள்கைகளில் ஒன்றான பார்ப்பனீய எதிர்ப்பு போராட்டங்களில் பங்குகொள்வதற்கு பதிலாக எதிர்நிலையில் இருந்தனர். பொதுவுடமை கொள்கை கூட்டங்களில் வர்க்கப்பிரச்சனை மட்டுமே முக்கியமாக, பிரதானமானதாக, முன்னிலைப்படுத்தப்பட்டன. வர்ணம் (சாதி)பிரச்சனை பற்றிய தீர்க்கமான பார்வையும், போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. 1990களில் தான் வர்ணம் பற்றிய விவாதங்கள் எழுப்பப்பட்டு தீண்டாமை ஒழிப்பு மாநாடு/கூட்டங்கள் நடத்தப்பட்டன.

பொதுவுடமை அமைப்புகளின் உயர்மட்ட அமைப்புகளில் தலித்/பிற்படுத்தப்பட்ட மக்கள் தலைவர்களாக பெருமளவில் உருவா(க்)கவில்லை என்பதற்கு காரணமென்ன என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. இத்தனைக்கும் வர்க்க போராட்டங்களில் பண்ணைகளுக்கு/ஆண்டைகளுக்கு எதிராக உயிரையும் பலியாக்கியது இம்மக்களே.

இந்திய அளவில் வர்க்கம், வர்ணம் முக்கிய பிரச்சனை. வாழ்க்கையில் 'முன்னேறவேண்டும்' என்று நினைக்கிறவர்கள் முன்மாதிரியாக எடுப்பது ஒரு பார்ப்பன வாழ்க்கையை. முதலாளித்துவ, சாதி ஆதிக்க கூறுகள் நிரம்பிய பார்ப்பன வாழ்க்கை முன்மாதிரியாக இருக்கும் போது பொருளாதார விடுதலை மட்டும் இலட்சியமாக இருந்தால் நவபார்ப்பனர்களை உருவாக்கும் ஆபத்தில் தான் முடியும். அது தான் இந்திய அளவில் நடந்துகொண்டிருக்கிறது என்று கருதுகிறேன்.

நவபார்ப்பனர்கள் ஆளும் அரசும் நவபார்ப்பனீய கொள்கையை நிலைநிறுத்தவே உதவும். பெரியார், பொதுவுடமையாளர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து போராடியிருந்தால் இன்று நிலை வேறாக இருந்திருக்கலாம்.

பார்ப்பனீயம் இன்று இந்துத்துவ வ்டிவமெடுத்து வழக்கம் போல ஆதிவாசி மக்கள், தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் அனைவரையும் அடியாள் படையாக சேர்த்து இயங்குகிறது. வர்க்க, வர்ண அடுக்குகளில் ஒடுக்கப்படுகிற இடத்திலிருக்கிற இம்மக்கள் ஆதிக்க நிலையிலிருக்கும் பார்ப்பனீயத்தை காப்பாற்ற 'கரச்சேவகர்கள்', 'சுயம்சேவக்கள்' என்று மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாக இந்த மூளைச்சலவைக்கு அன்றும், இன்றும், என்றும் பயன்படும் 'பதார்த்தம்' கடவுள்!

சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தின் போது மத்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் 'ராமன்' பற்றி சமர்ப்பித்த மனுவை பொதுவுடமை அமைப்பினர் மார்க்ஸீய அறிவியல் கோட்பாடு கொண்டு பார்க்க தவறியது தெரிந்தது. களத்தில் போராட வேண்டியவர்கள் இப்படி உணர்வுகள் அடிப்படையில் இயங்க ஆரம்பித்ததன் விளைவு தான் பார்ப்பனீயம் இன்று இந்துத்துவ வடிவத்தில் வந்து நிற்கிறது.

பொதுவுடமை கொள்கையும், பெரியார் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரணானதல்ல. இந்திய சூழலில் ஒன்றோடு மற்றொன்று சார்ந்தது/ஆதரவானது. பெரியார் கருத்துக்களின் தாக்கம் வடநாட்டிற்கு எடுத்துச்செல்லப்படாததன் விளைவு பார்ப்பனீய இந்துத்துவத்திற்கு ஆதரவான களமாக இருக்கிறது.

