05 February 2008

கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக? - பெரியார்

சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்து கொண்டு, "சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்' என்று பழி சுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு "அவைகள் அவசியம் இருக்க வேண்டும்' என்றும் "அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்' என்றும், "சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை' என்றும் "ஓவியக் கலை அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் சொல்லுகின்றார்கள்.

நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் இருப்பதையும் காணலாம்.

எப்படியெனில், இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவைகளில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்றும் சொல்ல வேண்டும்.

சாதாரணமாக மனிதனும் மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும்; 4 கைகளும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு முகங்களும்; சிறிய உருவத்தின் மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் பூவின் மீது ஒரு பெண் நிற்பதும், இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.

சாதாரணமாக, மேல் நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா, உண்மைத் தோற்றமா என்று மருளும்படியாகவும், அவைகளுடைய சாயல் முதலியவைகளிலிருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படியாகவும், அவைகள் பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச் சாதாரண தன்மையில் அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் கொள்ளும்படியாகவும் இருப்பதைக் காணலாம்.

ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங்களையும், புதுமைகளையும் விட்டு விட்டு அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமுமான, மிருகப் பிராயமும் கொண்டதான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து, கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக் கொண்டு, "ஓவியக் கலைக்காக அக்கலையைக் காப்பாற்றுவதற்காக அவைகளிடம் இப்படிச் செய்கின்றோம்' என்றால், இது பகுத்தறிவும் யோக்கியக் குணமும் அடைந்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.

இந்த இடத்தில் நாம் முக்கியமாய்க் குறிப்பிடுவது என்னவென்றால், நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், புத்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான காவியங்களும் ஓவியங்களுமல்லாமல் வேறுவகை ஒன்றில்லாமல் போனதால், அவர்கள் இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும் வஞ்சகத்தையும் சொல்லிக் கொண்டு, இவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆகவே, இம்மாதிரி பாசமும் அநாகரிகமுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்பட வேண்டுமானால், முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை நலத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டியது, பகுத்தறிவையும் நாகரிகத்தையும் விரும்பும் பொதுமக்கள் கடமையேயாகும்.

'குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா 26.4.1931ல் எழுதிய கட்டுரை

4 comments:

Anonymous said...

பெரியார் உளறிக்கொட்டியிருக்கிறார்.
இந்திய ஒவிய,சிற்பக் கலைகளை உலகமே வியந்து பாராட்டுகிறது.
மேற்கின் ஒவிய மரபுதான் ஒரே ஒவிய
மரபு என்பதை இன்று ஒவிய விமர்சகர்கள் ஏற்பதில்லை.மேற்கின் சிறந்த கலைஞர்கள் கூட பிற மரபுகளிலிருந்து பலவற்றைக் கற்றிருக்கிறார்கள், பாராட்டியிருக்கிறார்கள்.
பெரியாரின் உளறலை 2008ல் வேதவாக்காக எடுத்துப் போடும் நபர்
பெல்ஜியத்தில் இருந்தாலும் கலைகள்
குறித்து ஏதும் அறியாத ஞான சூன்யமாக இருக்கிறார். அவர் அருங்காட்சியங்களுக்குப் போவதோ அல்லது கலைகள் குறித்து படிப்பதோ
இல்லை போதும்.

சுந்தரவடிவேல் said...

பொதுமக்களின் தானியங்கள் உட்பட அவசர ஆபத்துக் காலங்களில் பயன்படுத்திக் கொள்வதற்காக இருந்த/இருக்கும் அமைப்பே கோயில்கள். இதுவே கலைகளை (அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட கலைகளை) பாதுகாக்கும் இடமாக மாறியது. இதனைச் சரியாகக் கவனித்து //இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல வேண்டும்.// என்கிறார் பெரியார். அவரை ஓவியங்களுக்கோ, கலைகளுக்கோ எதிரானவராகவோ அல்லது மேலைநாட்டு ஓவியங்களை மட்டுமே புகழ்ந்து வாயைப் பிளக்கும் டாலர் அடிமையாகவோ பார்க்க இயலாது. மக்களின் கலைகள் மக்களை விட்டு, மாட மாளிகைகளிலும், கூட கோபுரங்களிலும் ஏறி உட்கார்ந்து கொள்வதைத்தான் எதிர்த்தார். தந்தை பெரியார் தமிழிசையை மீட்டெடுக்க உழைத்ததைப் பலரும் அறியாமல் இருக்கலாம். 'இந்திய'க் கலை வடிவங்களைப் பார்த்து வாயைப் பிளக்கும் மேல்நாட்டுக் காரர்களுக்கு இன்னும் வெளிவராமல் அமுக்கப்பட்டுக் கிடக்கும் பழங்கலைகளையும் வெளியே எடுத்துக் காட்டினால் இன்னும் வாயைப் பிளப்பார்கள். மாற்று மரபுகளை மேல்நாட்டவர்கள் பார்த்துக் கற்றுக் கொள்வதுபோல 'இந்திய' மரபு கற்றுக் கொள்ளக் கூடாதா? அல்லது வெறுமனே பார்க்கக் கற்றிருந்தால்கூட உசேனின் ஓவியங்கள் பல இன்று உயிரோடு இருந்திருக்கும்.
பதிவுக்கு நன்றி திரு.

Anonymous said...

அல்லது வெறுமனே பார்க்கக் கற்றிருந்தால்கூட உசேனின் ஓவியங்கள் பல இன்று உயிரோடு இருந்திருக்கும்.

------------------------------
ஐயா, அவர் ஒவியங்களை எதிர்ப்பவர்கள் ஒரு சிலர்தான்.
பெரியார் சொன்னதை வைத்துப்
மதிப்பிட்டால் உசேன் ஒவியரே
அல்ல.உசேன் ஒவியத்தில் மரபின்
தாக்கம் உண்டு.பெரியாரைப் மூடத்தனமான பின்பற்றுவோருக்கு
அதெல்லாம் புரியாது.உசேனை இந்த்துவா ஆசாமிகள் எதிர்ப்பதால்
ஆதரிப்போம் என்று நீங்கள் ஆதரிக்கிறார்களோ
என்ற ஐயம் இருக்கிறது.மற்றப்படி
பெரியார் கூறியிருப்பதை இன்று
குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாம்.

thiru said...

கருத்துக்களுக்கு, வருகைக்கும் நன்றி சுந்தரவடிவேல்!

இரண்டு அனானிகளுக்கும்,

விதிவிலக்கான சில படைப்பாளிகளின் படைப்புகளை தவிர, நமது ஓவிய, சிற்பக்கலைகள் பிள்ளையார் சிலைகளையும், கண்ணன் லீலைகளையும் வடிப்பதில் சிறைபட்டு கிடப்பது இழப்பாக தெரியவில்லையா?

இப்படிப்பட்ட சிந்தனை சிறையிலிருந்து படைப்புலகம் விடுபட்டால், மக்களின் கலைகள், வாழ்வு, உழைப்பு, கொண்டாட்டங்கள், வலிகள்... படைப்புகளாக இப்போது இருக்கும் நல்ல பல படைப்புகளை விட இன்னும் அதிகமாக வெளிவரும்.

'வளரும் இந்தியா' நவரத்தினங்களால் பிள்ளையார், கண்ணன் சிலைகள் செய்வது, இருளில் ஒளிரும் பிள்ளையார் என்று ஜிகினாத்தனங்களில் சிறையாக இருக்க காரணமென்ன என்று சிந்தித்தால் பெரியார் சொல்வதன் உண்மை புரியும்.