12 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்2

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும். (வி.22.3.43;4:2)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். (பெ.சி.மி:170)

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை. (கு.8.1.28;6:3)

கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும். (கு.8.1.28;15:1)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது? (பெ.க.மு.தொ;134)

பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை. (கு.1.3.36;11:3)

நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? (வி.1.6.68;3:5)

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி. (கு.12.8.28;10:2)

தொடரும்...

3 comments:

dondu(#11168674346665545885) said...

இந்த விஷயத்தில் நான் பெரியார் அவர்கள் கூறியதுடன் 100% ஒத்துப் போகிறேன்.

முக்கியமாக கேவலனுக்காக (ஸ்பெல்லிங் தவறு இல்லை) மெனக்கெட்டு கண்ணகி என்னும் உன்னதப் பெண்மணி பட்ட கஷ்டங்கள் கண்ணில் ரத்தம் வரவழைக்கக் கூடியவை. இந்த அழகில் கேவலன் ஓர் ஆண்டு மட்டுமே மாதவியுடன் இருந்தான் என்று ஒரு மதிப்புக்குரிய வலைப்பதிவாளர் சப்பை கட்டு கட்டுகிறார். பல ஆண்டுகள் என்று இன்னொருவர் கூறியதை இவர் ஓராண்டு என்று திருத்துகிறாராம். என்ன ஆராய்ச்சி, புல்லரிக்குதய்யா மனம்.

ஏன், கண்ணகி ஓராண்டு வெளியே சென்றிருந்தால் இவர் என்ன கூறியிருப்பாராம்?

அபாயகரமான அதர் ஆப்ஷனை வைத்திருக்கும் இப்பதிவில் இந்தப் பின்னூட்டம் இட்டிருப்பது உண்மையான டோண்டுதான் என்பதைக் காட்டும் முகமாக இதன் நகலை என்னுடைய சிலப்பதிகாரம் சம்பந்தமானத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/100.html

அதில் இப்பின்னூட்டம் வருகிறதா என்பதைப் பார்த்து மட்டும் மட்டுறுத்தல் செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

thiru said...

திருவாளர்.டோண்டு அவர்களே,

வருகைக்கு நன்றி! பல ஆண்டென்ன, ஓராண்டாய் இருந்தாலும் கோவலன் செயல் அறநெறி சார்ந்ததல்ல. தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிற ஆணாதிக்கமும் கழையப் படவேண்டியதே. பெரும்பான்மையான புலவர்களும், அவர்களது பாட்டை கேட்டு மயங்கிய மன்னர்களும் ஆண்களானதால், ஆண்கள் சார்பு கருத்துக்களாக இலக்கியங்கள் அமைந்தது வியப்பில்லை. அப்படிப்பட்ட இலக்கியங்கள், மூடப்பழக்கங்கள், மதங்களின் கோட்பாடுகள், புராணக்கதைகள், இதிகாசங்கள், காவியங்களை கேள்விகளால் துளைத்து தமிழ்ச் சமுதாயத்தை சிந்திக்கவைத்தவர் பெரியார். அதில் அவர் தனித்துவமானவர்.

எல்லோரும் எல்லா விடயத்திலும் யாருடனும் உடன்பட முடியாது. அது ஒவ்வொருவருடைய பின்னணி, நம்பிக்கை, ஏற்றுக்கொள்கிற கொள்கையை பொறுத்தது. அந்த விடயத்தில் பெரியாரிடம் உங்களுக்கு பிடித்ததாக எது இருக்கிறதோ அதை நீங்கள் ஏற்பதை நான் விமர்சிக்கவில்லை.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

Muthu said...

திரு,

நன்று.

பெரியாரை ஒன்றும் தெரியாத பாமரர் என்ற ரேஞ்சிற்கு பேசுபவர்கள் இருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த மாதிரியான பதிவுகள் தேவைப்படுகின்றன.