விரிவாக பேசப்படவேண்டிய விசயங்கள் இவை.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

Anonymous said...

இது உன்னால நான் கெட்டென், என்னாலெ நீ கெட்டாய் என்று பெரியாரியவாதிகளும், பொதுவுடமை கட்சிக்காரர்களும் கூட்டு ஒப்பாரி வைப்பது போலிருக்கிறது. வலைப்பதிவு புரட்சியாளர்களே கிழவி மஞ்சள்த் தேய்த்துக் குளித்த கதைகளை கேட்பது போல பெரியாரிய
புராணங்களை கேட்டு கேட்டுக் கொண்டே இருங்க, உலகம் எங்கேயோ
போய்யிட்டு இருக்கு. அடுத்த தலைமுறை ‘புரட்சியாளர்கள்' உங்களுடைய ‘வரலாற்றுத் தவறு'களைப் பற்றி பேசுவார்கள் :).
உலகில் மிக அதிமான வரலாற்றுத்தவறுகளை செய்த
இந்திய பொதுவுடமை இயக்கத்தின்
பெயர் கின்னஸ் புத்தகத்தில்
இடம் பெறுதல் அவசியம் :).

பெரியார் அன்று பேசியதை, எழுதியதையெல்லாம் இன்று படித்தால்
செம காமெடியாக இருக்கு.

சம்பூகன் said...

தோழ‌ர்.அசுர‌ன் பெரியாரை ப‌ற்றி இங்கு முன்வைத்திருக்கும் ம‌திப்பீடு உண்மையில் சிலிர்க்க‌ச் செய்வ‌தாய் இருக்கிறது., கம்யூனிசத்தை மதமாக பாவிக்கிறார்கள் என்று விமர்சணக்குரல்கள் கேட்கும் வேளையில் கம்யூனிஸ்ட்களை பற்றி ஒரு அச்சமற்ற சுயவிமர்சணத்தை இதில் முன்வைத்திருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்!!

மேலும் பெரியார் அரசை மாற்றாமலே பார்ப்பனீயத்தை தூக்கியெறிய முடியும் என்று கருதியதையும் கூட மேலே அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார், இதற்கு காரணம் அவரது அரசியல் உருவாக்கம் நிகழ்ந்த சமயம் என்றுதான் நாம் கருத‌ வேண்டும், அதுதான் அவர் சட்டபூர்வ கிளர்ச்சியாளராக வடிவமெடுத்ததன் காரணமாய் அமைந்திருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து எழுத முயல்கிறேன்.

சம்பூகன்

Anonymous said...

"பொதுவுடமை அமைப்புகளின் உயர்மட்ட அமைப்புகளில் தலித்/பிற்படுத்தப்பட்ட மக்கள் தலைவர்களாக பெருமளவில் உருவா(க்)கவில்லை என்பதற்கு காரணமென்ன என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது"

திராவிட இயக்க அமைப்புகளின் உயர்மட்ட அமைப்புகளில் தலித் மக்கள் தலைவர்களாக பெருமளவில் உருவா(க்)கவில்லை என்பதற்கு காரணமென்ன என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது? ஊருக்கெல்லாம்
இட ஒதுக்கீடு சொன்ன பெரியார்
ஏன் திராவிடர் கழகத்தில் தலித்களுக்கும், பெண்களுக்கும்
கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீடு
தர வில்லை?

சம்பூகன் said...

//அடுத்த தலைமுறை ‘புரட்சியாளர்கள்' உங்களுடைய ‘வரலாற்றுத் தவறு'களைப் பற்றி பேசுவார்கள் :).//

பெரியாரியவாதிகள், கம்யூனிஸ்ட்கள் தவிர்த்த அந்த "அடுத்த தலைமுறை புரட்சியாளர்கள்" யாரு சார், "தனக்குத்தானே குண்டு வைத்து கொண்ட தென்காசி இந்து முன்னனி கும்பலா?"

