16 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்4

தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது. (வி.15.4.61;1:பெ.செ)

இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் செல்வமும் நாகரிக அறிவும் கவுரவம் உள்ள சுற்றத்தாருக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டுக் கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்? (பெ.சி.மி.187)

நமக்கு பெண்கள் தங்களைப் பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். (வி.22.3.43;3:4)

பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும்.(கு.5.6.48;14:2-3)

கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள். (கு.29.9.40;15:3)

தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. (வி.11.10.48;3:2)

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். (கு.1.5.27;5:3)

இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்?(கு.3.11.29;8)

(தொடரும்)

2 comments:

Anonymous said...

பெரியார் செத்துப்பூட்ட பின்னாடி, இந்த மணியம்மை என்னாத்துக்கு ரெண்டாம் கலியானம் பண்ணிக்கலை நைனா?

Unknown said...

//முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான்//