ச‌ம்பூக‌ன்

அசுரன் said...

//மேலும் பெரியார் அரசை மாற்றாமலே பார்ப்பனீயத்தை தூக்கியெறிய முடியும் என்று கருதியதையும் கூட மேலே அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார், இதற்கு காரணம் அவரது அரசியல் உருவாக்கம் நிகழ்ந்த சமயம் என்றுதான் நாம் கருத‌ வேண்டும், அதுதான் அவர் சட்டபூர்வ கிளர்ச்சியாளராக வடிவமெடுத்ததன் காரணமாய் அமைந்திருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து எழுத முயல்கிறேன்.
//


கட்டாயம் எழுதுங்கள். ஏற்கனவே சம்பூகன் தளத்தீலும் திருவினுடைய தளத்த்லும் குறிப்பிட்டிருந்தது போல ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் பெரியாரிய, கம்யுனீச சக்திகளிடையே நடந்தேறுவதை முன்னெடுக்கும் வகையில் அந்த கட்டுரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

அசுரன்

அசுரன் said...

//சாதி அடிமைத்தனத்தை சுமந்திருக்கும் ஒருவருக்கு பொருளாதார அடிமைத்தனமும் சேர்ந்தே இருக்கிறது. //

மிகச் சரி. இதில் சின்ன விளக்கம் கொடுக்கலாம் என்று கருதுகிறேன். இந்தியாவில் சாதி என்பதே வர்க்க ஒடுக்குமூறை வடிவமாகத்தான் இருககிறது. விசயம் எனன்வென்றால் அது வெறுமே பொருளாதார தளத்தில் மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை. பண்பாட்டு தளத்திலும், சமூக அந்தஸ்து என்கிற அம்சத்திலும் சாதி ஒரு தத்துவமாக/பண்பாடாக/கலாச்சாரமாக ஆதிக்கம் செலுத்துகிறது. சமூக அந்தஸ்து என்பது வர்க்கத் தன்மையை தீர்மானிக்கும் ஒரு அதி முக்கிய அம்சம் என்பதை கணக்கில் கொள்ளும் போது வறட்டுத்தனமான பொருளாதார வாதம் தவறு செய்துவிடுகிறது சாதியை பொருளாதார தளத்துடன் குறுக்கிக் கொள்கிறது இதனாலேயே பார்ப்ப்னிய எதிர்ப்பை நிராகரிக்கிறது.


பெரியாரே சொல்வது போல கம்யுனிஸத்தை தமிழகத்துக்கு கொண்டு வந்தது அன்றைய ஜீவா/பெரியார் சுயமரியாதை இயக்கம்தானே? பெரியார் அன்றைய கம்யுனிஸ்டுகளை வெறுத்தார் அதன் அடிப்படை தர்க்கம் நியாயமானது. அவர் கம்யுனிஸத்தை வெறுத்தார் என்று எங்கும் நான் படிக்கவில்லை. :-)


//இந்திய அளவில் வர்க்கம், வர்ணம் முக்கிய பிரச்சனை. வாழ்க்கையில் 'முன்னேறவேண்டும்' என்று நினைக்கிறவர்கள் முன்மாதிரியாக எடுப்பது ஒரு பார்ப்பன வாழ்க்கையை. முதலாளித்துவ, சாதி ஆதிக்க கூறுகள் நிரம்பிய பார்ப்பன வாழ்க்கை முன்மாதிரியாக இருக்கும் போது பொருளாதார விடுதலை மட்டும் இலட்சியமாக இருந்தால் நவபார்ப்பனர்களை உருவாக்கும் ஆபத்தில் தான் முடியும். அது தான் இந்திய அளவில் நடந்துகொண்டிருக்கிறது என்று கருதுகிறேன். //


சரிதான். ஏற்கனவே சாதி குறித்து மேலே சொல்லியுள்ள விளக்கத்துடன் இந்த கருத்தை பொருத்திப் பார்த்தால் பார்ப்ப்னியம் குறித்து இன்னும் தெளிவான ஒரு வரையறைக்கு வர இயலும். பார்ப்ப்னியத்திற்க்கென்று ஒரு வர்க்க இயல்பு உள்ளது என்பதுதான் அந்த வரையறை. அதனாலதான் ஒருவனுடைய பின்னணி எதுவாக இருப்பினும் அவன் இந்திய சமூக அமைபபில் தான் அங்கம் வகிக்கும் பொருளாதார-சமூக அந்தஸ்த்தின் தன்மைக்கேற்பவே பார்ப்ப்னியத்தின் பக்கம் நெருங்குவது நடக்கிறது. நவ பார்ப்பன்ர்கள் இதற்க்கான் எ-கா.

பார்ப்ப்னியத்தின் வர்க்க இயல்பு என்பது கூட்டி கொடுக்கும் தரகு புத்திதான். இதில் அதிகம் விளக்கத் தேவைட்யில்லை என்றே கருதுகிறேன். இங்கே தமிழ்மணத்தில் பார்ப்பனமணி என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் தரகு-பார்ப்ப்னிய கும்பல் கூட்டணியே இதற்க்கு உதாரணம். அரசியல் உதாரணம் எனில் வீரமணி.


//பார்ப்பனீயம் இன்று இந்துத்துவ வ்டிவமெடுத்து வழக்கம் போல ஆதிவாசி மக்கள், தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் அனைவரையும் அடியாள் படையாக சேர்த்து இயங்குகிறது. வர்க்க, வர்ண அடுக்குகளில் ஒடுக்கப்படுகிற இடத்திலிருக்கிற இம்மக்கள் ஆதிக்க நிலையிலிருக்கும் பார்ப்பனீயத்தை காப்பாற்ற 'கரச்சேவகர்கள்', 'சுயம்சேவக்கள்' என்று மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாக இந்த மூளைச்சலவைக்கு அன்றும், இன்றும், என்றும் பயன்படும் 'பதார்த்தம்' கடவுள்!//

சரியான விளக்கம்.

//பொதுவுடமை அமைப்பினர் மார்க்ஸீய அறிவியல் கோட்பாடு கொண்டு பார்க்க தவறியது தெரிந்தது. களத்தில் போராட வேண்டியவர்கள் இப்படி உணர்வுகள் அடிப்படையில் இயங்க ஆரம்பித்ததன் விளைவு தான் பார்ப்பனீயம் இன்று இந்துத்துவ வடிவத்தில் வந்து நிற்கிறது.//

யாரை பொதுவுடமை அமைப்பினர் என்று சொல்கிறீர்கள்? CPM/CPIயையா? பொதுவுடமை என்று சொல்லிக் கொள்ள நடைமுறையிலும் தத்துவத்திலும் அவர்களிடம் என்ன உள்ளது?

பெரியாரை நாங்கள் விமர்சித்தது தவறு என்று இன்று சொல்லும் அவர்கள் அது குறித்தான் சுய விமர்சனத்தையாவது முன் வைத்தார்களா?

பெரியாருக்கு உரிமை கொண்டாடும் அவர்களுக்கு உண்மையில் பெரியார் குறித்து பெரிய மரியாதையெலாம் கிடையாது. பெரியாரை ஏற்றுக் கொள்வது எனில் ஏன் பார்ப்ப்னிய எதிர்ப்பை அவர்கள் முன்னெடுக்கவில்லை?

அவர்களிடம் நிகழ்ந்துள்ள ஒரே ஒரு வளர்ச்சி என்பது: முன்னாள் போலி கம்யுனிஸ்டு என்று நிலையிலிருந்து பாசிஸ்டு என்ற நிலையை அடைந்ததுதான்.

//இந்திய சூழலில் ஒன்றோடு மற்றொன்று சார்ந்தது/ஆதரவானது. //

சார்ந்தது ஆதரவானது என்ற வார்த்தைகளே அன்னியமானது. பெரியாரை நிராகரித்துவிட்டு இந்திய சூழலில் விடுதலை இல்லை என்பதுதான் உண்மை.

அசுரன்